
திமுக குடும்ப உறுப்பினர்களின் நிதியை வைத்தே 7 பட்ஜெட் போடலாம். அதைவைத்து மா விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுங்க என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.
கிருஷ்ணகிரியில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக பிரேமலதா ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதில் அவர் பேசுகையில், தமிழகத்தில் மா விவசாயிகள் கடுமையான துயரை அனுபவித்து வருகிறார்கள்.
மாங்கனி ஊர் என சேலத்தை சொல்வது போல் கிருஷ்ணகிரியையும் சொல்வதுண்டு. அங்கு விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. இதை விஜயகாந்தின் ரமணா பட பாணியிலேயே சொல்கிறேன். கிருஷ்ணகிரி மாவட்டம் 5,143 சதுர கி.மீ. பரப்பு கொண்டது. இதில் 30,017 ஹெக்டேர் பரப்பில் மா சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கும் மருந்தடித்து, பராமரிப்பு செய்ய 30 ஆயிரம் ரூபாய், மா லோடு ஏற்றிச் செல்ல 6000 ரூபாய், கூலியாட்களுக்கு 5 ஆயிரம் என மொத்தம் 41,000 ரூபாய் செலவாகிறது. ஏக்கருக்கு 6 டன் விளைச்சல் வந்தாலும் மொத்த செலவை விட கூடுதலாக கிடைக்க வேண்டும். ஆனால் மாங்கூழ் தொழிற்சாலைகள், 6 டன்னுக்கு 18 ஆயிரம்தான் கொடுக்கின்றன. இதனால் மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 23 ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது.
மாந்தோப்பு குத்தகைக்கு எடுப்பவர்கள், 71 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு ஏக்கருக்கு 53 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அரசிடம் நிதி இல்லை. கேட்டால், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறுகிறார்கள். திமுக குடும்ப உறுப்பினர்களான "நிதி"க்களின் நிதியை வைத்தே 7 பட்ஜெட் போடலாம். மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 10 ஆயிரம் நிவாரணம் கொடுங்கள் என பிரேமலதா பேசினார்
Share your comments