கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் அதிர்ச்சி அடையும் வகையில் ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது நியூசிலாந்து அரசு. ஆடு மற்றும் மாடுகளை வளர்ப்போருக்கு வரி விதிக்கும் திட்டம் தான் அது. எதற்காக ஆடு, மாடு வளர்த்தால் வரி விதிக்க வேண்டும்? அப்படியென்றால் ஆடு, மாடுகளை வளர்க்க கூடாதென நியூசிலாந்து அரசு நினைக்கிறதா என்றால், அது தான் இல்லை. அதாவது, பசுமை இல்ல வாயுக்களில் முதன்மையான மீத்தேன் வாயுவை கட்டுப்படுத்தும் முயற்சிக்காக செம்மறி ஆடுகள், மற்றும் மாடுகளை வளர்ப்போருக்கு வரி விதிக்கும் திட்டத்தை நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது.
விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளிடம் இருந்து வெளிவரும் மீத்தேன் வாயுவுக்கு வரி வசூலிக்கும் திட்டத்தை அமல்படுத்தும் முதல் நாடு இதுதான்.
மீத்தேன் வாயு (Methane Gas)
கிட்டத்தட்ட 50 இலட்சம் மக்கள்தொகை கொண்ட நியூசிலாந்து நாட்டில், சுமார் ஒரு கோடி கால்நடைகள் மற்றும் 2.6 கோடி செம்மறி ஆடுகள் உள்ளன. நாட்டில் வெளியேற்றப்படும் மொத்த பசுமை இல்ல வாயுக்களில், ஏறக்குறைய பாதியளவு விவசாயத்தில் இருந்து தான் வருகிறது. இதில் வெளியாகும் முக்கியமான வாயு மீத்தேன். இந்தத் திட்டத்தின் படி, வருகின்ற 2025 ஆம் ஆண்டு முதல் கால்நடைகளின் வாயு வெளியேற்றத்திற்கு, விவசாயிகள் பணம் செலுத்த வேண்டும். தீவனச் சேர்க்கைகள் மூலம் உமிழ்வைக் குறைக்கும் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். அதே சமயம், பண்ணைகளில் மரங்களை நடுவதன் மூலம் உமிழ்வை ஈடுகட்டலாம்.
வரிவிதிப்பு (Tax)
இந்த வரிவிதிப்புத் திட்டத்தை உண்மையில் யார் செயல்படுத்துகிறார்கள் என இன்னும் சரியாக செதுக்கப்பட வேண்டும். ஆகவே, அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய விஷயங்களை முடிவு செய்யவேண்டியுள்ளது என, பால் உற்பத்தியாளரும், நியூசிலாந்து விவசாயிகள் கூட்டமைப்பின் தேசியத் தலைவருமான நிஆண்ட்ரூ ஹோகார்ட் கூறினார்.
இத்திட்டத்தின் மூலம் திரட்டப்படும் பணம், விவசாயிகளுக்கான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் ஆலோசனை சேவைகளில் முதலீடு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என நியூசிலாந்து நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பசுமை இல்ல வாயுக்களில், கரியமில வாயுவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது மீத்தேன் வாயு தான்.
மேலும் படிக்க
மீன்பிடி மானியம் இரத்து: எதிர்ப்பு தெரிவித்த இந்திய மீனவர்கள்!
Share your comments