
Chennai Day Celebration
சென்னை தினத்தையொட்டி, எலியட்ஸ் கடற்கரையில் 'நம்ம சென்னை, நம்ம பெருமை' என்ற உணர்வுடன் கொண்டாடப்படும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை தினம் (Madras Day)
சென்னை பட்டினம் 1639 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, 383 ஆண்டுகளில் சென்னை மாநகரமாக பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மெட்ராசாக இருந்த சென்னையை கொண்டாடும் வகையில், மாநகராட்சி சார்பில் இன்று மற்றும் நாளை, இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து, 'சென்னை தினம்' கொண்டாடப்பட உள்ளது. அதன்படி, பெசன்ட் நகர், எலியட்ஸ் சாலையில் மாலை 3:30 மணி முதல் 11:30 மணி வரை பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இந்த நிகழ்ச்சியில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்றவற்றுடன், உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மரக்கன்றுகள் நடும் பணியும், மாநகராட்சி பள்ளிகளில் ஓவிய போட்டி, புகைப்பட போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த தினத்தை கொண்டாட பிரத்யேகமாக பாடல் ஒன்றும் வெளியிடப்பட உள்ளது.
மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்கள், இயற்கை உர விற்பனைக்கான கடைகள் அமைக்கப் பட உள்ளன. பொதுமக்கள் தங்கள் கைபேசிகளில் புகைப்படங்கள் எடுத்து கொள்ளும் வகையில், முக்கிய பூங்காக்களில், 'செல்பி பூத்'கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments