1. செய்திகள்

உர மானியம் நிறுத்தத்தால் உரமூட்டை விலை உயர்வு!

R. Balakrishnan
R. Balakrishnan
Fertilizer price hike due to suspension of fertilizer subsidy

உரம் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கி வந்த மானியம் நிறுத்தப்பட்டதால் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தமிழகத்தின் பிரதான தொழில்களில் ஒன்றாக விவசாயம் இருந்து வருகிறது. குறிப்பாக, லட்சக்கணக்கான விவசாயிகள், நெல், கரும்பு, வாழை, மரவள்ளி கிழங்கு, மக்காச்சோளம் உள்ளிட்டவைகளை பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர். இதில் பயிரின் நல்ல வளர்ச்சிக்கும், மகசூல் அதிகரிக்கவும் டிஏபி, காம்ப்ளக்ஸ், பொட்டாஷ், யூரியா உள்ளிட்ட பல்வேறு வகையான உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்றிய அரசு நேரடியாகவும், தனியார் நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்கியும், விவசாயிகளுக்கான உரம் தயாரித்தும் வழங்குகிறது.

உர மானியம் (Fertilizer Subsidy)

தமிழகத்தை பொறுத்தவரை வேளாண் துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கடைகளிலும், கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும் விவசாயிகள் உரங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே தனியார் உர நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கி வந்த மானியம் சமீபத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது, அந்நிறுவனங்களின் உரம் வரத்து குறைந்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஒன்றிய அரசின் மானியத்துடன் பிரதானமாக 2 நிறுவனங்களின் உரம் விற்பனையில் இருந்து வந்தது. தற்போது ஒன்றிய அரசின் மானியம் நிறுத்தப்பட்டதால், ஒரு நிறுவனத்தின் உரம் வரத்து நின்று, கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை கூட்டுறவு சங்கங்களில் ரூ.283க்கும், தனியார் கடைகளில் ரூ.310க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது நிலவி வரும் தட்டுப்பாட்டால் வரும் நாட்களில், ஒரு மூட்டை விலை ரூ.1,000 வரை உயரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
விவசாய உரத்திற்கான மானியத்தை பயன்படுத்தி, சில நிறுவனங்கள் சோப் தயாரிப்பு, பால் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு கெமிக்கல்களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

விலை உயர்வு (Price Raised)

இதன் காரணமாக ஒன்றிய அரசு மானியத்தை நிறுத்தியது. அதேசமயம், உர நிறுவனங்களும் பாதிக்கப்பட்டதால், தற்போது உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைகளை சரிசெய்யக்கோரி வேளாண் அதிகாரிகளிடம் கேட்டபோது, திரவ மருந்துகளை வாங்கி வயல்களில் தெளிக்கும்படி தெரிவிக்கின்றனர். இதில், 250 மில்லி கொண்ட ஒரு பாட்டிலின் விலை ரூ.350 ஆக இருக்கும் நிலையில், அதனை தெளிக்க ரூ.500 வரை கூடுதல் செலவாகிறது. இதனால், விவசாயிகளுக்கு பலமடங்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. அதேசமயம் உரம் மூட்டைகள் விரைவில் பலமடங்கு வரை விலை உயர வாய்ப்புள்ளதால், ஒருசில இடங் களில் வேண்டுமென்றே உரங்களை பதுக்கி வைத்துள்ளனர்.

ஒருசிலர் குருணை மருந்து உள்ளிட்ட தேவையற்ற சிலவற்றை வாங்கினால் மட்டுமே, உரம் விற்பனை செய்யப்படும் என விவசாயிகளை கட்டாயப்படுத்துகின்றனர். தற்போது பல ஏக்கரில் நெல், மரவள்ளி, மக்காச்சோளம் போன்றவை பயிரிடப்பட்டு, நன்கு விளைச்சல் நிலையை எட்டியுள்ளது. உரிய காலத்தில் அதற்கு தகுந்த உரமிட்டால் தான், எதிர்பார்த்த மகசூலை பெறமுடியும். ஆனால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, அனைத்து விவசாயி களுக்கும் தட்டுப்பாடின்றி உரம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க

பாரம்பரிய நெல் விதைகள்: விவசாய கல்லுாரியில் விற்பனை!

பனை, தென்னைத் தொழில்களை பாதுகாக்குமா தமிழக அரசு? கள்ளுக் கடை திறக்க விவசாயிகள் கோரிக்கை!

English Summary: Fertilizer price hike due to suspension of fertilizer subsidy! Published on: 13 March 2022, 10:19 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.