1. செய்திகள்

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் அமர முடியாது

T. Vigneshwaran
T. Vigneshwaran
Government Jobs

தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும், போட்டித் தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத் தாள் கட்டாயமாக்க வழிவகுக்கும் மசோதாவை தமிழ்நாடு அரசு இன்று சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றியது.

இருப்பினும், இந்த சட்ட மசோதா வட இந்தியர்களுக்கு சாதகமாக இருப்பதாக, தமிழர்கள் மட்டுமே அரசுப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் சட்டத்தை திருத்த மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாமக, விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பேரவையில் தாக்கல் செய்தார். அதில், "தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டம் திருத்தம் செய்யப்பட்டு அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வில் தமிழில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுப் பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என 2021 டிசம்பர் மாதம் போடப்பட்ட அரசாணையை செயல்படுத்தும் விதமாக இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது", என்றார்.

இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் போது பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினர் வேல்முருகன், "திருத்தம் செய்யப்பட்டுள்ள சட்டத்திலும் விண்ணப்பிக்க கூடிய நபர் எவரும் என குறிப்பிடுவதால் பிற மாநிலத்தவரும் தேர்வெழுத வாய்ப்பாக அமையும். வடமாநிலத்தைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் சிலர் ஆட்சியாளர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு இது போன்ற சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர். வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குறுகிய காலத்தில் தமிழை பயின்று அரசுப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றால் என்ன செய்வது? ஆண்டாண்டு காலமாக தமிழ்நாட்டில் குடியிருக்கும், தமிழர்கள் மட்டுமே தேர்வெழுதும் வகையில் இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லை என்றால் இச்சட்டம் பேராபத்தை ஏற்படுத்தி விடும். எனவே இதனை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்", என்றார்.

அவரை தொடர்ந்து பேசிய பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, "வெளி மாநிலத்தவரும் தேர்வெழுத அனுமதித்தால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக கையேந்தும் சூழல் உருவாகும் என்பதால் சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்", என்றார்.

விசிக உறுப்பினர் ஆளூர் ஷாநாவாஸ், "உறுப்பினர்கள் கோரும் திருத்தங்களை மேற்கொண்டால் தமிழக மக்கள் அனைவரும் சட்டத்தை வரவேற்பார்கள்", என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போடப்பட்ட அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், இன்றைக்கே இந்த சட்டத்தை கொண்டுவர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இன்றைக்கு இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வராவிட்டால், தமிழ் மொழி தேர்வு கட்டாயம் என்பதே ரத்தாகி விடும்.

உறுப்பினர்கள் கோரிய திருத்தங்கள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இந்த சட்டமுன்வடிவை அனைவரும் நிறைவேற்றித் தர வேண்டும்", என்றார். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த மசோதா ஒரு மனதாக நிறைவேறியது.

மேலும் படிக்க:

குழந்தைகளுக்கான பான் கார்ட், விண்ணப்பிக்க எளிய வழி

பாரம்பரிய நெல் வகைகளில் இத்தனை மருத்துவ குணங்களா?

English Summary: You Cannot Get Government Jobs Without Mastering Tamil Published on: 13 January 2023, 06:14 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.