1. கால்நடை

எருமை வளர்ப்பில் நல்ல லாபம் பெற உதவும் இம்முறைகள்

KJ Staff
KJ Staff

எருமை மாடானது அதிக கொழுப்புச் சத்துள்ள பால் மட்டுமன்றி இறைச்சி மற்றும் வேளாண் வேலைகளுக்கும் பயன்படுகிறது. எல்லா வளர்ப்பு மிருகங்களிலும் எருமை மாடுகளே அதிக உற்பத்தி தரக்கூடியவை. அதிலும் ஆசிய எருமைகள் அதிகத் திறனுடன் உழைக்கக்கூடியவை. ஆசிய எருமைகள் ஆண்டொன்றுக்கு 45 மில்லியன் டன்கள் உற்பத்தி தருகின்றன.  அதில் 30 மி. டன்கள் இந்தியாவிலிருந்து மட்டும் பெறப்படுகிறது. ஆள் திறன் மற்றும் செலவு குறைவு. எனவேதான் எருமை மாடு வளர்ப்பு சிறந்ததாகக் கருதப்படுகிறது.

எருமை வளர்ப்பு துவங்க

நீங்கள் எருமை வளர்ப்பை மேற்கொள்ள விரும்பினால் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை கவனத்துடன் செயல்படுத்தி வந்தால் அதிக பால் உற்பத்தி பெற்று நல்ல லாபம் பெற இயலும். ஏனெனில் எருமை பால் உற்பத்தியில் அதிக லாபம் ஈட்டித்தரும் கால்நடை வளர்ப்பாகும். மேலும் வடநாட்டு மக்கள் எருமை வளர்ப்பிலேயே அதிக லாபம் ஈட்டுகின்றனர்.

பராமரிப்பு மற்றும் வளர்ப்பிற்கு சிறந்த இனத்தேர்வு

எருமை வளர்ப்பில் மிக முக்கியமானது சிறந்த எருமை இனத்தை தேர்வு செய்வது. கால்நடை வளர்ப்பில் எருமை வளர்ப்பவர்களுக்கு எருமை பற்றி முழு விவரங்களும் அதன் குணங்களை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் எருமை இனத்தின் பண்பு நலனிலும், தீவன பராமரிப்பிலும் கவனம் வேண்டும். இவைகளுக்கு நல்ல கொட்டகை அமைக்க வேண்டும்.

குட்டி ஈனுவத்தில் பராமரிப்பு

எருமை எல்லா வருடமும் கன்று ஈனக்கூடியது. அவ்வாறு கன்று ஈனுவத்தில் பிரச்சனை ஏற்பட்டால் இதில் ஏற்படும் செலவு மிகவும் அதிகமானது. அதனால் வளர்ப்பவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது இவற்றிற்கான சிகிச்சைகளை உரிய நேரங்களில் மேற்கொள்ள வேண்டும்.

எருமைகளுக்கு சுத்தமான கொட்டகை அமைப்பு

கொட்டகை அமைப்பு ஒவ்வொரு கால்நடைக்கும் நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் கிடைப்பது போல அமைந்திருக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் இடம் நல்ல வடிகால் வசதி உள்ளதாக இருக்க வேண்டும். பொதுவாக சற்று மேடான பகுதியாக இருப்பது நல்லது. அதனால் மழைநீர் மற்றும் நீர் நன்கு வடிந்து சுற்றுப்புறம் சுகாதாரமானதாக இருக்கும். கட்டிடங்களின் திசையமைப்பு நல்ல காற்று வசதி கிடைக்கும் படியாகவும் அதே நேரத்தில் சூரிய வெப்பம் கால்நடைகளை நேரடியாகத் தாக்காதவாறும் அமைந்திருக்க வேண்டும். மேலும் வெயில், மழை, குளிர் அணைத்து காலங்களில் இருந்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும். கொட்டகையின் கூரைகளில் இருந்து தண்ணீர் வடியக்கூடாது. குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் வைக்க வேண்டும். எருமைகள் எத்தனை நேரம் ஓய்வேடுக்கின்றதோ,  பாலில் சுகாதாரமும் உற்பத்தியும் அதிகளவில் கிடைக்கும்.

எருமை மாட்டு இனங்கள்

முர்ரா

தோற்றம்: இது அதிகமாக பஞ்சாப், டெல்லியில் காணப்படுகிறது.

சிறப்பியல்புகள்

இந்த இனம் பரவலாக ரோடக், ஹீசார் போன்ற ஹரியானாவின் மேற்குப் பகுதிகளில் காணப்படுகிறது.

பாலில் 7 சதவிகிதம் கொழுப்புச் சத்து உள்ளது.

இதன் உடல் நன்கு பெருத்து, கொம்பு வளைந்து தலை கழுத்துப் பகுதிகள் நீண்டும் மடி பெரியதாகவும் காணப்படும்.

முதல் கன்று ஈனும் வயது 45-50 மாதங்கள் நல்ல பராமரிப்பில் இது 36-40 மாதத்திலேயே கன்று ஈனும் திறனுடையது.

அடுத்தடுத்த கன்று இடைவெளி 450-500 நாட்கள்

இது சிறிது குளிர் மிகுந்த கடலோரப் பகுதிகளில் நன்கு வளரும். எனினும் இதன் அதிக உற்பத்திக்காக நாடு முழுவதும் விரும்பி வளர்க்கப்படுகிறது.

சுர்தி:

தோற்றம்: குஜராத்

சிறப்புப் பண்புகள்

கைரா, பரோடா மாவட்டங்களில் (குஜராத்தைச் சேர்ந்தவை) அதிகம் காணப்படுகிறது.

இதன் உடல் நல்ல அமைப்புடன் சராசரி எடையுள்ளது.

கழுத்து நீண்டும், கண்கள் நன்கு கவரும் வண்ணம் இருக்கும்.

கொம்புகள் அரிவாள் போன்று சிறிது நீளமாகவும், தட்டையாகவும் இருக்கும்.

இவ்வினங்கள் கறுப்பு (அ) காவி கலந்து இருக்கும். இதன் கால் தொடையில் இரண்டு வெள்ளை நிறப்பகுதி காணப்படுவது இதன் சிறப்பம்சம் ஆகும்.

சராசரி பால் அளவு 1700 கி.கி

முதல் கன்று ஈனும் வயது 40-50 மாதங்கள். அடுத்தடுத்துள்ள கன்றுகள் 400-500 நாட்கள் இடைவெளியில் கன்று ஈனும். இதன் காளைகள் எளிய வேலைகளுக்கு ஏற்றது.

ஜாப்ரா பாதி

தோற்றம்:

குஜராத்தின் கத்தைவார் மாவட்டம்

இதன் சராசரி பால் அளவு 1800-2700  கிகி

இதன் பாலில் கொழுப்புச் சத்து மிக அதிகமாக இருக்கும்.

எருமைகளின் தீவன அம்சங்கள்

எருமைகளின் தீவனம மிகவும் சீரானதாக இருக்க வேண்டும். தீவன கலவைகளில் அதிக புரதம் மற்றும் தாது உப்புக்கள் முழுமையாக சேர்க்கப்பட வேண்டும்.

தீவனம சத்தானதாகவும், சுவையானதாகவும் இருக்க வேண்டும் மேலும் கலவையில் எந்த வித துர்நாற்றமும் வரக்கூடாது.

உணவு முழுமையாக ஜீரணிக்கப்பட வேண்டும். எவ்விதத்திலும் தண்டுகள் போன்றவற்றை தீவனமாக அளிக்க கூடாது.

எருமைகளின் வயிறு பெரிதாக இருக்கும் காரணத்தால் அவற்றிற்கு முழுமையான உணவு அளிக்க வேண்டும். அவைகள் முழுமையாக மற்றும் த்ரிப்தியாக இருப்பது அவசியம். அவைகளின் வயிறு காலியா இருந்தால் தேவையில்லாத பூச்சுகள்,   மண், போன்ற இழிந்த விஷயங்களை சாப்பிடத் தொடங்குகி விடும்.

எருமைக்கு பச்சை தீவனம் அதிகம் இருக்க விடும். இதனால் எருமைகள் அதிக சத்தாகவும்,  ஆரோக்கியமாகவும்,  இருக்கின்றன.

எருமைகளின் தீவனங்களில் திடீர் மாற்றம் ஏற்படுத்த கூடுதது. அவ்வாறு செய்வதால் அவைகளின் உடலில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புண்டு.  தீவன கலவைகளை மாற்ற நினைத்தால் சிறிது நாட்களுக்கு முன்பிலிருந்தே தினசரி கலவையில் படிப்படியாக சேர்த்து கொடுக்க வேண்டும்.

எருமைகளின் உணவு நேரத்தை சரியாக கவனித்து தீவனம் அளித்தால், நீண்ட நேரம் வரை பசி எடுக்காது. மேலும் சரியான நேரத்திற்கு தீவனம் அளித்து வந்தால் உடல் பராமரிப்பு நன்றாக இருக்கும்.

தீவனம் உட்கொள்ளும் தன்மை

எருமைகள் அசை போடும் கால்நடை இனத்தைச் சார்ந்தவை. இவை நார்ச்சத்து மிகுந்த பொருட்கள் உண்பதால் தான் இதன் பால் அதிக சத்துள்ளதாக விளங்குகிறது.

எருமையின் வயிறு செல்லுலோஸ் போன்ற கடினமான உணவுகளையும் செரிக்க வல்லது. எருமை மாடுகள் முதலில் உணவை விழுங்கிவிடுகின்றன. பின்பு மீண்டும் வாய்க்கு எடுத்து வந்து அசை போட்டு பின்பு உள்ளே அனுப்பிச் செரித்துக் கொள்கின்றன. எனவேதான் எருமைகளால் நன்கு செரிக்க முடிகின்றது.

உணவானது விழுங்கியவுடன் முன்வயிற்றுப் பகுதிக்கு சென்றுவிடுகிறது. அங்கே பிராண வாயு (ஆக்சிஜன்) இருப்பதில்லை.

அங்குள்ள பாக்டீரியா, புரோட்டோசோவா மற்றும் பூஞ்சைகள் போன்றவை இந்த உணவைத் தங்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்காக உடைத்துப் பயன்படுத்திக் கொள்கின்றன.

இந்த உணவு வாயினால் அசை போட்டு அரைக்கப்பட்டு எவ்வளவு நேரம் வயிற்றில் செரிக்கப்படுகிறது என்பது அதன் அளவு, வடிவத்தைப் பொறுத்தது.

எருமைகள், பசுமாடுகளை விட மெதுவாகவே செரித்த பொருளை, நன்கு உறிஞ்சிப் பயன்படுத்திக் கொள்கின்றன. அமில காரத்தன்மை 6-7 வரை இருக்கும். இது உணவு உண்ணும் நேரத்தைப் பொறுத்து வேறுபடலாம்.

உணவானது செரிக்கப்பட்டு, புரதம், கார்போஹைட்ரேட் தாதுக்கள், கொழுப்பு மற்றும் நீர்ச்சத்தாக மாற்றுகின்றன. மேலும் மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு போன்றவை வெளியேற்றப்படுகின்றன.

இவை இரத்தத்துடன் கலந்து தேவையான பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. நிறைய உலர் தீவனமும், குறைந்த அடர்த் தீவனமும் கொடுத்தல்   வேண்டும்.

அரசாங்க உதவி

பல இடங்களில், கால்நடை வளர்ப்புக்கான கால்நடை உற்பத்தியை அதிகரிப்பதற்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வாரியம் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. நீங்கள் பால் தொழிலையும் தொடங்கலாம். அதே நேரத்தில் விவசாய துறைகளிடமிருந்தோ அல்லது வங்கியிலிருந்தோ மாடு அல்லது எருமை வாங்க கடன் வழங்கப்படுகிறது. இது எருமையை வாங்குவதை எளிதாக்குகிறது மற்றும் பணத்திற்கு கூடுதல் கட்டணம் இல்லை.

நோய் மேலாண்மை

எருமை அம்மை (Buffalo pox)

இந்நோய் பொதுவாக இந்தியா முழுவதிலும் பரவிக் காணப்படுகிறது. இதன் மூலம் மடி, உள்தொடை, நாசி, வாய் போன்ற இடங்களில் கொப்புளங்கள் தோன்றும்.  நோய் பரவும் முறை, தடுப்பு முறைகள் அனைத்தும் மாடுகளில் இருப்பது போலத்தான் இதற்கு சரியான தடுப்பூசி ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காயங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து ஈக்கள் மொய்க்காமல் பாதுகாத்தல் அவசியம்.

அறிகுறிகள்

நோய் தொற்றி 2-5 நாட்களில் எருமையின் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். பின்பு கடுகு அளவில் சிவப்புக் கொப்புளங்கள் ஆங்காங்கு தோன்றும். உள்ளே நீரற்ற இந்தக் கொப்புளங்கள் காம்புகளின் சற்று நீளமானதாகவும், மடியில் உருண்டை வடிவிலும் காணப்படும். பின்பு இவை வளர்ந்து ஒன்றோடொன்று இணைந்து பெரிதாகிவிடும். இக்கொப்புளங்கள் தானாகவே மறைந்து, மடி பழைய நிலையை அடைந்து விடும். ஆண் எருமைகளில் இவை முடி மற்றும் அழுக்கில் மறைந்திருப்பதால் அதிகமாகத் தெரிவதில்லை.

சிகிச்சை

பொதுவாக இவை தானாகவே மறைந்து விடும். புண்கள் பெரிதாகாமல் அதை சுத்தப்படுத்த வேண்டும். 1:1000 விகித பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல், மற்றும் போரிக் அமில களிம்பு 1:100 விகித தடவலாம். பாதிக்கப்பட்ட எருமை அப்புறப்படுத்தி தனியே பால் கறக்கவேண்டும். இந்த எருமைகளிலிருந்து கறக்கும்  பாலை நன்கு காய்ச்சிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

பிளாக் குவார்டர் (Black Quarter)

இது கால்நடை, செம்மறி ஆடுகளில் காணப்படும் ஒரு முக்கியமான நோய். தொடர்பினால் பரவாது எனினும் நச்சுத்தன்மை கொண்டது.

பரவல்

இந்நோயானது 6 மாதத்திலிருந்து 2 வயது வரை உள்ள எருமைகளை இந்நோய் தாக்குகிறது. மழைக்காலம் ஆரம்பிக்கும் தருணத்தில் தான் இது அதிகமாகப் பரவும். பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் எருமையின் வாய் வழியே உள்ளே சென்று சில காலம் தங்கி நச்சுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

அறிகுறிகள்

சில சமயங்களில் எருமைகள் அறிகுறி ஏதுமின்றி இறந்துவிடும். இதன் முக்கியமான அறிகுறி முன் அல்லது பின் பாதத்தில் வரும் வீக்கம் ஆகும். இதைத் தேய்க்கும் போது சதை தோலில் வெடிப்பு ஏற்படும். காய்ச்சல், கால்நடை நடக்க முடியாமை, வாலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அடித்துக் கொள்ளுதல் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். இந்நோய்க்கண்ட 24 மணி நேரத்தில் எருமை இறந்து விடும். பாதிக்கப்பட்ட இடம் சிறிது நேரம் மிக சூடாகவும், வலியுடனும் இருந்து பின்பு சாதாரணமாக ஆகிவிடும். பாதிக்கப்பட்ட பாகங்களின் தோல் வறண்டு, கடினமானதாக இருக்கும். செம்மறி ஆடுகளில் கழுத்து, பின் பகுதியின் சதைகள் பாதிக்கப்படும். காய்ச்சல், பசியின்மை போன்ற அறிகுறிகளும் தென்படும்.

சிகிச்சை

பென்சிலின், டெட்ராசைக்ளின் போன்ற மருந்துகளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவலாம். ஏன்டிஆக்ஸிஸெரா, சர்போஃதையே போன்ற மருந்துகளும் இந்நோய்க்கு ஏற்றவை.

தடுப்பு முறை

இந்நோய் வந்தபின் சிகிச்சையளிப்பதை விட, சுகாதாரமான முறையில் வருமுன் காப்பதே சிறந்ததாகும்.இறந்த எருமைகளை அகற்றி, எரித்து நோய் பரவாமல் சுத்தம் செய்யவேண்டும். காயம்பட்ட இடங்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கவேண்டும்.ஆலம் படிந்த ஃபாரிமலைஸ்டு கலந்த தடுப்பூசி சிறந்தது. மழைக்காலம் தொடங்கும் முன்பே தடுப்பூசி அளித்துவிட வேண்டும். செம்மறி ஆடுகளில், ஆண் மலடாக்குதல், குட்டி போடுதல் போன்ற செயல்களுக்கு முன்பு கட்டாயம் தடுப்பூசி அளித்தல் அவசியம்.

ஜோனிஸ் நோய் (Johne’s Disease)

சாதாரண சூழ்நிலையில் தொடர்பினால் பரவக்கூடிய இந்நோய் செம்மறி ஆடு, வெள்ளாடு, எருமை போன்ற பல கால்நடைகளைத் தாக்கக்கூடியது.

பரவல்

இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் கழிவுகள் தீவனம் போன்றவை மூலம் எளிதில் பரவக்கூடியது. நோய் தாக்கிய பின்பு அறிகுறிகள் வெளிப்பட 12 மாதங்களிலிருந்து சில வருடங்களாகலாம். பெரும்பாலும் 3-6 வயதுடைய எருமைகளை அதிகம் தாக்கும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் அறிகுறிகள் அதிகம் தென்படாது. அதன் கழிவுகளில் நுண்ணுயிரிகள் இருக்கும். இவை மேய்ச்சல் நிலங்களில் 1 வருடம் வரை வாழும் தன்மை கொண்டவை. சூரிய ஒளி, அதிக அமில / காரத்தன்மையில் இது உயிர் வாழ முடியாது.

கால்நடைகளில் 2-6 வருட வயதுள்ளவை பால் கறந்த பின்பு வெளிவரும் கழிவுகளில் இதன் அறிகுறிகள் தென்படும்.

சிகிச்சை

இந்நோய் பரப்பும் கிருமிகள் கீமோதெரப்பியூட்டிக் காரணிகளுக்கு எதிர்ப்புத் தன்மை மிக்கவை. இந்நோய் வந்தபின் குணப்படுத்துவது கடினம்.

கட்டுப்பாட்டு முறை

கன்று பிறந்த உடன் தடுப்பூசி போடுதல் சிறந்தது. இந்தத் தடுப்பூசியில் ஜானிஸ் பேசில்லஸ் என்னும் நோய்த் தாக்க முடியாத குணம் உள்ளது. நோய் பாதிக்கப்பட்ட மந்தைகளில், உடனே பிற கால்நடைகளுக்குத் தடுப்பூசி அளித்தல் சிறந்தது.

 

K.SAKTHIPRIYA 

KRISHI JAGRAN 

English Summary: a complete guide for Indian buffalo farming: housing, breeds, feed management Published on: 18 June 2019, 02:46 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.