இந்தியாவின் கிராமப்புர பொருளாதாரத்தில் வெள்ளாடு வளர்ப்பானது மிகவும் தவிர்க்க முடியாத முக்கிய அங்கமாகும். இந்தியாவில் மொத்தம் 148.88 மில்லியன் ஆடுகள் 2019 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இருக்கிறது. இது 2012 ஆம் ஆண்டின் 19 வது கால்நடைகள் கணப்பெடுப்பிலிருந்து 10.14%. அதிகரித்துள்ளது. வெள்ளாடானது இந்தியாவின் மொத்தக் கால்நடைகளின் விகிதத்தில் 27.8% என்ற அளவில் உள்ளது. இது ஏறக்குறைய கால்நடைகளின் எண்ணிக்கையில் 3 ல் 1 பங்கு ஆகும்.
கிராமப்புறங்களில் வெள்ளாடுகளின் எண்ணிக்கை கடந்த கணப்பெடுப்புடன் ஒப்பிடுகையில் 10.35% அதிகரித்துள்ளது. அதே தருனத்தில், நகர்புரங்களிலும் வெள்ளாடு வளர்ப்பானது கிராமப்புறங்களைப் போலவே நல்ல வரவேற்பைப் பெற்று அதிகரித்து (5.78%) வருவதை கணக்கெடுப்பு காட்டுகிறது.
தமிழ்நாடானது இந்திய அளவில் 7வது இடத்தில் 9.98 மில்லியன் ஆடுகளுடன் உள்ளது.
ஆடு வளர்ப்பானது, கடந்த 10 ஆண்டுகளாக ஆடுகளைக் கொட்டில் மற்றும் பரண் மேல் வளர்ப்பதற்கு இளைய மற்றும் தொழில் முனைவோரிடையே அதிக வரவேற்பு பெற்று வருவதை நம்மால் காணமுடிகிறது. இது ஒருபுறம் பெரிய வாய்ப்பாகக் கருதப்படும் நிலையில் மறுபுறம் ஆட்டுப்பண்ணைகளில் ஆட்டுக்குட்டிகளின் இழப்பு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் பெரும்பாலான பரண்மேல்/ அதிதீவிர முறையில் வளர்க்கப்பட்ட ஆட்டுப்பண்ணைகள் சில காரணங்களால் கைவிடப்பட்டு மூடப்பட்டது நாம் அறிந்தது. அவற்றிற்கான முக்கிய காரணமாக பெரும்பாலும் கூறப்பட்டது குட்டிகளின் இறப்பு. அதுவும் பிறந்து 30 நாட்களுக்குக் கீழ் வயதுள்ள குட்டிகளின் இழப்பு பண்ணையாளர்களுக்கு பேரிழப்பாக அமைந்திருந்தது என்பது பெரும்பான்மை பண்ணையாளர்களின் அனுபவ கருத்தாக இருந்தது. மேலும் இவ்வகை நோய் அறிகுறிகளுடன் ஏறக்குறைய 15 - 35% குட்டிகள் இறப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நோய்க்குறிப்பு
- இது குட்டி பிறந்த சில நாட்களில் இருந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
- பெரும்பாலும் 4 நாட்கள் முதல் 28 நாட்களுக்கு உட்பட்ட குட்டிகளே அதிகம் இறக்கும்.
- திடமான அதிக எடை கொண்ட குட்டிகள் பெரும்பாலும் அதிக அளவில் பாதிப்படைவதை காணலாம்.
- ஒற்றை (அ) இரட்டையாக பிறந்த குட்டிகளையே தாக்குகிறது.
- அதிகம் பால் கறக்கும் ஆட்டினதில் குட்டிகளில் பரவலாக காணப்பட்டது,
- பலவகை நிறக்கழிச்சல்,
- நிலைகுலைந்த (ஒருங்கிணைப்பில்லா) நடை,
- பெரும்பாலும் எந்த மருத்துவச் சிகிச்சைக்கும் கட்டுப்படுவதில்லை
நோய் காரணிகள்
- அதிகமாக பால் உற்பத்தி செய்யும் ஆடுகளின் குட்டிகள் அதாவது நாளொன்றுக்கு 500 மி.லி கூடுதலாகப் பால் உற்பத்தி செய்யும் ஆடுகள் ஈன்ற குட்டிகளில் 57.95 % மட்டுமே தப்பிப் பிழைத்தது மற்ற அனைத்து குட்டிகளும் இந்நோயால் அதிக அளவில் உயிரிழந்ததை காணமுடிந்து.
- அதிக எடை கொண்ட குட்டிகளை பெரும்பாலும் அதிக அளவில் பாதிப்படையச்செய்கிறது (>3 கி.கி).
- ஒற்றை (அ) இரட்டையாக பிறந்த குட்டிகள் அதிகமாக இருக்கும் பாலை தனித்துக் குடிப்பதால்.
- போதிய இடவசதி கொடுக்காமை
- நோய் தடுப்பாற்றல் குறைந்து இருப்பது
- நீண்ட நாட்கள் ஓரிடத்தில் வளர்க்கும் போது அதிக அளவில் நோய்க்கிருமிகள் தங்கு தரையில் சேர்வதால்.
- அதிக எடை கொண்ட தாய் ஆடுகளுக்கு (>40 கி.கி) தனித்துப் பிறக்கும் குட்டிகள்.
- இந்த நோய் நிலை எந்த பாலினத்தையும் குறிப்பிட்டுத் தாக்கவில்லை மாறாக ஆண், பெண் ஆகிய இரண்டையும் சமமான அளவில் பாதிக்கிறது.
நோய் அறிகுறிகள்
- கழிச்சல் (மஞ்சள், பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில்)
- பால் குடிக்க சிரமப்படுதல்
- சோர்ந்து காணப்படும்
- பசியின்மை
- வயிறு உப்பி வலியில் துடிக்கும்
- பக்கவாட்டில் சாய்ந்து படுத்து தலையை தூக்க முடியாமல் சிரமப்படும்.
- சத்தம் எழுப்புதல்
- மது தொடர்ச்சியாக அருந்திய நபர் நடந்து செல்வது போல் குட்டியின் நடையில் தோன்றுவதால் இதனை இவ்வாறு இந்த நோயினை அழைக்கின்றார்கள். (Drunken Kid Disease)
- ஒன்று இரண்டு நாட்களில் இறந்து விடும்.
- தலையை வயிற்றின் பக்கம் சாய்த்து வைத்துக்கொள்ளும்.
- எழுந்து நடக்க சிரமப்பட்டு இறந்து விடும்.
தடுப்பு முறைகள்
- குட்டியை தாயிடம் இருந்து பிரித்து வைக்க வேண்டும்.
- கட்டுப்படுத்தப்பட்ட பாலூட்டம். குட்டிகளை பிரித்து குட்டிகளுக்கான அறையில் வைத்துப் பாதுகாக்கலாம். மேலும், இவ்வாறு பிரிப்பதன் மூலம் பாலூட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. நாளொன்றிற்கு மூன்று முறை மட்டும் பால் ஊட்ட அனுமதிக்க வேண்டும்.
- தாய் ஆட்டுக்கு சினை பருவத்தில் கடைசி மாதத்தில் துள்ளுமாரி நோய்க்கான தடுப்பூசி கொடுப்பது.
- அதிகமாக பால் கொடுக்கும் தாய் ஆட்டிலிருந்து பாலை கறந்து பால் குறைவாக உள்ள ஆட்டின் குட்டிகளுக்கு புட்டி பால் கொடுப்பது.
- குட்டிகள் விளையாட போதுமான இடவசதி ஏற்படுத்தி கொடுப்பது.
- குட்டிகளை வைக்கும் இடம் அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
நீண்ட காலத்திற்கு ஒரே இடத்தில் ஆடுகளை வளர்க்கும் சூழலில் ¼’’ அளவிற்கு மேல் மணலை அகற்றிப் புதுப்பிக்கலாம். மேலும், புது மணலுடன் சுண்ணாம்பு கலப்பதால் நோய்த்தாக்கும் பெரிய அளவில் கட்டுப்படும்.
மேற்கூறிய நோய் அறிகுறிகளுடன் குட்டிகள் இறக்குமாயின் இறப்பரி சோதனை செய்து இறப்பிற்கான காரணத்தை விரைந்து கண்டறிய வேண்டும்.
மருத்துவர். சு. முத்துக்குமார்,
துறைசார் வல்லுநர்- கால்நடை மருத்துவம்.
வேளாண்மை அறிவியல் நிலையம்,
சிக்கல், நாகப்பட்டினம்.
Share your comments