மாட்டுச் சாணம் மிகச் சிறந்த கிருமி நாசினி. இதன் உன்னதத்தை உணர்ந்ததால்தான் ஆரம்பத்தில் இருந்தே வீட்டு வாசலில் தெளித்து ஆரோக்கியத்தை தம்வசப்படுத்தி இருந்தார்கள் நம் முன்னோர்கள்.
அதிலும் கொரோனா போன்ற நோய் தொற்று காலம்தான், மாட்டுச் சாணத்தின் மகத்துவமத்தை நன்கு உணர்த்தியிருக்கிறது.
சரி, இந்த சாணத்தை எப்படி மதிப்புக் கூட்டப்பட்டப் பொருளாக மாற்றி விற்பனை செய்வது என்பதைப் பார்ப்போம்.
ஜீவாமிர்தக் கரைசல்
10 கிலோ சாணம் 5 லிட்டர் கோமியம், 500 கிராம் நாட்டுச் சர்க்கரை, இவை அனைத்தையும் எடுத்து, 200 லிட்டர் தண்ணீரில் பெரியத் தொட்டியில் கலந்து வைத்துவிடவும்.
24 மணி நேரத்திற்கு பின்னர், அந்தக் கலவையில், வலப்புறம் 50 முறை, இடப்புறம் 50 முறை என மொத்தம் 100 முறை கலந்துவிடவும். பிறகு 48 மணி நேரத்தில் ஜீவாமிர்தக் கரைசல் ரெடியாகிவிடும்.
இந்தக் கரைசல் அனைத்துவகைத் தாவரங்களுக்கும் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது. மண்ணும் பொலபொலவென்று மாறும். மண் கழிவுகள், சாணம், நாட்டுச்சர்க்கரை இணைவதால் பல்லுயிர் பெருக்கம் உருவாகும்.
6மாதம் வரை வைத்துக்கொள்ளலாம். தினமும் காலையில் 100 முறை கலந்துவிடவும். கலக்கப் பயன்படுத்தும் குச்சியைக் கழுவி வெயிலில் காயவைத்து விடுவது கட்டாயம். ஏனெனில், அந்தக்குச்சியில் ஈக்கள் முட்டையிட்டு, அதன் புழுக்கள் உற்பத்தியாகக்கூடிய ஆபத்து உள்ளது.
பழைய டிரம்கள் (Old Drums)
குறைந்த செலவில் இதனைத் தயாரிக்கலாம். உபயோகப்பத்தியப் பழைய டிரம்களை வாங்கிக் பயன்படுத்தலாம். தற்போது பனம்பழம் சீசன் என்பதால், நாட்டுச்சர்க்கரைச் செலவைக் குறைப்பதற்காக, அதையும் பயன்படுத்தலாம்.
நாட்டுச்சர்க்கரையில் உள்ள பொருட்கள், பனம்பழத்திலும் உள்ளது. அதனால், 5 பனம்பழங்களைப் பயன்படுத்தினால், அது அரைக்கிலோ நாட்டுச்சர்க்கரையில் உள்ள சத்துக்களைக் கொடுத்துவிடும்.சாணத்தையும், கோமியத்தையும், சேகரித்து பனம்பழத்துடன் சேர்த்து ஜீவாமிர்தக்கரைசலைத் தயாரித்து விற்கலாம். குறைந்தபட்சம், ஒரு லிட்டர் அதிகபட்சமாக 10 லிட்டருக்கு விற்கலாம்.
மண்புழு உரம் (Vermicompost)
தாவரக்கழிவுகளை பெரியத் தொட்டியில் ஒரு அடிக்கு போட்டுக்கொண்டு, அதற்கு மேல் சாணிக்கரைசலைப் போட வேண்டும். அதன் பிறகு, தாவரக்கழிவு மீண்டும் சாணிக்கரைசல் இவ்வாறாக 5 அடுக்குகளாக சேமித்து வைக்க வேண்டும். அதாவது 3 அடி உயரத்திற்கு போட்டுவிட்டு, கடைசியாக 20 -30 மண்புழுக்களைப் போட்டு,தென்னங்கீற்று வைத்து மூடி வைக்க வேண்டும்.
தினமும் தண்ணீர் தெளிச்சு விடவேண்டும். 40 அல்லது 45வது நாட்களில் இருந்து புழுவினுடையக் கழிவுகள், குருனை போன்று மேலே வரத்தொடங்கும். அதை அள்ளி வைத்து மண்புழு உரமாக விற்பனை செய்யலாம். இதுவும் கிலோ 10 முதல் 12 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.
ஒரு மரக்கன்றுக்கு 250 கிராம் வரை மண்புழு உரத்தைப் பயன்படுத்த வேண்டும். இயற்கை விவசாயங்களைப் பொருத்தவரை, உரங்கள் அதிகமானாலும் எந்தவிதத் தீங்கும் ஏற்படுத்தாது.
பஞ்சகவ்யா
இதேபோல் சாணம், நெய், பால், தயிர், கோமியம் ஆகிய ஐந்தையும் கலந்து வைத்துவிடவேண்டும். தினமும் கிளறி விட வேண்டும். 15 நாட்களில் இந்த கரைசல் தயாராகிவிடும்.
தசகவ்யா
சாணம், நெய், பால், தயிர், கோமியம், பப்பாளி, வாழைப்பழம், இளநீர், நாட்டுச்சர்க்கரை, தேன் போன்ற 10 பொருட்களை ஒன்றாகக் கலந்து வைக்கவும். இந்த உரம் நல்ல மணமுள்ளதாக இருக்கும். தினமும் நன்கு கிளறி விடவும். 15 நாட்களில், தசகவ்யா தயாராகிவிடும். இந்த தசகவ்யா லிட்டர் 300 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சாணிக்குப்பை
சாணியை ஒருவருடம் வரை சேமித்துவைத்து, சாணிக்குப்பையாக விற்பனை செய்யலாம். இதனைத் தொழுஉரமாகத் தாவரங்களுக்கு, செடிகளுக்கு பயன்படுத்தலாம். இதுமட்டுமல்லாமல், எருவாகத் தட்டி எரிபொருளாகவும் விற்பனை செய்யலாம்.
சாணிக்கூடை
சாணியையும், காகிதத்தையும் சேர்த்து சாணிக்கூடையைத் தயாரித்து விற்பனை செய்யலாம். கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும் முறங்களிலும், சாணிப்பூச்சு இருக்கும். மூங்கில் கூடை, பிரம்புக்கூடை, முறம் போன்றவற்றையும் தயாரித்து விற்பனை செய்ய முடியும்.
தகவல்
ஜெயலட்சுமி
மேலும் படிக்க...
NLM: எருமைப்பண்ணையாராக மாற விருப்பமா? 50% வரை மானியம் அளிக்கிறது மத்திய அரசு!
கால்நடை வளர்ப்பில் அதிக லாபம் ஈட்ட வேண்டுமா? இந்த 7 வழிகளைக் கடைப்பிடியுங்கள்!
Share your comments