1. விவசாய தகவல்கள்

1கிலோ வெங்காயம் ரூ.1200| வைகா விருது 2023|கோமாரி நோய் தடுப்பூசி முகாம்|நெல் கொள்முதல் மையம்|ஆவின்

Poonguzhali R
Poonguzhali R
1 kg onion Rs.1200| Vaiga Award 2023|Mess Vaccination Camp|Paddy Procurement Center|Aavin

ஒரு கிலோ வெங்காயம் ரூ.1200 க்கு விற்பனை, சிறந்த ஆன்லைன் விவசாயப் பத்திரிக்கைக்கான வைகா விருது: கிரிஷி ஜாக்ரனுக்கு கிடைத்தது, தர்மபுரியில் 21 நாட்கள் தொடர் கோமாரி நோய் தடுப்பூசி முகாம், அரசு நெல் கொள்முதல் மையத்தில் ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ.50 வசூல், ஆவின் பால் கூட்டுறவு சங்கத்திற்கு பால் சப்ளை நிறுத்தம் -பால் உற்பத்தியாளர்கள் முடிவு, மார்க்கெட் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் மறியல், தேயிலை துறை வளர்ச்சி குறித்து மத்திய அரசு நடவடிக்கை முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.

மேலும் படிக்க: 100 நாள் வேலை அறிவிப்பு|விவசாயிகள் போராட்டம்|மானிய உரம்|உணவு பொருட்களின் விலை|மேட்டூர் அணை நிலவரம்

1. ஒரு கிலோ வெங்காயம் ரூ.1200 க்கு விற்பனை!

இந்தியாவைப் பொறுத்தவரையில் வெங்காயம் என்பது ஒரு அத்தியாவசியமான உணவுக்குப் பயன்படுத்தக்கூடிய காய்கறி ஆகும். வெங்காயம் இல்லாமல் கிட்டத்தட்ட எந்த உணவையும் தயார் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டில் வெங்காயத்தின் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 1200 எனவிற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இது கோழி இறைச்சியை விட அதிக விலை என்றும் கூறப்படுகிறது. வெங்காயத்தின் விலை கடந்த சில மாதங்களாகப் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உயர்ந்து கொண்டே வந்த நிலையில் தற்பொழுது பல்பொருள் அங்காடிகளில் ஒரு கிலோ வெங்காயம் இந்திய ரூபாயில் ரூ.1200 வரை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2. சிறந்த ஆன்லைன் விவசாயப் பத்திரிக்கைக்கான வைகா விருது: கிரிஷி ஜாக்ரனுக்கு கிடைத்தது!

கேரள அரசின் வேளாண்மைத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட வைகா 2023 இன் நிறைவு நிகழ்வில் வைகா ஊடக விருதுகள் வழங்கப்பட்டன. விவசாயிகளுக்கு சிறந்த வருவாயை உறுதி செய்யவும், மாநிலத்தின் விவசாயப் பொருட்களின் செயலாக்கம், மதிப்பு கூட்டல் மற்றும் பரப்புதல் துறைகளின் திறனினைப் பயன்படுத்தி, விவசாயத் துறைக்குப் பொதுத் தொழில்முனைவோரை ஈர்க்கவும் வேளாண்மைத் துறையால் தொடங்கப்பட்ட திட்டம்தான் 'வைகா' என்பதாகும். இதில் மாபெரும் விவசாயப் பத்திரிக்கையான கிரிஷி ஜாகரன் சிறந்த அறிக்கையிடலுக்கான ஆன்லைன் மீடியா விருதைப் பெற்றுள்ளது. மேலும், பத்திரிகை ஊடகமான மாத்ருபூமி மற்றும் ஜனயுகா விருது பெற்றன.

3. தர்மபுரியில் 21 நாட்கள் தொடர் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், எர்ரப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி -2023 முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி நேற்று துவக்கி வைத்தார். தருமபுரி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதனடிப்படையில், நல்லம்பள்ளி வட்டம், எர்ரப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி -2023 முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., நேற்று (01.03.2023) துவக்கி வைத்தார். நேற்று துவங்கிய இந்த தடுப்பூசி முகாம் வருகிற 21 வரை தொடர்ச்சியாக 21 நாட்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

4. அரசு நெல் கொள்முதல் மையத்தில் ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ.50 வசூல்!

மதுரை மாவட்டம் குலமங்கலத்தில் அரசு நெல் கொள்முதல் மையத்திற்கு வருகின்ற விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு ரூ.50 கட்டாயமாக வசூலிக்கின்றனர். இந்த புகார் குறித்து தமிழக முதல்வர், அமைச்சர், ஆட்சியர் என மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியம் குலமங்கலம் பகுதியில் இரண்டாம் போகத்தின் சாகுபடி நெல்லினைக் கொள்முதல் செய்வதற்கு அரசு நெல் கொள்முதல் மையம் பிப்.8ம் தேதி தொடங்கப்பட்டது. தொடங்கிய நாளிலிருந்து தற்பொழுது வரை ஒரு மூட்டைக்கு ரூ.50 கட்டயமாக வசூல் செய்வதாக விவசாயிகள் தொடர் புகார்கள் கூறிவருகின்றனர். இதுதொடர்பாகத் தமிழக முதல்வர், வேளாண்மைத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த தீர்வும் எடுக்கப்படவில்லை. மேலும் புகாரளிக்கும் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் புகார்கள் எழுந்து இருக்கின்றன.

5. ஆவின் பால் கூட்டுறவு சங்கத்திற்கு பால் சப்ளை நிறுத்தம் - பால் உற்பத்தியாளர்கள் முடிவு!

ஆவின் பால் கூட்டுறவு சங்கம் கொள்முதல் விலையை 35ல் இருந்து 42 ஆக உயர்த்தாமல் விட்டாலோ, 7 ஆக ஊக்கத்தொகையாக வழங்காவிட்டாலோ மார்ச் 11ம் தேதி முதல் பால் விற்பனையை நிறுத்த மதுரை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் வெண்மணி சந்திரன் கூறியபோது, தனியார் ஏஜென்சிகள், ஒரு லிட்டர் பாலை, 45க்கு கொள்முதல் செய்கின்றன, அதே நேரத்தில், ஆவின் சொசைட்டி கொள்முதல் விலை, சந்தை விலையை விட மிகவும் பின்தங்கி இருக்கிறது என்றும், பாலை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து அதிக விலைக்கு விற்க வேண்டும் என விவசாயிகள் பலர் சங்கங்களை வலியுறுத்தி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

6. மார்க்கெட் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் மறியல்!

திண்டிவனம் மார்க்கெட் கமிட்டியில் சிறுதானிய பயிர்களை விலை குறைவாக நிர்ணயம் செய்த அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில், செஞ்சி சாலையில் உள்ள மார்க்கெட் கமிட்டிக்கு ஒலக்கூர், மயிலம், மரக்காணம், தீவனுார் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன் காராமணி பயிர் ஒரு மூட்டை 9,500 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று 8,500 ரூபாய்க்கு அதிகாரிகள் விலை நிர்ணயம் செய்தனர். திடீரென விலை குறைப்பால் விவசாயிகள் அதிருப்தியடைந்தனர். இதனை கண்டித்து மாலை 5:00 மணியளவில் செஞ்சி சாலையில். விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் வெங்கடசுப்ரமணியம் நேரில் வந்து, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை. நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, 6:00 மணியளவில் மறியலை கைவிட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

7. தேயிலை துறை வளர்ச்சி குறித்து மத்திய அரசு நடவடிக்கை!

உலகளவில் சிறந்த அடையாளத்தை உருவாக்கும் வகையில் தேயிலைத் தொழில் துறையை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேயிலை உற்பத்தியில் உலகளவில் இரண்டாவது இடம் வகிக்கும் இந்தியா, உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தன்னிறைவு பெற்றுத் திகழ்வதுடன், ஏற்றுமதியிலும் சிறந்து விளங்குகிறது. தேயிலை ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா நான்காவது இடம் வகிக்கிறது. இந்தியத் தேயிலை தொழில் துறை 11 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன் ஏராளமானோருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.

மேலும் படிக்க

உளுந்து, பச்சைப்பயறு குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு நேரடி கொள்முதல்!

Coco Peat: தென்னை நாரை முறையாக பயன்படுத்தி, லாபம் ஈட்டலாம் தெரியுமா?

English Summary: 1 kg onion Rs.1200| Vaiga Award 2023|Mess Vaccination Camp|Paddy Procurement Center|Aavin Published on: 03 March 2023, 02:03 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.