1. விவசாய தகவல்கள்

மீனவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்| மூலிகை தோட்டம் 50% மானியம்| TN Budget தேதி அறிவிப்பு!

Deiva Bindhiya
Deiva Bindhiya

மீன்பிடித் தொழிலில் அத்துமீறல்கள் குறித்து மீன்வளத் துறை நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்து, ராமேஸ்வரத்தில் மீன்பிடித் துறைக்கு ரோந்துப் படகுகள் வாங்க நிதி திரட்டக்கோரி பிச்சை எடுக்கும் போராட்டத்துக்கு மீன்பிடித் தொழிலாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

தேவாலயங்கள், கோயில்கள், மசூதிகள் முன்பு நடைபெறும் இந்த நூதனப் போராட்டத்தில் மீனவர்கள் கலந்துகொண்டு, பிச்சை எடுத்து வசூலிக்கும் பணத்தை, படகுகள் வாங்குவதற்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படும் என, சங்கம் தெரிவித்துள்ளது. விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழ்நாடு கடல் மீன்பிடி சட்டத்தின் பெரும்பாலான விதிகளை மீறுவதாக CITU சங்கம் புகார் அளித்தும், மீன்வளத்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இந்த விதிமீறல்களைக் கண்காணிக்க ரோந்துப் படகு கூடத் துறையிடம் இல்லை என்பது பெரும் இடையூறாக உள்ளது என்று சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி தெரிவித்தார், எனவே, இந்த போராட்டத்தை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

மூலிகை தோட்டம் அமைக்க 50% மானியம்: செடிகள் முதல் குரோ பேக் வரை பெறலாம்!

2022-23ம் நிதியாண்டில் தோட்டக்கலைத்துறை மூலம் வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க, மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மூலிகை தோட்டம் அமைக்க, 1,500 ரூபாய் மதிப்பில் துளசி, கருவேப்பிலை, கற்றாழை, கற்பூரவள்ளி, புதினா, வல்லாரை, திப்பிலி, பிரண்டை, லெமன்கிராஸ் மற்றும் இன்சுலின் ஆகிய பத்து வகையான மூலிகை செடிகளும், செடிகள் வளர்ப்பதற்கான செடிகள் வளர்ப்பு பைகள் 10 எண்கள் (Grow Bag), 20 கிலோ தென்னை நார் கட்டிகள் (COCO Peat), 4 கிலோ மண் புழு உரம் ஆகியன அடங்கிய தொகுப்பு, 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளோர் www.tnhorticulture.gov.in/kit.new என்ற இணையதளத்தில் பதிவு செய்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் செலுத்திட அறுவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மூலிகை தோட்டம் அமைக்க 50% மானியம்: 10 செடிகள் முதல் குரோ பேக் வரை பெறலாம்!

மார்ச் 20 தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு!

தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வருகின்ற மார்ச் 20-ம் தேதி சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 2023- 24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். மேலும் எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்பதை அலுவல் குழு முடிவு செய்யும் என்று அப்பாவு கூறினார். மேலும் அதிமுக இருக்கை விவகாரத்தில் ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் 28ம் தேதி முன்பண மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

மிளகாய் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தோட்டக்கலை துறை ஆலோசனை

திண்டுக்கல் மாவட்டத்தில் மிளகாய் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள தோட்டக்கலைத்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 1,700 எக்டர் பரப்பளவில் மிளகாய் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக மிளகாய் செடியில் சாம்பல் நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். இந்த நோயை கட்டுப்படுத்த, வயலைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சரியான இடைவெளியில் பயிர் செய்ய வேண்டும். நோயின் ஆரம்ப அறிகுறியின்போது, நனையும் கந்தகம் 0.25 சதவீதம் 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். போஸ்டைஸ் அலுமினியம் 2.5 கிராம்/லிட்டர் அல்லது டினோகார்ப் 2.50 மில்லி/ லிட்டர் (அல்லது) பிப்ரோநில் 2 மில்லி / ஜிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளித்தல் போன்ற, இந்நோயின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள விவசாயிகளை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க: மிளகாய் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தோட்டக்கலை துறை ஆலோசனை

OUAT ஏற்பாடு செய்த உழவர் கண்காட்சி 2023

ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் OUAT ஏற்பாடு செய்த உழவர் கண்காட்சி-2023 இன்று இரண்டாவது நாளை எட்டியது. இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட இந்த உழவர் கண்காட்சி தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வருகிறது. முதல் நாளில் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். மாநிலத்தின் அனைத்து தரப்பு விவசாயிகளும் விவசாயம் தொடர்பான புதிய தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொள்ளவும், அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும் இந்த கண்காட்சி வாய்ப்பளித்துள்ளது. இதனுடன், பல விவசாய நிறுவனங்கள், தொழில் முனைவோர் விவசாயிகள் மற்றும் சுயஉதவி குழுக்களின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் பல்வேறு ஸ்டால்கள் மூலம் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர். எனினும் நேற்றைய தினம் போலவே இரண்டாவது நாளான இன்றும் இவ்விழா வெற்றியடையும் என அனைவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நாகாவதி அணையிலிருந்து 2ஆம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், எர்ரப்பட்டி கிராமம், நாகாவதி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக 28.02.2023 முதல் 08 ஜுன் 2023 வரை 100 நாட்களுக்கு, முறை வைத்து, அதாவது முதல் 5 நாட்களுக்கு ஒரு மண்டலத்திற்கும், அடுத்த 5 நாட்களுக்கு இரண்டாவது மண்டலத்திற்கும் தண்ணீர் விட்டு, பின்னர் 5 நாட்களுக்கு நிறுத்தியும், மொத்தம் 7 நனைப்புகளுக்கு 120.40 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. சின்னம்பள்ளி மற்றும் பெரும்பாலை கிராமத்திலுள்ள 1993 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

தோல் அம்மை நோயினால் தொழில் பாதிப்பு- தர்மபுரி மாவட்ட விவசாயிகள் வேதனை

தர்மபுரி மாவட்டத்தில் கால்நடை வியாபாரம் மற்றும் பால்பண்ணை தொழிலை பாதித்துள்ள தோல் அம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணியை கால்நடை பராமரிப்புத்துறை மேம்படுத்த வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில், தர்மபுரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கைகால்வாய் நோயிற்கான (Foot and Mouth Disease- FMD) தடுப்பூசிகளை வழங்குவதற்காக மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் தடுப்பூசி இயக்கம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் 3,84,871 கால்நடைகளுக்கு 100% தடுப்பூசிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய, கால்நடைத்துறை சார்பில் சுமார் 3,46,000 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது. FMD தடுப்பூசி இயக்கத்தை விவசாயிகள் வரவேற்கும் அதே வேளையில், கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் அம்மை நோயினை கட்டுப்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று கடைசி நாள்: EB ஆதார் இணைக்க

தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை அரசு கட்டாயமாக்கி கடந்த 2 மாதங்களாக செயல்படுத்தி வந்தது. இலவச மின்சாரம், மானிய விலை மின்சாரம் பெறுபவர்கள் என அனைத்து பயனர்களும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்தது. இதற்காக அரசு சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மின் நுகர்வோர் குறித்த முறையான தகவல்களைப் பெறும் நோக்கில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் நடைமுறையை அரசு கொண்டு வந்தது. நேரடியாக மின் வாரிய பிரிவு அலுவலகம் சென்றும், ஆன்லைன் மூலமாகவும் இணைக்கும் படி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும் இதற்கான கால அவகாசம் இன்று (பிப்ரவரி 28) வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டது. இதுவரை 99 சதவீதம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:

இடைத்தரகர்கள் இல்லாமல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வேண்டுமா? இதோ விவரம்!

விவசாயிகள் கருத்து கேட்பு| மிளகாய் வற்றலுக்கு விலை முன்னறிவிப்பு| CM திடீர் விசிட்

மீனவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்| மூலிகை தோட்டம் 50% மானியம்| TN Budget தேதி அறிவிப்பு!
Fishermen's begging Protest| Herb Garden at 50% Subsidy|TN Budget Date Announcement!
English Summary: Fishermen's begging Protest| Herb Garden at 50% Subsidy|TN Budget Date Announcement! Published on: 28 February 2023, 02:04 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.