தாய்மை என்பது எப்போதுமேப் பாரபட்சம் காட்டாது. பச்சிளம் குட்டிக்கு பால் என வரும்போது, மற்றவற்றின் மகவுக்கும் மனமுவந்து பாலூட்டும் தன்மை படைத்தது. அந்த வகையில், பசு ஒன்று, ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுப்பது மற்றவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அரியலூரில் நடக்கிறது.
குறிப்பாக அனைத்து ஜீவராசிகளுக்கும் உலகில் பிறந்தவுடன் அளிக்கப்படும் முதல் உணவு என்றால் அதுத் தாய்ப்பால்தான். தாய்பால் கொடுக்கும் தாய்க்கும், அதை பருகும் குழந்தைக்குமான பந்தத்தை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ். ராணுவ வீரரான இவர் தற்போது பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்தினர், கோடங்குடி கிராமத்தில் உள்ள தங்களது வீட்டு தோட்டத்தில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகின்றனர்.
இதில் ஒரு ஆடு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 2 குட்டிகளை ஈன்றது. ஆனால் அந்த ஆட்டுக்குட்டிகளுக்கு கொடுக்கும் அளவிற்கு ஆட்டின் மடியில் பால் சுரக்கவில்லை. இதனால் ஆட்டுக்குட்டிகளின் நிலைமை பரிதாபத்திற்கு உரியதாக மாறியது.
அதே வீட்டில் உள்ள பசு ஒன்று கன்று ஈன்ற நிலையில், பால் கறக்கப்பட்டு வருகிறது. மாட்டின் பாலை பீய்ச்சி பாட்டிலில் அடைத்து ஆட்டுக்குட்டிகளுக்கு புகட்டி வந்தனர்.ஒரு சில நாட்கள் மட்டும் பாட்டிலில் பால் குடித்த ஆட்டுக்குட்டிகள், அதன்பின் நேரடியாக அந்த பசுவிடமே சென்று பால் குடிக்க தொடங்கின.
பசுவும் ஆட்டுக்குட்டிகளை தன் குட்டிகள் போல் பாவித்து அவற்றுக்குப் பால் ஊட்டுகிறது. பசுவின் கன்று அருகில் இருந்த போதிலும் ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுத்த பின்பே தனது கன்றுக்குட்டிக்குப் பசு பால் கொடுக்கிறது.
காண்பவரை நெகிழச்செய்யும் இந்த காட்சி தாய் உள்ளத்தின் உன்னதத்தை உணர்த்துவதாக உள்ளது.
மேலும் படிக்க...
Share your comments