நமது தமிழகமானது ஆண்டொன்றில் ஏறத்தாழ 300 நாட்களுக்குக் குறையாமல் வெப்பத்தாக்கத்தில் இருக்கும் ஒரு வறண்ட வெப்பமண்டலப்பகுதியாகும். இங்கு சராசரி குளிர்கால குறைந்தபட்ச வெப்பத்தாக்கமானது 18°C ஆகும். மீதநாட்களில் ஏறக்குறைய 30°C அளவில் வெப்பத்தாக்கமானது இருக்கும் ஓர் நில அமைப்பை கொண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் நமது நாட்டில் விவசாயம் பருவமழை போதிய அளவில் இல்லாததால் பாதிக்கப்பட்ட போது கால்நடை பராமரிப்பு மற்றும் பால் பண்ணை தொழில் ஓர் முக்கியமான வாழ்வாதாரமாக இருந்து வந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே அத்தகைய வாழ்வாதாரம் காக்கும் பால் பண்னைத் தொழிலில் கோடைக்கால கறவைமாடு பராமரிப்பு என்பது மிக முக்கியமானது.
கறவை மாடுகளில் வெப்பத்தாக்கத்தால் ஏற்படும் இழப்பு
- பாலின் அளவு குறையலாம்
- பாலின் தரம் பாதிக்கும்
- சினைக்கு வருவது மற்றும் காலத்தே சினை பிடிப்பதில் பிரச்சனை
- தீவனம் உட்கொள்வது குறைவது
- நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
- எளிதில் மடி நோய் தாக்குதலுக்கு ஆட்படுதல்
- மூச்சு திணறல் சார்ந்த சுவாச கோளாறுகள்.
- தீவிரத்தாக்கத்தின் போது பசு இழப்பு கூட நேரிடலாம்.
- இளங்கன்றுகளின் வளர்ச்சி பாதிக்கிறது.
- இளங்கன்றுகளில் இழப்பை ஏற்படுத்துகிறது.
- அதிக செரிமானக்கோளாறுகள் ஏற்பட வழிசெய்கிறது.
கோடைக்கால பராமரிப்பு
- தீவன மேலாண்மை
- கொட்டகை மேலாண்மை
- பொதுச் சுகாதார மேலாண்மை
தீவன மேலாண்மை
- தீவனம் உட்கொள்வதை அதிகப்படுத்த எரிசக்தி – (கார்போஹைட்ரேட்-மாவுச்சத்து) குறைந்த அடர் தீவனங்களைக் கொடுப்பது நல்லது.
- வெயில் நேரங்களில் அடர் தீவனம் கொடுப்பதைத் தவிர்த்து காலை 9 மணிக்கு முன்பாகவும் மாலை 4 மணிக்கு பிறகும் கொடுக்கலாம்.
- அடர் தீவனத்தைப் பகுத்துப் பிரித்துக் கொடுப்பது நல்லது. எந்த ஓர் சூழ்நிலையிலும் 2.5 கி.கி (நேரம்) தாண்டிவிடக்கூடாது.
- பொதுவாகத் தீவனத்தைப் பகலில் 40% அளவிலும், இரவில் 60% அளவிலும் கொடுப்பது நல்லது.
- அதிக எண்ணெய்/ கொழுப்புச் சத்து உள்ள மூலப்பொருட்களை அடர்தீவனமாக வெயில் நேரங்களில் அளிப்பதைத் தவிர்க்கவும்.
- தரமான பசுந்தீவனம் கொடுப்பது மிகவும் சிறந்தது.
- வெப்பத்தாக்கத்தில் இருந்து பசுக்களைத் தீவனத்தில் சில கரிம தாதுப்பொருட்களையும், உயிர்ச்சத்துகள் E மற்றும் C சேர்த்துக் கொடுப்பது நல்லது.
- வெயில் நேரங்களில் செரிமானக்கோளாறுகள் ஏற்படாமல் இருக்க அடர்தீவனத்துடன் சமையல் சோடா 50 கிராம்/நாள் சேர்த்துக் கொடுப்பது நல்ல பயன்களை தரும்.
- TMR கொடுக்கப்படும் பண்ணைகளில் TMR ஈரப்பதம் 40% அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
- குளிர்ந்த நீர் எப்பொழுதும் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.
கொட்டகை மேலாண்மை
- வெப்பமான பகுதியில், மாட்டுக்கொட்டகை நீள அச்சானது கிழக்கு – மேற்காக அமைக்க வேண்டும்.
- மாட்டுக்கொட்டகையில் போதிய அளவில் மைய மற்றும் பக்கவாட்டு உயரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
- மாட்டுக்கொட்டகையானது நல்ல காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் நிறைந்த இடத்தில் அமைப்பது சிறந்தது.
- மாட்டுக்கொட்டகையின் மையக்கூரை இருபக்க உயர்த்தப்பட்டதாக (Full Monitor) இருந்தால் மிகவும் நல்லது.
- பண்ணையில் கழிவுகள் தேங்காதவாறு உடனுக்குடன் தூய்மை செய்திடல் வேண்டும்.
- போதுமான இடவசதி அனைத்து பசுக்களுக்கும் கொடுப்பது அவசியம்.
- கொட்டகை குளிர்விப்பான் (அ) பசு குளிர்விப்பான் இருப்பின் இருமுறை 11-12 மற்றும் 2-3 மணியளவில் தண்ணீர் தெளிப்பதன் மூலம் ஓரளவு வெப்பத்தாக்கத்தை குறைக்கலாம்.
- மாட்டுக்கொட்டகையைச் சுற்றிலும் போதிய அளவில் நிழல் தரும் உரமான மரங்களை வளர்க்கவேண்டும்.
- மேற்கூரையின் வெப்பம் கடத்துத்திறனைக் கருத்தில் கொண்டு கூரைக்கான பொருளைத் தேர்வு செய்து பயன்படுத்துவது சிறந்தது.
- கூரையின் மேற்புரத்திலும்/உட்புறத்திலும் ஏதேனும் வெப்பம் குறைவாகக் கடத்தும் பொருட்களை கொண்டு வெப்பத்தாக்கத்தை குறைக்கலாம்.
- கூரையின் மேற்புரத்திற்கு வெண்மை நிறம் பூசலாம் அல்லது வெண்மை நிற தகர மேற்கூரைகளை பயன்படுத்தலாம்.
- வெயிலான நேரங்களில் சணல் சாக்குகளைத் தண்ணீரில் நனைத்துத் தொங்க விடுவதின் மூலம் குளிர்ந்த காற்றைப் பண்ணையில் பெற்றிடலாம்.
பொதுச் சுகாதார மேலாண்மை
- வெப்பம் மிகுதியான நேரங்களில் கால்நடைகளை தொந்தரவு செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- போதுமான அளவு சுத்தமான தண்ணீர் கொடுப்பது அவசியம்/ எப்பொழுதும் தண்ணீர் இருப்பது நன்று. பெரும்பாலும் குளிர்ந்த நீரே கொடுக்கவேண்டும்.
- தரமான தீவனத்தை கொடுப்பது நல்லது.
- தரமற்ற பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- வெப்பத்தாக்கம் குறைந்த நேரத்தில் பால் கறக்கலாம் இதனால் அதிகம் பால் கறக்கும் பசுக்களின் உடலில் இருந்து வெளியிடப்படும் வெப்பமானது குறைகிறது.
- வெயில் நேரங்களில் பசுக்களை குளிர்ந்த நீரால் குளிப்பாட்டுவது சிறந்த பராமரிப்பாகும்.
- பண்ணையில் நோய்த்தொற்றை தவிர்க்க சிறந்த உயிர் பாதுகாப்பு உக்திகளை கையாளவேண்டும்.
- அதிகம் வெப்பம் கடத்தும் பொருட்களை கொண்டு பண்ணை கூரை அமைக்கப்பட்டிருப்பின் உட்புறமாக பொய்க்கூரை அமைப்பது வெப்பத்தாக்கத்தை குறைக்கும்.
- மாட்டை நிழற்பாங்கான பகுதியில் கட்டவேண்டும்.
- வெயில் நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்கவும்.
- கால்நடை மருந்தகங்களுக்கு ஓட்டிச்சொல்ல வேண்டுமெனில் வெயில் குறைந்த நேரங்களில் ஓட்டிச்செல்லவும்.
- திட்டமிட்டு, போதிய பசுந்தீவனம் உற்பத்தி செய்து கொடுக்கவும் இது நல்ல செரிமானத்திற்கும், அதிகப்படியான உற்பத்திக்கும் உதவும்.
- நீண்ட தூரம் மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லுவதை தவிர்க்கவும்.
- பண்ணையைச் சுற்றி பசுமையான புல் தரைகளை உருவாக்கவும். இது பண்ணையில் வெப்பத் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
- நம்முடைய சூழலுக்கு ஏற்றாற் போல் கால்நடைகளைத் தேர்வு செய்து வளர்ப்பது அவசியம்.
- முளைக்கட்டிய தானிய வகைத் தீவனங்களை பயன்படுத்துங்கள்.
மேற்கண்ட பராமரிப்பினை கையாளுவதின் மூலம் கோடைக்கால வெப்பத்தாக்கத்தின் பிடியில் இருந்து பண்ணையை காத்து லாபம் ஈட்டிடலாம்.
மருத்துவர் சு. முத்துக்குமார்,
துறைசார் வல்லுநர்- கால்நடை மருத்துவம்
வேளாண்மை அறிவியல் நிலையம்- சிக்கல், நாகப்பட்டினம்.
Share your comments