
TNPCB President requested to the public to avoid single-use plastic
வருகிற தமிழ் புத்தாண்டில் "ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்" மற்றும் "சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்துவோம்" என உறுதிமொழி மேற்கொள்வதோடு, அதை உறுதியுடன் பின்பற்றுவோம் என பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) இணைந்து அனைத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையினை செயல்படுத்தி வருகின்றது, இவற்றில் பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் நெய்யப்படாத கைப்பைகளின் தடையினை அளவு மற்றும் தடிமன் வரையறையின்றி, தீவிரமாக செயல்படுத்தி வருகின்றது.
தடையாணையில் குறிப்பிட்டுள்ளபடி பாலிஎதிலீன் டெரிப்தாலேட், உயர் அடர்த்தி பாலிஎதிலீன், வினைல், குறைந்த அடர்த்தி பாலிஎதிலீன், பாலிப்ரோப்பிலீன், பாலிஸ்டைரீன் ரெசின்கள் போன்ற அதிக மூலக்கூறு எடைகொண்ட பாலிமரில் இருந்து தயாரிக்கப்பட்டு சுயமாக எடுத்துச் செல்லும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், உபயோகிப்பதற்கும், கையாள்வதற்கும் கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, 'நெய்யப்பட்ட பைகள்' அல்லது 'ரஃபியன் பைகள்' என்ற பெயரில் பிளாஸ்டிக் கைப்பைகள், விற்பனையாளர்களிடமும், கடைக்காரர்களிடமும் மற்றும் ஜவுளி கடைகள், பேரங்காடிகள், ஷாப்பிங் மால்கள் போன்ற வணிக நிறுவனங்களிலும் பூ, உணவு, காய்கறிகள், மளிகைப் பொருட்கள், ஜவுளி, முதலியவைகளை விநியோகிக்க உபயோகப்படுகின்றது. இதுபோன்ற ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு பிறகு தூக்கி எறியப்பட்டு குப்பையாக மாறிவிடுகிறது.
இவ்வாறு குப்பையாக வீசப்பட்ட பிளாஸ்டிக்குகள் ஏரிகள், ஆறுகள், கடல் போன்ற நீர்நிலைகள் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்கை தயாரிப்பதோ, விற்பனை செய்வதோ மற்றும் விநியோகிப்பதோ தமிழக அரசின் தடை அறிவிப்பை மீறும் குற்ற செயலாகும்.
ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கு, தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட தடையை செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை குறிப்பாக பிளாஸ்டிக் கைப்பைகளை எந்த நிலையிலும் பயன்படுத்துவதைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை என்பதனை தமிழக அரசு வலியுறுத்துகிறது. மேலும் பிளாஸ்டிக் பயன்பாடுகளுக்கு மாற்றாக மீண்டும் மஞ்சள் பை போன்ற திட்டத்திற்கும் தமிழக அரசு முக்கியத்துவம் வழங்கி வருகிறது.
எனவே, நமது பூவுலகம் எதிர்கொள்ளும் பெரும் அச்சுறுத்தலை அகற்றுவதற்கு பொறுப்புள்ள குடிமகனாக, இத்தமிழ் புத்தாண்டில் "ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்" மற்றும் "சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்துவோம்" என உறுதிமொழி மேற்கொள்வதோடு, அதை உறுதியுடன் பின்பற்றுவோம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
மகளிர் சுய உதவிக்குழுவின் கவனத்திற்கு- உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவது எப்படி?
Share your comments