MFOI 2024 Road Show
 1. வாழ்வும் நலமும்

தமிழகத்தில் தாண்டவம் ஆடும் டெங்கு- கட்டுப்படுத்த வழி என்ன?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
control the fast spreading dengue

தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாகவே அநேக இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதோடு கொசுக்களினால் உண்டாகும் டெங்கு காய்ச்சலின் தாக்கமும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெங்கு பரவலை தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் சில அறிவுறுத்தல்கள் அரசின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-

 • டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யக்கூடிய மழைநீர் தேங்கக்கூடிய பழைய பொருட்கள், உடைந்த பொருட்களை கண்டறிந்து அவற்றினை அப்புறப்படுத்த வேண்டும்.
 • மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நபர்களை கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதுடன், உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல்களை பதிவேற்றம் செய்திட வேண்டும். தனியார் மருத்துவமனைகளும் இதுக்குறித்த விபரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
 • அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுடன் வரும் அனைத்து நோயாளிகளின் பெயர், முகவரி, தொலைபேசி எண் பதிவு செய்திட வேண்டும். உள்நோயாளிகளுக்கு தனியாக காய்ச்சல் மற்றும் டெங்கு வார்டுகள் ஏற்படுத்தவும், தேவைப்படும் பட்சத்தில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், வார்டுகளில் கொசு வலைகள் பயன்படுத்தவும், மருத்துவமனை வளாகம் முழுவதும் கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கைகளை தூய்மை பணியாளர்கள் மூலம் வாரந்தோறும் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 • மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்துகள், காய்ச்சல் பரிசோதனைக்கான ஆய்வக உபகரணங்கள் கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.
 • கிராம பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு ஏதேனும் இருந்தால் உள்நோயாளிகள், வெளிநோயாளிகள், காய்ச்சல் பாதித்த பகுதிகள், வயிற்றுப்போக்கு, டைபாய்டு மற்றும் தொற்றுநோய் உள்ளவர்களின் விபரங்களை அறிந்து உடனடியாக பொது சுகாதாரத்துறையுடன் இணைந்து, கொசுப்புழு மருந்து தெளிக்கும் பணியினை துரிதப்படுத்த வேண்டும்.
 • காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டால் பொதுமக்கள் தாங்களாகவே சுயமாக மருந்துகள் உட்கொண்டு சிகிச்சை எடுக்காமல், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
 • கிராமங்களில் தினந்தோறும் சேரும் குப்பைகள் (நெகிழிப்பொருட்கள்(பிளாஸ்டிக்), தேங்காய் சிரட்டைகள், டயர்கள் மற்றும் பல) அப்புறப்படுத்தி, குப்பைகளில் எந்த சூழ்நிலையிலும் மழைநீர் தேங்காத வகையிலும், கழிவுநீர் வாய்க்கால்களில் கழிவுநீர் தேங்காத வகையிலும் பராமரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 • அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் பொது இடங்கள், அரசு அலுவலக வளாகங்கள், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்கள், கோயில் திருவிழாக்கள் நடைபெற்று முடிந்த இடங்கள், போக்குவரத்து பணிமனைகள், உணவு விடுதிகளில் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காத வகையிலும், கொசு உற்பத்தியாகாமலும் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
 • கிணறு மற்றும் டேங்கர் வாகனங்கள் மூலமாக விநியோகிக்கப்படும் தண்ணீர் குளோரின் கலந்து விநியோகிக்கப்படுகிறதா என்பதை களப்பணியாளர்கள் முறையாக உறுதிப்படுத்த வேண்டும்.
 • குடிநீர் விநியோகிக்கப்படும் தொட்டிகள், குடிநீர் குழாய்கள் போன்றவற்றில் உடைப்போ, பழுதோ இருக்கும்பட்சத்தில் தண்ணீர் வீணாவதுடன், கொசுப்புழு உற்பத்தியாகி நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், போர்க்கால அடிப்படையில் சீரமைத்திட வேண்டும்.
 • டெங்கு பாதித்த பகுதியில் வட்டாரத்தில் உள்ள அனைத்து களப்பணியார்களையும் களப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஒரு குழுவில் 3 முதல் 5 களப்பணியாளர்கள் இருக்கும்படி தேவைப்படும் குழுக்களை நியமித்து, ஒவ்வொரு குழுக்களும் சுமார் 150 வீடுகள் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
 • களப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தங்களுடன் டார்ச், அபேட், கையுறை, மழைநீர் தேங்கக்கூடிய தேவையற்ற பொருட்களை எடுக்க கோணி சாக்கு, சாக்பீஸ் மற்றும் குறிப்பேடு எடுத்துச் செல்ல வேண்டும். வீடுகளில் யாருக்காவது காய்ச்சல் உள்ளதா என்பதையும் கேட்டறிய வேண்டும்.
 • கொசுப்புழு மருந்து ஊற்றும் வீடுகளில் அனைத்து வகையான தண்ணீர் தொட்டிகளையும் நன்றாக ஆய்வு செய்ய வேண்டும். தண்ணீர் குறைவாக உள்ள தொட்டிகளை காலி செய்துவிட்டு, அதை நன்றாக பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தி கழுவி, அதன்பின் பயன்படுத்தவும்.
 • தண்ணீர் தொட்டிகளை காற்றுப்புகாத வண்ணம் மூடி வைத்து பயன்படுத்தவும், வீட்டிற்குள் கொசுப்புழு வளரா வண்ணம் சுத்தமாக வைத்திருக்கவும், வீட்டை சுற்றுயுள்ள தண்ணீர் தேங்கும் தேவையற்ற பொருட்களை அகற்றவும் பொதுமக்களிடம் அறிவுறுத்த வேண்டும்.
 • பூட்டப்பட்ட வீடுகளை கணக்கிட்டு அன்று மாலையோ அல்லது அடுத்தநாள் அதிகாலையோ சென்று ஆய்வு மேற்கொள்வதுடன், கொசுப்புழு அடர்த்தி முற்றிலும் குறையும் வரை களப்பணியாற்றிட வேண்டும். டெங்கு பாதித்த பகுதிகளில் காலை மற்றும் மாலை என 3 நாட்களுக்கு உள்புற மற்றும் வெளிப்புற முதிர்கொசு ஒழிப்பிற்கு காலை 8 மணி முதல் 11 மணிக்குள்ளும், மாலை 3 மணி முதல் 5 மணிக்குள்ளும் புகை மருந்து அடிக்கும் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்களோடு, பொதுமக்களும் சுயமாக தங்களது இருப்பிடத்தை சுகாதாரமான முறையில் பேணுவது தான் வரும் மழைக்காலத்தில் டெங்கு பரவலின் வேகத்தை கட்டுப்படுத்த இயலும் என்பதை நினைவில் கொள்க.

மேலும் காண்க:

PM Kisan விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? இதை பண்ணுங்க உடனே

ஆந்திர கடலோரம் புதிய ஆபத்து- 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

English Summary: the way to control the fast spreading dengue in Tamil Nadu Published on: 26 September 2023, 03:14 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.