1. செய்திகள்

விஜி டூ கேப்டன்- தேமுதிக கட்சி அலுவலகத்திலேயே விஜயகாந்த் உடல் நல்லடக்கம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Vijayakanth

தேமுதிக கட்சியின் நிறுவனரும் & நடிகருமான விஜயகாந்த் சென்னையில் வியாழக்கிழமை (இன்று) காலமானார். அவருக்கு வயது 71. விஜயகாந்த் மறைவினையடுத்து திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இன்றும், நாளையும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள், திரையுலக பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். 50 வருடங்களாக தமிழக அரசியலில் அசைக்க முடியாமல் வலம் வரும் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக பல கட்சிகள் தோன்றினாலும் தேமுதிக மிக வலுவான கட்டமைப்புடன் தனித்து இயங்கியது. விஜயகாந்தின் உடல்நலக்குறைவு, உள்கட்சி பூசல் போன்றவற்றால் அரசியல் களத்தில் தன் செல்வாக்கை படிப்படியாக இழந்தது குறிப்பிடத்தக்கது.

திரையுலகம் தாண்டி, பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என அனைவராலும் கேப்டன் என்று பட்டப்பெயருடன் அன்போடு அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். இவரின் 100-வது திரைப்படமான “கேப்டன் பிரபாகரன்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த பட்டப்பெயர் அவரது அடையாளமாக மாறியது.

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்ட நிலையில், விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த். இத்தேர்தலில் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிகவைச் சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

2011 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில், தேமுதிக கட்சி வரலாறு படைத்தது. திமுகவை விட அதிக இடங்களில் தேமுதிக வெற்றி பெற்ற நிலையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தார். அதன்பின் உடல் நலப்பிரச்சினைகள் தொற்றிக் கொள்ள அரசியல் களத்தில் பெரும் சரிவை சந்தித்தார்.

Read more: கீழே இறங்காத தங்கத்தின் விலை- ரூ.6000-த்தை கடந்தது கிராம்

கடந்த 4-5 ஆண்டுகளாக விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவரது மனைவி பிரேமலதா கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி சென்னையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். கடந்த சில வருடங்களாகவே அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் போன்ற இடங்களில் மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார் விஜயகாந்த்.

தமிழ் சினிமாவில் 157 படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், தமிழ் திரையுலக நடிகர்கள் சங்கத் தலைவராக சிறப்பாக செயல்பட்டு அனைவரின் பாரட்டையும் பெற்றார். 1984-ல் மட்டும் 18 தமிழ் படங்களில் நடித்து அமர்களப்படுத்தினார்.

விஜயகாந்தின் மறைவினைத் தொடர்ந்து, அவரது இல்லம் மற்றும் கட்சி அலுவலகத்தில் தேமுதிக கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் காண்க:

தென்காசி மாவட்டத்தில் பயிர்ச்சேதம் எவ்வளவு? அமைச்சர் சொன்ன தகவல்

English Summary: Captain Vijayakanth body will be cremated tomorrow at the DMDK office Published on: 28 December 2023, 12:17 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.