1. கால்நடை

தரமான தீவன விதைகள் உற்பத்தி செய்யும் முறை

KJ Staff
KJ Staff

குறைந்த கால்நடை உற்பத்திக்கு தீவனப் பற்றாக்குறை மற்றும் தரம் குறைந்த தீவனங்கள் முக்கிய காரணங்கள் ஆகும். தரமான தீவனப்பயிர் உற்பத்திக்கு, தரமான தீவனப்பயிர் விதைகள் அல்லது பதியப்பொருட்கள் தேவை. ஆனால், விதைகள் மற்றும் பதியப்பொருட்களை உழவர்களே தெரிவு செய்தோ அல்லது மற்ற சாலையோரமாக வளரும் பயிர்கள் அல்லது தங்கள் நிலத்திலிருந்து விளையும் பயிரிலிருந்து தொடர்ந்து விதையினை பெற்றும் தீவனப்பயிர் சாகுபடி செய்வது நடைமுறையில் உள்ளது. இவ்வாறு செய்யும் பொழுது காலப்போக்கில் மரபுத்தூய்மை குறைந்து, வீரியம், விளைச்சல் முதலியன பாதிக்கப்படுகின்றன. மேலும், மரபு வழியில் விதைகளை எடுக்கும் பொழுது விதைகளில் விதையல்லாத பொருட்கள் கலப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாகின்றது. எனவே, நல்ல, தூய்மையான வீரிய விதைகள் கிடைக்காததால், விவசாயிகள் தீவனப்பயிர் சாகுபடியை பெரிய அளவில் உற்பத்தி செய்வது கடினமாகின்றது. தரமான, வீரிய விதைகள் இருப்பின், தீவனப்பயிர் சாகுபடி மேலோங்கும். எனவே, தீவனப்பயிர் விதை உற்பத்தியில் பயிர் மேலாண்மையின் பங்கு மிகவும் முக்கிய அங்கமாகிறது.

நிலத்தேர்வு

  • விதை உற்பத்திக்கு நிலம் தேர்வு செய்யும் பொழுது, தேர்வு செய்த இடம், அதிக விதை மகசூல் பெறுவதற்கு ஏற்ற இடமாக இருத்தல் அவசியம். அதிக விதை மகசூல் பெறுவதற்கு தண்டு அடர்த்தி, பூவிலிருந்து கிடைக்கப்பெறும் விதை எண்ணிக்கை மற்றும் அறுவடை சதவிகிதம் ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும்
  • நிலத்தினை தேர்வு செய்யும் பொழுது, அவ்விடத்தின் காலநிலை, ஒளிக்காலம் மற்றும் மண்ணின் தன்மை முக்கிய பங்கு வகிக்கின்றது. புல்வகை தாவரங்களுக்கு அதிக மண் ஈரம் கொள்ளளவு கொண்ட மண் வகையும், பயறுவகை தாவரங்களுக்கு குறைந்த மண் வளம் கொண்ட மண்வகையும் போதுமானதாகும். மண்ணில் தகுந்த கார அமிலத்தன்மையும், தக்க வடிகாலும் பயிர் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.
  • பயிர் வளர்ச்சிப் பருவத்தில் போதுமான கதிர்வீச்சு, வெப்பநிலை மற்றும் மழையும், பூக்கும் பருவத்தில் போதுமான ஒளிக்காலம் மற்றும் அதிக வெப்பமும், முதிர்வடையும் பொழுதும், அறுவடையின் பொழுதும், அமைதியான, வறண்ட நிலையும் தேவை என கண்டறியப்பட்டுள்ளது.
  • விதை உற்பத்திக்கு தேர்வு செய்யப்பட்ட நிலம் தான்தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்கக்கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினரால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருக்க வேண்டும். மேலும், அவ்விடம் களைகள் அற்ற இடமாக இருத்தல் அவசியம். அவ்வாறல்லாமல், நன்றாக உழவு செய்யாத, களைகள் கொண்ட நிலத்தில் விதைக்கும் பொழுது, குறைந்த பயிர் எண்ணிக்கை, குறைந்த தூர்கள் மற்றும் வேறுபட்ட காலங்களின் விதை முதிர்ச்சி போன்ற பிரச்சினைகள் உண்டாக்கும். எனவே, நிலத்தினை நன்றாக உழுது சமன்படுத்த வேண்டும்.

புல்வகைகள்

புல்வகை தீவனப்பயிர்கள் வேறுபட்ட காலநிலைகளில் வளரும். பூக்கும் தன்மை, தனிகத்தின் அனுசரிப்பு தன்மை (Species adaptability) மற்றும் புல்வகைகளை பொறுத்து மாறுபடும். புற்கள் பெரும்பாலும் 600 முதல் 1500 மி.மீ மழையளவு உள்ள இடங்களில் நன்றாக வளரக்கூடியவை. வெப்ப மண்டலங்களில் வளரக்கூடிய புல்வகைகள் உறைபனியை தாங்கக்கூடியவை அல்ல. தக்க வடிகால் உள்ள பெரும்பாலான மண் வகைகள் புல் வகைகளுக்கு ஏதுவானதாகும். சத்துப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்திடல் அவசியம். பெரும்பாலான புற்கள் நடுநிலைத் தாவர வகையினை சார்ந்ததால், வருடத்தில் எந்த காலத்திலும் பயிர் செய்ய ஏற்றதாகும். பயறு வகைப் பயிர்களில் குறுகிய நாள் மற்றும் நீர் அளவு, பூக்கும் தன்மையை கணிக்கும். குறைந்த மழையளவு அல்லது குறைந்த நீர்ப்பாசனம், பூக்கள் ஒருமித்து பூப்பதற்கு உதவி செய்கிறது. நான்கு முதல் ஆறு மாத கால ஈரமான வானிலையும், சராசரி மழையளவாக 800 - 2000 மிமீ மழையும் அவசியம்.

தீவனப்பயிர்களின் வளர்ச்சி வகை

தீவனப்பயிர்களின் வளர்ச்சி முறையும், பயிர் மேலாண்மையும், விதை உற்பத்தியினை பாதிக்கின்றது. நேரான வரம்புடை வளர்ச்சியுடைய பயிர்களில், விதை உற்பத்தி கதிர்களின் வளர்ச்சியால் நிர்ணயிக்கப்படுகிறது. 60-85 சதவிகிதம் பூக்கள் (முயல்மசால்) விதைகளாகின்றன. படர் மற்றும் பின்னுகொடி வரம்பில்லா வளர்ச்சியுள்ள பயிர்களில், (சிராட்ரோ) பூக்கள் பூப்பதும், வளர்ச்சியும் நடந்து கொண்டே இருக்கும்.

விதைப்பு காலம்

  • மழையளவை கொண்டு பெரும்பாலான தீவனப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. பருவத்தே பயிர் செய்தல், நல்ல அறுவடைக்கு வித்திடுகிறது. சிறிய விதைகளில் ஆழ விதைப்பது பயிர் முளைப்பினை தடுத்து விடும். பெரும்பாலான தீவனப்பயிர்கள் சிறியதாக இருப்பதால், 1 செ.மீ மேல் ஆழமாக விதைக்கக்கூடாது. முளை சூழ்தசை வித்திலை மேல்தண்டு அல்லது கீழ்தண்டிற்கு, முளைப்பு வெளியே வந்து, இழைகள் மூலம் ஒளிச்சேர்க்கை செய்கின்ற வரையில் உணவளிக்கவல்ல வகையில் விதைக்கும் ஆழம் இருத்தல் அவசியம்.

விதைப்பு முன் விதை நேர்த்தி

  • விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்க விதைப்பு முன் விதை நேர்த்தி செய்யப்படுகிறது.
  • ஒரு கிலோ விதைக்கு 200 மி.லி என்ற அளவில் அடர் கந்தக அமிலம் கொண்டு 4 நிமிடங்கள் நேர்த்தி செய்யும் போது விதையின் கடினத்தன்மை நீங்கப்பெற்று நல்ல முளைப்புத் திறனைக் கொடுக்கும் (அல்லது) நன்றாக கொதித்த நீரை 10 நிமிடங்கள் கீழே வைத்து பின் அதில் விதைகளை போட வேண்டும். 4 நிமிடங்கள் கழித்து நீரை வடித்துவிட்டு விதையை நிழலில் உலரவைத்து விதைக்கலாம்.
  • விதைகளில் ஊட்டமேற்றுவதற்காகவும், பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புக்காகவும் ரைசோபியம், சூடோமோனாஸ், டிரைகோடெர்மா போன்ற உயிர் உரங்கள் கொண்டும் விதை நேர்த்தி செய்யலாம்.

உர நிர்வாகம்

பயிர் வளர்ச்சியினை தூண்டுவதற்கும், விதை உற்பத்திக்கும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் அளித்தல் அவசியம். நீண்ட கால பயிராக இருப்பின் ஒவ்வொரு அறுவடைக்கு பின்னும் தழைசத்தினை அளித்தல் அவசியம்.

அறுவடை

  • புல்வகை தீவனப்பயிர்களில் விதைகள் கொட்டுவதற்கு முன் அறுவடை செய்திடல் வேண்டும். முதிர்ந்த விதைகளை, பூங்கொத்துகளை ஒன்றோடொன்று கைகளால் பிடித்து உராய்ந்து எடுக்கலாம். கையால் தேய்க்கும் பொழுது, விதைகள் மலர்ப்பிரிவுகளில் ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும். மேலும், விதைகளின் வண்ணம் விதைகள் முதிர்ச்சியடையும் பொழுது மாறுபடும் (உதாரணம்: பிரக்கியாரியா டெகும்பன்ஸ்)
  • (பயறுவகைத் தீவனப்பயிர்களில்) வரம்புடை வளர்ச்சியுடைய பயிர்களில், பூக்கும் தருணம் முதல் விதை கொட்டும் தருணம் வரையுள்ள நாட்களைக் கொண்டு அறுவடை காலம் கணக்கிடப்படுகிறது. ஆனால், வரம்பிலா வளர்ச்சியுடைய பயிர்களில் அதிக பூக்கும் நாட்கள் உள்ளதால் தக்க அறுவடை காலத்தை கணக்கிடுவது கடினம். இத்தகைய பயிர்களில் முற்றிய நெற்றுகளை கையால் அறுவடை செய்தல் நன்று (உதாரணம் தட்டைப்பயறு)
  • விதை சுத்திகரிப்பு - விதை சுத்திகரிப்பின் போது நன்கு முற்றாத வற்றிய உடைந்த மிகச்சிறிய விதைகளையும் மற்றும் விதையுடன் கலந்துள்ள பிற இனப் பயிர்கள், கல், மண் மற்றும் தூசி முதலியவற்றையும் அகற்ற வேண்டும்
  • எனவே, கால்நடைப் பண்ணையாளர்கள், தீவனப்பயிர் சாகுபடி செய்வதோடு, தக்க பயிர் மேலாண்மை செய்து தீவனப்பயிர் விதைகளையும் உற்பத்தி செய்தால், தீவனப்பயிர் விதை தேவையை பூர்த்தி செய்வதோடு, நல்ல வருமானமும் ஈட்டலாம்.

சேமிப்புக்கு முன் விதை நேர்த்தி

விதையை சுமார் 12 விழுக்காடு ஈரப்பதத்தில் காய வைத்து காப்டான் அல்லது திரரம் 75 விழுக்காடு நனையும் தூளில் 100 கிலோ விதைக்கு 70 கிராம் என்ற அளவில் 500 மில்லி லிட்டர் தண்ணில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்த விதைகளை சாதாரண துணிப்பைகளில் சுமார் ஒர் ஆண்டிற்கு மேலும் சேமித்து வைக்கலாம். விதைகளை 8 விழுக்காடு ஈரப்பத அளவிற்கு நன்கு காய வைத்து பின்பு விதை நேர்த்தி செய்து காற்றின் ஈரம் புகா வண்ணம் பாலிதீன் பைகளில் அடைத்து சேமித்தால் ஒன்றரை ஆண்டு காலம் சேமிக்க முடியும்.

 

 

English Summary: Forage crops seed production Published on: 01 December 2018, 05:25 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.