மண்ணில் ஊட்டச்சத்தின் நிலை, பயிரிடும் முறை ஆகியவற்றைப் பொறுத்து உரமிடும் முறை நிர்ணயிக்கப்படுகிறது. மண்ணில் இடுதல் மற்றும் இலைவழி தெளித்தல் ஆகியவை இரு முக்கிய உரமிடும் முறைகளாகும்.
மண்ணில் இடுதல் (Soil Application)
இம்முறையில் பரந்து தூவுதல், குறிப்பிட்ட இடத்தில் இடுதல், பயிர் வரிசையில் இடுதல் உழவுசாலில் இடுதல், நீர்வழி இடுதல், அடிமண்ணில் இடுதல் மற்றும் அரைவட்டக்குழியில் இடுதல் ஆகியவை அடங்கும்.
பரந்து தூவுதல் (Broadcasting)
இது எல்லா பயிர்களுக்கும் சீரான அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைத்திட வயல் பரப்பு முழுவதும் தூவும் முறையாகும். இம்முறையில் பெரும்பாலும் குருணை வடிவில் உள்ள உரங்கள் தூவப்படுகின்றன.
குறிப்பிட்ட இடத்தில் இடுதல்
பயிருக்கு அருகாமையில் குவியலாக உரம் இடப்படுகிறது. இதனால் பயிருக்குக் கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் உடனடியாகவும், முழுமையாகவும் கிடைக்கும். மேலும் உரம் வீணாவது குறைக்கப்படுகிறது.
பயிர் வரிசையில் இடுதல் (Band Application)
வரிசை விதைப்பு அல்லது நடவு மேற்கொண்டுள்ள பயிர்களில் வரிசைக்கருகில் இம்முறையில் உரமிடப்படுகிறது. இம்முறையில் அனைத்து பயிர்களுக்கும் சீரான அளவில் உரம் கிடைக்கும்.
உழவு சாலில் இடுதல் (Furrow Application)
உரங்களை அடியுரமாகப் பயன் படுத்தும்போது கலப்பைக்குப் பின்னால் உழவுசாலில் உரமிடப்படுகிறது. மேலும் இம்முறை வரிசை விதைப்பு அல்லது நடவு செய்யப்பட்ட பயிருக்கு மேலுரமிடவும் ஏற்றது.
நீர் வழி இடுதல் (Fertigation)
பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பாசன நீர் மூலமாக இடப்படுகிறது. சொட்டு நீர் பாசனம் இம்முறைக்கு மிகவும் சிறந்தது.
அடிமண்ணில் இடுதல் (Sub-soil Placement)
பயிரின் வேர் வளர்ச்சியைத் தூண்டவும், ஊட்டச்சத்துக்கள் வீணாவதைத் தடுக்கவும் இயந்திரங்களைப் பயன்படுத்தி மண்ணின் அடி கண்டங்களில் உரமிடப்படுகிறது.
அரைவட்டக் குழியில் இடுதல் (PitApplication)
இது மரப்பயிர்களின் வேர்ப்பகுதியில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் அரைவட்ட வடிவ குழியை ஏற்படுத்தி ஊட்டச்சத்துக்களை இடும் முறையாகும்.
இலைவழி தெளித்தல் (Foliar Application)
பயிரூட்டச் சத்துக்களை நீரில் கரைத்து தெளிப்பான்கள் மூலமாக இலைப்பரப்பில் படுமாறு தெளிக்கலாம். இம்முறையில் நேரடியாக இலைகள் சத்துக்களை எடுத்துக் கொள்வதால் வீணாவது குறையும். பொதுவாக நுண்ணூட்டச் சத்துக்களை பயிருக்குக் கொடுக்க இம்முறை ஏற்றது.
Share your comments