சாமானியர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் புரதச்சத்து நிறைந்த இறைச்சிகள் பட்டியலில் முதலிடம் வகிப்பது கோழி இறைச்சி ஆகும். கடந்த ஆண்டுகளில் உலக அளவில் அதிகம் பேசப்பட்டது நுண்ணுயிர் எதிர் மருந்துகளின் அளவுக்கதிகமான பயன்பாட்டால் நுண்கிருமிகள் இம்மருந்துகளுக்கு எதிராக ஏற்படுத்தியிருக்கும் எதிர் திறன் ஆகும். எனவே, பொதுவாகவே உலகம் முழுவதும் ஆர்கானிக் பொருட்களுக்கான சந்தை விரிவடைந்தது பால், முட்டை, இறைச்சி என கால்நடை தொடர்பான பொருட்களிலும் ஆர்கானிக் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தியா போன்ற நாடுகளில் ஆர்கானிக் பொருட்கள் உற்பத்தி என்பது சற்று அரிதான விஷயம் என்பதால் நுண்ணுயிர் எதிர் மருந்துகள் அதாவது ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்காமல் வளர்க்கப்பட்ட கோழிகள் நல்ல சந்தை மதிப்பை பெறுகின்றன. ஆன்டிபயாடிக் ஃப்ரீ சிக்கன் அதாவது நுண்ணுயிர் எதிர் மருந்துகள் கொடுக்கப்படாத கோழி இறைச்சிக்கு பெரும் வரவேற்பு உள்ளது. பிராய்லர் கோழிகள் அதாவது இறைச்சி பயன்பாட்டுக்காக வளர்க்கப்படும் இறைச்சியின கோழிகள் நாட்டுக் கோழிகளை விட அதிகம் நோய்களால் பாதிக்கப்படுகின்றன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உணவு பொருட்களுடன் கலந்தோ அல்லது நோய்களின் போது சிகிச்சை அழிக்கவோ ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்படுவதால் நோய்க்கிருமிகள் இந்த மருந்துகளுக்கு எதிராக எதிர்ப்புத் திறனை உருவாக்கிக் கொள்கின்றன.
ஹெர்போ சிக்கன் (மூலிகை கோழி இறைச்சி) என்கிற பெயரில் இயற்கையாகக் கிடைக்கும் மூலிகை சார்ந்த பொருட்களை கோழிகளுக்கு கொடுத்து நுண்ணுயிர் எதிர் மருந்துகள் கொடுக்கப்படாமல் கோழிகள் வளர்க்கப்பட்டு அவை சந்தைப் படுத்தப்படுகின்றன. இவற்றின் விலை சாதாரண இறைச்சி கோழிகளை விட அதிகமாக இருந்தாலும் இவற்றை வாங்குவதற்கு பொது மக்களிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது.
மதுரையைச் சேர்ந்த கார்த்திகா என்கிற பட்டதாரிப் பெண் 48 வகையான மூலிகைகளை கோழிகளுக்கு கொடுத்து அவற்றை வளர்த்து சந்தைப்படுத்தி நல்ல லாபம் அடைந்ததாக கூறுகிறார். தந்தையும் மகளுமாக சேர்ந்து சோதனை முறையில் மேற்கொண்ட முயற்சி நல்ல பலன் தரவே இன்று பல மாவட்டங்களில் கிளை பரப்பும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சரவணா மூலிகை சிக்கன் என்ற பெயரில் பண்ணை தொடங்கியிருக்கும் இவர் நாமக்கல்லில் உள்ள கால்நடை பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கூடத்திலிருந்து அண்டிபயாடிக் பயன்படுத்தாத கோழி இறைச்சி என்ற சான்றிதழையும் பெற்றுள்ளார். நுண்ணுயிர் எதிர் மருந்துகள், செயற்கை வளர்ப்பு ஊக்குவிப்பிகள் எதுவும் பயன்படுத்தாமல் வேப்பம், கறிவேப்பிலை, நெல்லிக்காய், கீழாநெல்லி உள்ளிட்ட 48 வகையான மூலிகைகளை மட்டும் பயன்படுத்தி கோழிகளை வளர்த்து சந்தைப்படுத்தி வருகிறார் இந்த பட்டதாரி.
இதுபோன்று மூலிகைகள் கொடுத்து வளர்க்கப்படுகின்ற கோழிகள் மட்டும் அல்லாமல் மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் கோழிகளின் இறைச்சிக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. வர்த்தக ரீதியில் அடைத்துவைத்து, தீவனம் கொடுத்து, செயற்கை வளர்ச்சி ஊக்குவிப்புகள் அளித்து, நுண்ணுயிர் எதிர் மருந்துகள் கொடுத்து வளர்க்கப்படுகிற கோழிகளை விட மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படுகிற கோழிகளின் மவுசும் அதிகமாகவே உள்ளது. எனவே தான் புறக்கடை கோழி வளர்ப்பு முறையும் கிராமப் புற பெண்களுக்கு ஓர் வருமானம் தரும் தொழிலாக மாறி வருகிறது.
இதுபோன்ற ஆன்ட்டிபயாட்டிக் பயன்படுத்தாத பொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் ஏனைய விவசாயிகளும் இம்முறையை பின்பற்றலாம். ஆனால், ஆரம்பத்தில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, சிறிய அளவில் தொடங்கி அனுபவத்தின் மூலம் பாடம் கற்று பிறகு தொழிலை விரிவுபடுத்தலாம்.
சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
சென்னை-07
Share your comments