கால்நடை வளரப்பில் அதிக இலாபம் பெற சரியான திட்டமிடல் அவசியம். அதுமட்டுமின்றி, கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைத் தடுத்து சரியான சிகிச்சையை தகுந்த நேரத்தில் அளிப்பது அவசியம். தமிழ்நாடு நீர்வளத்திட்டத்தின் படி, கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளது, கால்நடை மருத்துவக் குழு. இதனால் எண்ணற்ற கால்நடை வளர்ப்போர் பயனடைவார்கள்.
தமிழ்நாடு நீர்வளத்திட்டம், பேஸ் 2
குறைந்த நீரில் அதிக மகசூல் (Yield) என்ற நோக்குடன், தமிழ்நாடு நீர்வளத்திட்டம், பேஸ் 2, செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம், உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், நீராதாரம், வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், தமிழ்நாடு வேளாண் பல்கலை, வேளாண் விற்பனை, கால்நடை (Livestock) மற்றும் பால்வளத்துறை உள்ளிட்ட துறைகள் அடங்கி உள்ளன. பாசன சங்கங்கள் அமைத்து, பாசனதாரர்கள் பங்கேற்பு மூலம், நீர் பாசன முறையை மேம்படுத்துதல் மற்றும் நவீன நீர் சேமிப்பு பாசன தொழில் நுட்பங்கள் பயன்படுத்ததுதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கம்.
கால்நடை மருத்துவ சேவை முகாம்
நாமக்கல் மாவட்டத்தில், நான்கு வகையான உபவடி நிலப்பகுதிகள் தமிழ்நாடு நீர்வளத்திட்டம், பேஸ் 2ல் தேர்வு செய்யப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருமணிமுத்தாறு, கரைப்பொட்டனாறு, மேட்டூர்-நொய்யல், அய்யார் என, நான்கு உபவடி நிலப்பகுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறுது. ஒவ்வொரு உபவடி நிலப்பகுதியில், 25 பேர் கொண்ட கறவைப்பசு வளர்ப்போர் விருப்பக்குழு உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு, திட்டத்தின் முக்கியத்துவம் குறித்த பயிற்சி (Training) அளிக்கப்படுகிறது. கூடுதல் பகுதிகளை, பசுந்தீவன சாகுபடிக்கு (Cultivation) கொண்டு வந்து, பசுந்தீவனம் கிடைப்பதை அதிகரிக்க செய்கிறது. கால்நடை நிலையங்களுக்கு தேவையான அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி, தரமான மருத்துவ சேவை (Medical Service) வழங்கப்படுகிறது.
மலடு நீக்கம் மற்றும் முழுமையான கால்நடை மருத்துவ சேவை முகாம் நடத்தப்படுகிறது. கன்று மற்றும் மடிவீக்க நோய் மேலாண் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, மூன்று நாட்களாக, பல்வேறு பகுதிகளில், 60 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில், குடற்புழு நீக்கம், தாது மாவு கட்டி, 300 கன்றுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 288 மாடுகளுக்கு, மடி வீக்கம் தடுப்பு முறைகள் (Prevention methods) அளிக்கப்பட்டதுடன், 108 மாடுகளுக்கு, மடி வீக்க மருத்துவமும் அளிக்கப்பட்டது. இம்முகாமை, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல் துவக்கி வைத்தார். அந்தந்த பகுதியில் நடந்த முகாமில், துணை இயக்குனர், உதவி இயக்குனர்கள், கால்நடை மருத்துவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கூண்டு முறையில் நாட்டுக்கோழி வளர்த்தால், கூடுதல் இலாபம்!
கால்நடைக்கு தீவிரமாய் பரவும் அம்மை நோய்! போர்க்கால நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
Share your comments