MFOI 2024 Road Show
 1. தோட்டக்கலை

வாசனை கமழும் வசம்பு- சாகுபடி செய்ய எளிய வழிகள்!!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

இந்த பொருளின் பெயரை வெளியே சொல்லவே மாட்டார்கள். ஆனால் இதன் அருகே சென்றாலே அதன் மணம், நம்மைக் கவர்ந்து இழுக்கும். கமழும் நறுமணம் மிகுந்தது என்பதாலேயே இதனை ''பெயர் சொல்லாதது'' என்று கூறுவது கிராமப்புறங்களில் வழக்கம்.

குறிப்பாக இதனை நூலில் கோர்த்து, வளையலாகப் பிறந்த குழந்தைகள் கையில், அணிவிப்பார்கள். தங்கம், வைரம் என்ற எத்தகைய விலைஉயர்ந்த ஆபரணங்களைக் குழந்தைக்கு அணிவித்திருந்தாலும், இந்த காப்பை எந்தக் காரணம் கொண்டும் தவிர்க்கமாட்டார்கள். ஏனெனில் வசம்பில் உள்ள மருத்துவ குணம், குழந்தையின் ஆரோக்கியத்திற்கு துணை நிற்கிறது.

இந்திய மருத்துவத்தில் வசம்பு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சித்த மருத்துவத்தில் வசம்பு பல விதங்களில் பயன்படுகிறது. இது நீர்பிடிப்புள்ள காடுகளில் இயற்கையாகவே வளர்கின்றது.

வசம்பை எவ்வாறு பயிரிடுவது என்பது குறித்து பார்ப்போம்.

வசம்பு

இஞ்சியின் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தது வசம்பு. இவை 60 முதல் 90 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக் கூடியவையாகும். வசம்பு வேர்கள் 50 முதல் 60 கிராம் வரை எடைகொண்டவை. வேர்கள் மஞ்சள் கிழங்கினைப் போன்று நெருக்கமான கணுக்களைக் கொண்டவை. சுமார் ஒரு மீட்டர் அகலம் வரை வேர்கள் படரும் தன்மை படைத்தவை. பக்க வேர்களும் மிக வேகமாக வரும் தன்மை வாய்ந்தவை.

Credit:justdial

வசம்பு வேர்களுக்கு வெளிநாடுகளில் அதிகளவில் தேவை இருந்து வருகிறது. தற்போது கேரளாவில் சுமார் 200 எக்டர் பரப்பளவிற்கு மேல் சாகுபடி செய்யப் பட்டு வருகிறது.

மண்(Cultivation Land)

களிமண் மற்றும் நீர்பிடிப்புள்ள மண் வகைகள், வசம்பு பயிரிடுவதற்கு மிகவும் ஏற்றவை. வசம்பு வேர் அல்லது கிழங்குகளை விதைப்பதற்கு பயன்படுத்தலாம். ஹெக்டருக்கு 1500 கிலோ வரைக் கிழங்கு தேவைப்படும்.

நீர் மேலாண்மை(Water Management)

குறிப்பாக நீர்க்கசிவு உள்ள இடங்களைத் தேர்வு செய்து ஒரு ஹெக்டருக்கு 25 டன் தொழு உரமிட்டு, மண்ணில் தண்ணீர் தேங்கும் வகையில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். சேற்று உழவு செய்து பண்படுத்துவது நல்லது.

விதைக்கிழங்குகளை 30 சென்டிமீட்டர் இடைவெளியில் நேர்கோடுகளில் விதைக்க வேண்டும். வரிசையில் விதைக்கப் பட்ட கிழங்குகள், அடுத்த வரிசையில் விதைத்த கிழங்குகளுக்கு நேராக இல்லாமல், அதாவது, இரண்டு கிழங்குகளுக்கும் மையமாக விதைக்க வேண்டும். இதனால் வேர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

உரம்(Fertilizers)

ஹெக்டருக்கு 10 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 60 கிலோ சாம்பல்சத்து தரவல்ல உரங்களை அடியுரமாக விதைப்பதற்கு முன் இடவேண்டும். விதைத்த நான்காவது மற்றும் எட்டாவது மாதத்தில் 10 கிலோ தழைச்சத்து உரத்தை மேலுரமாக இடவேண்டும். மண்ணில் எப்போதும் ஈரத்தன்மை இருக்குமாறு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். விதைத்த முதல் இரண்டு மாதங்களுக்கு 5 சென்டி மீட்டர் உயரம் வரை தண்ணீர் நிறுத்தப்பட வேண்டும்.பிறகு 10 சென்டிமீட்டர் உயரத்திற்கு தண்ணீர் நிறுத்த வேண்டும். 

களை எடுத்தல்

முதலில் விதைத்த ஒரு மாதத்திலும், பிறகு இரண்டு மாதங்கள் இடைவெளியிலும் ஐந்து அல்லது ஆறு முறை களை எடுப்பது நல்லது. ஒவ்வொரு முறையும் களை எடுக்கும் போது, வரும் வசம்பு வேர்களை காலால் மிதித்து ஆழமாக மண்ணில் அழுத்திவிட வேண்டும். இதனால் கிழங்குகளின் வளர்ச்சியினை துரிதமடையச் செய்யலாம்.

பூச்சித் தாக்குதல்

மாவுப்பூச்சிகள் இலைகளையும் வேர்களையும் அதிகளவில் தாக்கக்கூடிய ஆபத்து உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த ஒரு மில்லி லிட்டர் மீத்தைல் பாரத்தியான் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகளின் மீது தெளிக்க வேண்டும். வேரில் உள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்த 2 மில்லி லிட்டர் குவினைல்பாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர் நனையும்படி ஊற்ற வேண்டும்.

அறுவடை (Harvesting)

விதைத்த ஓராண்டில் வேர்களை அறுவடை செய்யலாம். அறுவடை செய்வதற்கு முன் வயலில் உள்ள நீரை வடித்து மண்ணை சிறிதளவு காயப்போட வேண்டியது அவசியம். பிறகு இலைகள் பழுப்பு நிறமாக மாறிக் காய்ந்துவிடும். அப்பொழுது 60 சென்டிமீட்டர் ஆழத்தில் 60 முதல் 90 சென்டிமீட்டர் வரை அகலமாக வளர்ச்சி பெற்றிருக்கும்.

மண்ணைத் தோண்டி கிழங்கு மற்றும் வேர்களை அறுவடை செய்யலாம். இந்த சமயத்தில் கிழங்குகள் மண்ணிற்கடியில் வேர்களை கவனமாகத் தோண்டி எடுத்து 5 முதல் 7 சென்டி மீட்டர் நீளத்தில் வெட்ட வேண்டும். சல்லி வேர்கள் அனைத்தையும் நீக்கிவிட வேண்டும். தண்ணீரில் கிழங்குகளைக் கழுவி வெயிலில் உலர்த்த வேண்டும். உலர்த்தப்பட்ட கிழங்குகளின் மேல் உள்ள செதில் பகுதியை நீக்குவதற்காக சாக்குப்பையில் போட்டு நன்றாகத் தேய்க்க வேண்டும்.


மகசூல்

ஒரு ஹெக்டருக்கு சராசரியாக 10 டன் உலர்ந்த கிழங்குகள் வரை மகசூல் கிடைக்கும்.

வசம்பின் பயன்கள் (Benefits of Vasambu)

 • பாட்டி வைத்தியத்தில் தவறாமல் இடம்பெறுவதில் இந்த வசம்பும் ஒன்று.

 • காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்ட வசம்பு உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.பசியை உண்டாக்கும். வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிறு கனமான உணர்வு போன்றவற்றுக்கு மருந்தாகும்.

 • வசம்பு எப்படிப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் முறிக்கக் கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம்.

 • வசம்பை தூள் செய்து, இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

 • விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் வசம்பைக் கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.

 • வசம்பைச்சுட்டு, கரியைத் தேனில் குழைத்து, குழந்தைகளின் நாக்கில் பூச, நன்றாகப் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, பேதி கட்டுப்படும்.

 • காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்கப்படுகிறது.

  மேலும் படிக்க...

  நோய் நொடி தீர்க்கும் அற்புத மூலிகைச் செடிகளும், மருத்துவ குணங்களும்!

  சிக்கன் பிரியர்களா நீங்கள்..? உங்களுக்காக வருகிறது ஆர்கானிக் சிக்கன்!மே

English Summary: More benefits of Acoruscalamus and its Cultivation Published on: 08 July 2020, 05:38 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.