
‘இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்’ என்றார் காந்தி. விவசாயம் செய்யும் விவசாயிகளின் முதுகெலும்பே இன்று உடைக்கப்பட்டுள்ளது.
மழை ஒரு காரணம் என்றாலும், மிக முக்கியமான காரணம், விவசாயப் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காததுதான். இடையில் இருப்பவர்களுக்கே லாபம் கிடைக்கிறது. அவர்கள் முதலீட்டுக்கு ஏற்ற லாபமும் கிடைப்பதில்லை. உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் கிடைப்பதில்லை. இந்தியா இன்னும் விவசாய நாடுதான் என்பதை இந்திய அரசு மறந்துவிட்டது என்று அ. நாராயணமூர்த்தி கூறியிருப்பதை அரசு எச்சரிக்கையாகவே கொள்ள வேண்டும்.
இந்தியா விவசாய நாடுதான்
நாராயணமூர்த்தியின் ‘இந்திய விவசாயிகளைக் காப்பாற்றுங்கள்!’ என்ற கட்டுரை காலத்துக்கேற்ற ஒன்று.
விவசாயத்துக்குத் தேவையான இடுபொருட்களின் விலை அதிகமாகவும், விவசாய விளைபொருட்களின் விலை குறைவாகவும் இருக்கிறது.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து வயல்களில் உழைத்தும், விதைப்புக் காலத்திலிருந்து அறுவடைக் காலம் வரையில் செலவிடப்படும் உடல் உழைப்பையும் பணச் செலவையும் கணக்கிட்டால், மிஞ்சுவது நஷ்டமே. மழையின்மை, நிலத்தடி நீர்மட்டம் குறைவு போன்ற காரணங்களால், ஒவ்வொரு முறையும் ஏற்படும் நஷ்டத்தால் தனிநபர்களிடம் பெற்ற கடனுக்குரிய வட்டியைக்கூட அவர்களால் செலுத்த முடியவில்லை. நஷ்டம் ஏற்பட்டாலும் விவசாயத்தைத் திரும்பவும் ஏன் செய்கிறார்கள் என்றால், அவர்களுக்கு விவசாயத்தைத் தவிர வேறு வேலை எதுவும் தெரியாது. இந்தச் சூழலில்தான், இருக்கிற நிலத்தையும் விற்றுவிட்டு வேலை தேடி நகரங்களை நோக்கிக் குடும்பத்துடன் செல்கிறார்கள்.
இதுவும் முடியாதவர்கள் தற்கொலையைத் தேடுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் விவசாயிகளைக் காப்பதற்கு முக்கியமான பல நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். முதலாவதாக, விளைபொருட்களின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். நீர்நிலைகளைப் பராமரிக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தால், கிணற்றுப் பாசனம் மூலமாவது விவசாயம் செய்யலாம். இந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்றால், விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்கள் தொடரத்தான் செய்யும்.
Share your comments