MFOI 2024 Road Show
  1. செய்திகள்

இரக்கமில்லாத இயற்கை- கேப்டன் விஜயகாந்த்தின் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
captain Vijayakanth

தேமுதிக கட்சியின் நிறுவனரும் & நடிகருமான விஜயகாந்த் சென்னையில் வியாழக்கிழமை (இன்று) காலமானார். அவருக்கு வயது 71. அவரின் மறைவினையடுத்து திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் விஜயகாந்த்தின் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை செலுத்தினார்.

கடந்த 4-5 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த விஜயகாந்த், நுரையீரல் அழற்சி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் இன்று காலை காலமானார். பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மனம் உருகி இரங்கற் குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு விவரம் பின்வருமாறு- “நல்ல உள்ளத்திற்குச் சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர். நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர்.

தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் தலைவர் கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்களின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர்.

தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலன் குன்றியிருந்தபோது, நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன், தலைவர் கலைஞர் மறைவெய்ந்தியபோது, வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலைத் தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராகச் சென்னை கடற்கரையில் உள்ள தலைவர் கலைஞரின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது.

தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த் அவர்களுடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில், கலைஞர் எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது. அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை.

நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது.

விஜி டூ கேப்டன்- தேமுதிக கட்சி அலுவலகத்திலேயே விஜயகாந்த் உடல் நல்லடக்கம்

கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, கேப்டன் விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், இரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஜயகாந்த் அவர்களுக்கு  அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இன்றும், நாளையும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள், திரையுலக பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: கடும் மூடுபனியால் பார்வைத்திறன் ஜீரோ- ரெட் அலர்ட் விடுத்த IMD

English Summary: TamilNadu CM MKStalin paid last respects to captain Vijayakanth Published on: 28 December 2023, 12:55 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.