
கரூர் அருகே கடவூர் வரவணை கிராமத்தை சுற்றி உள்ள 16 குளங்களை தூர்வாரி மீட்டெடுக்கும் அமெரிக்காவில் பணிபுரியும் கணினி தொழில்நுட்ப ஆலோசகரின் செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
நரேந்திரன் கந்தசாமி... இந்த பெயர் தான் தற்போது கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிகம் உச்சரிக்கப்பட்டு வரும் பெயர். யார் இந்த நரேந்திரன் கந்தசாமி? பொதுமக்களும், விவசாயிகளும் இவரை புகழ்ந்து பேசும் அளவுக்கு என்ன செய்துவிட்டார்? அவரது சாதனை தான் என்ன?
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட கடவூர் ஊராட்சி ஒன்றியம் வரவணையை அடுத்த வ.வேப்பங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நரேந்திரன் கந்தசாமி. 41 வயதான அவர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக மாதத்திற்கு பல லட்சம் ரூபாய் சம்பளம் தரும் வேலையில் உள்ளார். இயற்கை மீதும் பசுமை மீதும் தீராத காதல் கொண்ட நரேந்திரன் கந்தசாமி, தனது கிராமத்தை பசுமையாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அப்போது கிராமத்தை சுற்றியுள்ள நீர் நிலைகள் அனைத்தும் புதர் மண்டிக்கிடக்கின்றன. மழை பெய்தாலும் தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு குளங்கள் தூர்வாரப்படவில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர். அரசு செய்யும்... அதிகாரிகள் செய்வார்கள்... அவர்களிடம் மனு கொடுக்கலாம்.... என்று நினைக்காமல், சட்டென ஒரு முடிவு எடுத்தார். அது தான், தானே முன்னின்று தமது கிராமத்தை சுற்றியுள்ள அனைத்துக் குளங்களையும் தூர்வாரி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை மேற்கொள்வது என்பது.
இதனையடுத்து தனது தந்தை கந்தசாமியிடம் பேசினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான கந்தசாமி, கடந்த 2020ஆம் ஆண்டு வரவணை ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவரும் இதற்கு பச்சைக் கொடி காட்ட, கரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, குளங்களை தூர்வாரும் தனது திட்டத்தை எடுத்துக் கூறி அதற்கு அனுமதி கேட்டார். ஆட்சியரும் பச்சைக்கொடி காட்ட கடகடவென தூர்வாரும் பணியைத் தொடங்கினார் நரேந்திரன் கந்தசாமி.
இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நரசிங்கமூர்த்தி கூறுகையில், "விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலும்பு. அந்த விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ள தண்ணீர், இன்று பருவமழையை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கரூரில் மிகப்பெரிய ஏரியாக உள்ள பஞ்சப்பட்டி ஏரி இன்று வறண்டு காணப்படுகிறது. இதனால் அதனை ஒட்டி உள்ள சிறு குளங்கள், முள் புதர்கள் மண்டி, விவசாய தரிசு நிலங்களாகவும் வீட்டுமனை பிரிவுகளாகவும் மாறி வருகின்றன. விவசாயத்தை நம்பி உள்ள விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். இவர்களுக்கு உதவிடும் வகையில் நரேந்திரன் கந்தசாமி மேற்கொண்டு வரும் குளம் தூர்வாரும் பணியினால் எங்கள் பகுதி மிக விரைவில் பசுமையான பகுதியாக மாற உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
அதே போல், சுண்டுகுழிப்பட்டி தமிழ்வாணன் என்பவர் கூறுகையில், "நீர் நிலைகளை மேலாண்மை செய்ய தவறியதால் இன்று விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு செல்லக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது. மக்களுக்கான குடிநீர் தேவையை கூட பூர்த்தி செய்வதற்கு, நிலத்தடி நீர்மட்டம் இல்லாததால் உப்பு நீரையே பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம். இதற்கு காரணம் நிலத்தடி நீரை சேமிக்காதது தான். நரேந்திரன் கந்தசாமி எங்களிடம் குளங்களை தூர்வாரி வருவதாக கூறினார். நான் எங்கள் பகுதியில் தூர்வாரிய குளத்தை சென்று நேரில் பார்த்தேன்.
நூறாண்டுகளுக்கு முன்னர் குளம் உருவாக்கப்பட்ட போது எப்படி இருந்ததோ, அதை விட இப்போது ஆழமாக உள்ளது. மழை நீரை சேமிக்கும் வழியை ஏற்படுத்தி தந்துள்ளார். இதனால் கிணற்று பாசன விவசாயிகளின் நீர்மட்டம் உயரும். எங்கள் பகுதி மீண்டும் பசுமையாக மாறும். உப்பிட்டவரை உயிருள்ளவரை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் எங்கள் விவசாய நிலங்களை மீண்டும் பசுமையாக மாறுவதற்காக, முயற்சி மேற்கொண்டுள்ள நரேந்திரன் கந்தசாமியை எங்கள் மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்" என்று பெருமையாக கூறினார்.
Share your comments