1. செய்திகள்

கீழ்பவானி கால்வாய் விவகாரம்- விவசாயிகளுக்கு உறுதியளித்த அமைச்சர்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Lower Bhavani Canal Issue- Minister duraimurugan assured farmers

ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பிரதான கால்வாய் சீரமைத்தல் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பிரதான கால்வாய் விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் (ERM) திட்டத்திற்காக NABARD வங்கியின் மூலம் 709.60 கோடி ரூபாய் கடன் பெற்று பணிகள் துவங்குகின்ற நேரத்தில் விவசாயிகளில் ஒரு சாராரிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன.

அதாவது கால்வாயின் தரைப்பகுதியில் கான்கீரிட் தளம் அமைத்து விட்டால் தண்ணீர் பூமியில் ஊராது. கால்வாயின் அருகில் இருக்கின்ற விவசாயிகள் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் சிரமப்படுவார்கள். எனவே, தரையில் கான்கீரிட் தளம் அமைக்கக் கூடாது என்று ஒரு சாரார் கேட்டுக் கொண்டார்கள். அரசு அந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ள அமைச்சர் கரைகள் மற்றும் கட்டுமானங்களை பொருத்தமட்டில் சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னாள் கட்டப்பட்டவை என குறிப்பிட்டுள்ளார்.

கால்வாய்கள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்த காரணத்தால் காலப்போக்கில் அவைகள் சிதைந்து, உடைந்து, பலமிழந்து போய்விட்டது. அன்று கரையில் வைக்கப்பட்ட மரங்கள் பெருமளவில் வளர்ந்து வேர்கள் மூலம் கரைகள் உடைவதற்கு காரணமாகி விட்டது. மதகுகள் மற்றும் மழைநீர் செல்லும் பாலங்கள் காலப்போக்கில் சிதைந்து போய் விட்டது.

இவைகளையெல்லாம் சீரமைத்தால் தான் விவசாயத்திற்கு தண்ணீர் தடையின்றி கடைமடை வரை கிடைக்கும். ஆனால், பிரதான கால்வாயின் இருபுறங்களிலும் இருப்பவர்களுக்கு இதனால் பாதகம் ஏற்பட்டுவிடும் என்று சிலர் திட்டமிட்டு பொய் பிரச்சாரத்தை பரப்பிவிட்டார்கள் என தனது அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் மத்தியில் ஏற்பட்ட இத்தகைய ஐயத்தை போக்குவதற்காக, நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்கள். அமைச்சர் முத்துசாமி அவர்களும் பல முறை இந்த பிரச்சினையை பேசித் தீர்ப்பதற்கு அதிக காலம் செலவிட்டார்கள். நானும், இரு தரப்பு விவசாயிகள் மத்தியில் பல முறை பேசி விளக்கி இருக்கிறேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு விவசாயிகள் மத்தியில் சற்றொப்ப ஒருமித்த கருத்துக்கள் உருவாகி இருப்பதை நான் வரவேற்கிறேன். இத்தகைய மனப்போக்குதான் விவசாயத்தையே நம்பி இருக்கிற விவசாயிகளின் வாழ்வுக்கு உதவுவதாகும். எனவே, நின்று போயிருக்கிற பணிகளை மீண்டும் துவங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டிருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

கால்வாயின் தரையில் எக்காரணம் கொண்டும் கான்கீரிட் தளம் போடக்கூடாது என்றும், சேதமடைந்த மதகுகள் (Sluices) மற்றும் குறுக்கு கட்டுமானங்களை (Cross Masonry Structures) சீரமைத்திடவும், மிகவும் பலவீனமாக உள்ள கால்வாய் கரைப் பகுதிகளில் concrete சுவர் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே பல இடங்களில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டன. இப்பணிகளை இப்போது செய்யாவிட்டால் கரைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருமளவில் வீணாகும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இந்தப் பணிகளை செய்வதன் காரணமாக கால்வாய் செல்லும் பகுதியில் குடிநீருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

எனவே, இப்பணியை செய்து முடித்து கீழ்பவானி பிரதான கால்வாயை சீரமைத்திட விவசாய பெருங்குடி மக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் காண்க:

PM kisan 14 வது தவணை வழங்கும் உத்தேச தேதி அறிவிப்பு!

English Summary: Lower Bhavani Canal Issue- Minister duraimurugan assured farmers Published on: 01 June 2023, 02:50 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.