கன்று ஈன்ற உடன் மாடு முதலில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படுகிறது. இந்த சீம்பாலில் தான் கன்றுகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்புப் புரதங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. எனவே, கன்று ஈன்ற உடன் கன்றுகளுக்கு இந்த சீம்பாலை புகட்ட வேண்டும்.
கன்று ஈன்ற பின் சில மணி நேரத்திற்கு மட்டுமே அதன் செரிமானப் பாதை இந்த நோய் எதிர்ப்புப் புரதங்களை உட்கிரகிக்கும் தன்மையை கொண்டிருக்கும். எனவே, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக கன்றுகளுக்கு இந்த சீம்பாலை கொடுத்துவிட வேண்டும்.
சீம்பால் கொடுக்கும் முறை மற்றும் அதன் முக்கியத்துவம்
- கன்றுக்குட்டிக்கு ஏதேனும் உடல்ரீதியாக குறைபாடு இருந்தால் அதனால் சீம்பாலை அருந்த முடியாத சூழல் இருக்குமானால் சுகாதாரமான முறையில் பாலை கறந்து கன்றுகளுக்கு பால்புட்டி, பாட்டில் அல்லது இதர உபகரணங்களைக் கொண்டு இந்த சீம்பாலை புகட்டி விட வேண்டும்.
- இதன் மூலம் கன்றுகளின் நோய் எதிர்ப்புத் திறன் மேம்படுவதோடு கன்று அதன் குடலில் தங்கியிருக்கும் முதல் மலத்தை வெளியேற்றும்.
- கன்றுகளுக்கு அதன் உடல் எடையில் பத்தில் ஒரு பங்கு சீம்பாலை நாளொன்றுக்கு புகட்ட வேண்டும். இதனை ஒரே நேரத்தில் கொடுக்காமல் நாளொன்றுக்கு 4-5 பாகங்களாகப் பிரித்து சிறிது இடைவெளி விட்டு புகட்ட (குடிக்க வைக்க) வேண்டும்.
- கன்றுகளுக்கு தாய்ப்பசுவால் பால் புகட்ட முடியாத சூழலில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட சீம்பாலையோ அல்லது பிற மாடுகளிடம் இருந்து பெறப்பட்ட சீம்பாலையோ கொடுக்கலாம்.
- சாதாரண பாலை விட சீம்பாலின் விலை அதிகமாக இருப்பதாலும் நுகர்வோரிடைய அதிக வரவேற்பு இருப்பதாலும் இந்த சீம்பால் கன்றுகளுக்கு கொடுக்கப்படாமல் சந்தைபடுத்தப்படுகின்றன. இவ்வாறாக சீம்பால் கொடுக்காமல் வளர்க்கப்படும் கன்றுகளின் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்துக் காணப்படுவதால் எளிதில் இவை நோய்த் தொற்றுக்கு உள்ளாக நேரிடும். எனவே, பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இன்றைய கன்றுகளே நாளைய கறவையின் மூலாதாரம் என்பதை உணர்ந்து கன்றுகளுக்கு முறையாக சீம்பால் கொடுத்து வளர்ப்போம். நிறைவான லாபம் பெறுவோம்.
Alimudeen S
Madras Veterinary College,
TANUVAS, Chennai.
9677362633
Share your comments