பண்பாடு பணிந்து!!!!
பாரம்பரியம் பறந்து!!!!
கலாச்சாரம் கலைந்து!!!!
தொழில்நுட்பம் மலர்ந்து!!!!
விஞ்ஞானம் வளர்ந்து!!!!
மெய்ஞ்ஞானம் தொலைந்து!!!!
பலஆண்டுகாலம் கழிந்து!!!!
சமுதாய முன்னேற்றும் விரைந்து!!!!
மனிதநேயம் இறந்து!!!!
புதுநாகரிகம் பிறந்து !!!!
இப்படி எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்த்துவிட்டன. ஆனால் சில வழிமுறைகள் நம் பராமரியத்தில் பின்னி பிணைத்து விடுகின்றன. அதில் கால்நடை வளர்ப்பும் ஒன்று.
இப்படி பரவிக்கிடக்கும் பல்வேறு கலாசாரங்களை பார்க்கும்போது கால்நடைகளுக்கு முக்கிய இடம் கொடுத்திருப்பதை நம்மால் உணர முடிகிறது. அதில் கறவைமாடுகளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. சிந்து சமவெளி நகரத்தில் கறவை மாடு வளர்க்கப்பட்ட சான்றுகள் கிடைத்துள்ளது. மனிதர்கள் தொன்று தொட்டு பசுக்களை வளர்த்து வந்ததை காட்டுகிறது. கீழடியிலும் மாடுகள் வளர்க்கப்பட்ட சான்றுகள் உள்ளன. ஹரப்பா காலம்தொட்டு மாடுகள் வளர்க்கப்பட்ட சான்றுகள் கிடைத்துள்ளன. அசோகா அரசர் வாழ்ந்த காலகட்டத்தில் பெரிய மாட்டு மந்தைகள் இருந்ததாகவும் அதை அடிக்கடி பார்வையிட அரசர் சென்றதாகவும் சான்றுகள் உள்ளன. அப்பொழுதே பாலை கொண்டு பல வகையான பால் பொருட்கள் செய்யப்பட்டதற்கான சான்றுகளும் இருக்கின்றன.
விவிலியத்தில் மாட்டின் மடியில் உள்ள நான்கு காம்புகள், நான்கு நதி௧ளுடன் ஒப்பிடப்பட்டுள்ளன.அந்த நதிகளே எல்லோரையும் வாழ வைத்ததாகவும் கூறப்படுகின்றன.
எகிப்தியர் முறைபடி தாய் ஹதோர்(mother hathor)புனித பசுவாக கருதப்பட்டது. அதன் மடியில் இருந்தே அகண்டம் (milky way) வந்ததாகவும், அதுவே தினமும் சூரியனுக்கு பிறப்பு கொடுப்பதாகவும் கருதப்பட்டுள்ளது.
ரோமானியர்கள் மாட்டின் கொம்பினை அள்ளி தரும் கடவுள் “horn of plenty” என்று அழைத்தனர்.
முதலில் அதை இறைச்சிக்காக வளர்த்தாலும் பின்னர் அதை தெய்வமாக கருதி வளர்க்க ஆரம்பித்தனர். இந்தியாவில் உள்ள 60 சதவீதம் பேர் இன்றும் கறவை மாடு வளர்ப்பை தங்கள் வாழ்வாதாரம் தரக்கூடிய தொழிலாக செய்து வருகின்றனர். கறவை பசுக்களை ஏழைகளின் நடமாடும் வங்கிகள் என்று கூறலாம்.
மாடுகளில் இருந்து பெறப்படும் பால்,சாணம்,கோமியம், நெய், தயிர் ஆகியவை மக்களுக்கும்,விவசாயத்துக்கும் பெரியளவில் உபயோகப்படுகின்றன. பஞ்சகவ்வியம் இயற்கை விவசாயத்தில் பெரும் பங்கு அளிக்கிறது.
உழவு தொழிலுக்கு உற்ற நண்பனாக நம் காளைகளை பயன்படுத்தி அதற்கு நன்றி கூறும் வகையில் மாட்டு பொங்கல் என்று தனியாக ஒரு தினம் ஒதுக்கி மாடுகளை நாம் கொண்டாடுவதை நாம் இன்றும் பார்க்கமுடிகிறது. தமிழ் நாட்டில் பேர் போன ஜல்லிக்கட்டு நம் பாரம்பரிய காங்கேயம் , புலிக்குளம் மற்றும் உம்பளாச்சேரி காளைகளுக்கு பெருமை சேர்க்கிறது.
கர்நாடகத்தில் கம்பாளா என்ற திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதில் எருதுகளை கொண்டு தண்ணீரில் ஓட்டப்பந்தயம் வைக்கப்படுகிறது.
வடநாட்டில் கோவர்த்தன பூஜை நடத்தப்படுகிறது. இதில் மாட்டின் சாணத்தை கொண்டு உணவு கிடைப்பதால் அதற்கான நன்றி செலுத்தும் பூஜையாக இது கொண்டாடப்படுகிறது.
நேப்பாளத்தில் வருடம் ஒரு முறை வீதிகளில் மந்தை மந்தையாக மாடுகளை கொண்டு வந்து அவர்களின் முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கஜித்ரா(Gaijatra) என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது.
கோமாதா/காமதேனு என்று அழைக்கப்படும் சுரபி எனப்படும் பசு எல்லா மாடுகளுக்கும் தாயாக கருதப்படுகின்றன. இந்த பசு என்ன வேண்டுமானாலும் அளிக்கக்கூடியது என்றும், இது சண்டை போடும் திறன் வாய்ந்தது மட்டுமின்றி இதனின் உடலில் வெவ்வேறு தெய்வங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
என்னதான் பணப்புழக்கம் அதிகரித்து அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினாலும், இன்றைக்கும் புதுமனை புகுவிழா அன்று பசுவும் அதன் கன்றும் வீட்டுக்குள் முதல் அடியை எடுத்து வைக்கும் சாஸ்திரம் கடைபிடிக்கப்படுகிறது.
காளை வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக ஜல்லிக்கட்டு ,மஞ்சு விரட்டு போன்ற பல வீர விளையாட்டுகள் உள்ளன.
இவைகள் அனைத்தும் மனிதர்கள் வீரத்தை மட்டும் போற்றாமல் அந்த காளை இனத்தை காக்கும் விதமாக அமைந்துள்ளன. இந்த விளையாட்டுகள் அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே “ஏறு தழுவுதல்” என்ற பெயரில் விளையாட பட்டுள்ளது என்று நிரூபிக்கும் விதமாக கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.
டோடா (Toda) மக்கள் தமிழகத்தின் நீலகிரி மலைகளில் வசிக்கும் ஒரு மலைவாழ் பழங்குடியினர்.அனைத்து வீடுகளிலும் எருமை மாடுகள் வளர்க்கப்படுகின்றன.
அனைத்து பால் நடவடிக்கைகளுக்கும், பாதிரியார்கள் நியமனமும் சடங்குகள் மூலமே செய்யப்படுகின்றன.அதுமட்டுமின்றி அந்த இனத்தில் யாராவது ஒருவர் இறந்து விட்டார்கள் என்றால் ஒரு எருமை பலி கொடுக்கப்படுகின்றது. அவர்களின் கூற்றுப்படி இறந்தவர்களுக்கு துணையாக இந்த எருமைகளை அனுப்பி வைக்கிறார்கள். இப்பொழுது இந்தப் பழக்கம் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த எருமை இனமே இவர்களால் பாதுகாக்கப்படுகின்றன.
இப்படி பல தரப்பில் நமக்கு உற்ற நண்பனாக இருக்கும் கறவை மாடுகளையும், அதை வளர்க்கும் விவசாயிகளையும் காப்போம். கால்நடை போற்றுவோம்.
முனைவர். சா. தமிழ்க்குமரன்
(கால்நடை நண்பன் JTK)
கால்நடை மருத்துவர் / ஆராய்ச்சியாளர் /பண்ணை ஆலோசகர்
தொடர்புகொள்ள : kalnadainanban@gmail.com
மேலும் தகவலுக்கு:https://www.youtube.com/c/kalnadainanbanjtk
தன்வந்தினி.பா
B.V.Sc& A.H
இளநிலை கால்நடை மருத்துவ பட்ட படிப்பு மாணவி
Share your comments