
இந்தியாவின் பசுமை புரட்சியும், பல கோடி விவசாயிகளின் உழைப்பும் இன்று நம் தேசத்தை வெளிநாடுகளை நம்பாமல் உணவுத் தன்னிறைவுடன் நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. ஆனால், இப்போது ஒரு புதிய ஆபத்து நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதுதான் அமெரிக்காவின் வணிக அழுத்தம். இது சாதாரண அழுத்தம் அல்ல. இது நம் விவசாயத்தின் நரம்புகளை நசுக்க வைக்கும் பேரழுத்தம். விவசாயம் நம் நெஞ்சில் பதிந்த பாரம்பரியம். அது தொழில் மட்டும் அல்ல. ஒரு தேசத்தின் சுவாசம். ஆனால் இன்று, அந்தச் சுவாசமே விலை பேசப்படும் சர்வதேச வர்த்தக பொருளாக மாறியிருப்பது தான் வேதனையான விஷயம்.
ஜூலை 9ஆம் தேதிக்குள் இந்தியா தனது பாதுகாக்கப்பட்ட விவசாய சந்தைகளை திறக்கவில்லை என்றால், 26% வரிகளை (Reciprocal) விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையாக தோன்றினாலும், இதன் பின்னணி நோக்கம் இந்தியாவின் உணவுப் பரிணாமத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி என்றே கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த அழுத்தம், இந்தியாவின் உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனித்து கட்டுப்படுத்தும் உரிமையையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும்.
இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில், சிறு விவசாயிகள் குறைந்த அளவிலான நிலங்களை வைத்து தங்களின் வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அமெரிக்கா தங்களால் அதிகம் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்கள், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் பால்வளப் பொருட்களை இந்திய சந்தையில் பெரிதும் விற்பனை செய்ய முயற்சித்து வருகிறது. அமெரிக்காவின் விவசாய பொருட்களை இந்திய சந்தையில் விற்பனை செய்ய ஆரம்பித்தால், நம் சிறு விவசாயிகளின் நிலைமை மோசமாகிவிடும். தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தையில் குறைவான விலைக்கு விற்க நேரிடும். உற்பத்தி நஷ்டமாகும். கடன், வறுமை ஏற்படும் என FLUIDIC FASHION நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஷோபித் பூஷன் தனது லின்கிடுஇன் பதிவில் தெரிவித்துள்ளார். இந்திய அரசு இதுவரை அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு எதிராக நின்று நாட்டின் தன்னாட்சி மற்றும் விவசாயத்தை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. ஆனால், இப்போது நிலைமை மோசமாகியுள்ளது. இந்தியாவின் விவசாய சந்தைக்கு, உணவு பாதுகாப்புக்கும் பெரிய அச்சுறுத்தலாக அமெரிக்கா வந்துள்ளது என டாக்டர் ஷோபித் பூஷன் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இது வெறும் வணிகம் சார்ந்த விஷயம் அல்ல. இது இந்தியாவின் விவசாய துறையை முற்றிலும் சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்.
Share your comments