1. கால்நடை

வெள்ளாடு வளர்ப்பு

KJ Staff
KJ Staff
Goat Breeding

ஆட்டுக் கொட்டில் பராமரிப்பு

ஆடுகளுக்கு எளிமையான கொட்டில் அமைப்பே போதுமானது. வெள்ளாடுகளைப் பொறுத்தவரை கடும் மழை, வெயில், பனி உண்ணி, மற்றும் பேன் போன்ற ஒட்டுண்ணி ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் அளவு எளிய கொட்டகை அமைப்பே போதுமானது. கிராமங்களில் பெரும்பாலும் மரத்தடி (அ) குடிசை நிழலில் தான் ஆடுகளை வளர்க்கின்றனர்.

ஆட்டுக்குட்டிகள் வளர்ந்து ஓடும் வரை ஒரு பெரிய  கூடையைப் போட்டு மூடப்படுகின்றன. பொதுவாக ஆண் மற்றும் பெண் குட்டிகள் ஒன்றாகவே அடைக்கப்படுகின்றன.

வெள்ளாடுகளின் பால், இறைச்சி, உற்பத்திக்கு ஏற்றவாறு உள்ள ஒரு எளிமையான அமைப்பே போதுமானது. நகரங்களில் வசிப்போர் அல்லது அதிக அளவில் ஆடுகளை வளர்ப்போர் நல்ல காற்றோட்டமுள்ள, வடிகால் வசதியுடன், தேவையான இட வசதியுள்ள கொட்டகை அமைத்தல் நலம்.

கிடா ஆடுகளின் கொட்டில்

கிடா ஆடுகளுக்கென தனியான கொட்டில் அமைத்து பாதுகாக்க வேண்டும். ஒரு கிடாவிற்கு 2.5 மீ / 2.0 மீ அளவுள்ள நீர் மற்றும் தீவனத் தொட்டியுடன் அமைந்த கொட்டில் போதுமானது, இரண்டு கிடாக்களை ஒரே கொட்டிலில் அடைத்தல் கூடாது. அதுவும் குறிப்பாக இனச்சேர்க்கைக் காலத்தில் அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்வதைத் தவிர்க்க, தனித்தனியே அடைப்பதே சிறந்தது.

தனி அறைக் கொட்டில்

 0.75 மீ அகலமும் 1.2 மி நீளமும் கொண்ட மரத்தால் அல்லது உலோகத்தாலான ஒரு தனி அறை போன்ற பகுதி தனிக்கொட்டில் எனலாம். அதுவே இட அளவு 2 மீ ஆக இருந்தால் ஆடுகள் நீண்ட நேரம் தங்க வசதியாக இருக்கும்.

 

சினை ஆடுகள் மற்றும் குட்டிகுளுக்கான அறை

குட்டிகள் தனியான அறையில் கட்டப்படாமல் சுதந்திரமாக வைக்கப்பட்டிருக்க வேண்டும்.  அதே சமயம் தாய்ஆடுகளை அனுமதியின்றி அணுகாதவாறு வைக்கப்பட்டிருக்க வேண்டும். குட்டிகளின் கொட்டில் உயரம் 1.3 மீ கதவும், சுவர்களும் இருக்கவேண்டும். அல்லது கூடை, உருளை போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தலாம். 1.8 மீட்டர் அளவுள்ள இடத்தில் 10 குட்டிகள் வரை அடைக்கலாம். இந்த கொட்டில் கன்று ஈனும் சமயத்தில் பெட்டை ஆடுகளைச் சுதந்திரமாக விடவும் உதவும். இம்முறையில் கொட்டகை அமைப்புச் செலவு மற்றும் ஆட்கூலிகள் குறையும்.

 

திறந்த வெளி அமைப்பு

12 மீ x 18 மீ அளவுள்ள திறந்த வெளி அமைப்பானது 100-125 ஆடுகளுக்குப் போதுமானது. இந்தத்திறந்த வெளியானது நன்கு கம்பிகளால் பின்னப்பட்ட வேலிகளைக் கொண்டிருக்க வேண்டும். நிழல் தரும் மரங்கள் ஆங்காங்கு வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். நிறைய கம்பிகள் கொண்டு வேலி நன்கு பின்னப்பட்டதாக இருக்கவேண்டும். ஏனெனில் ஆடுகள் வேலிகளில் உராயும் தன்மை கொண்டவை. கூர்மையான கம்பிகள், நீட்டிக்கொண்டு இருந்தால் அவை ஆடுகள் உரசும் போது காயங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 1 x 1 மீ அளவுள்ள இரும்பாலான 60 செ.மீ உயரமுள்ள உருளை போன்ற அமைப்புகள், திறந்தவெளி மைதானத்திற்கு ஏற்றவை.

பிரித்து வைக்கும் கொட்டில்

மந்தை பெருகப் பெருக இடப்பற்றாக்குறை ஏற்படலாம். இதற்கென ஆடுகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது பிரித்து வைப்பதற்கென 3.6 மீ x 5 மீ அகலமுள்ள ஒரு தனிக்கொட்டில் அவசியம். இதை இரண்டு அல்லது மூன்று அறைகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் நீர் மற்றும் தீவனத் தொட்டில்கள் அமைக்கவேண்டும்.

 

தீவனத் தொட்டி

வெள்ளாடுகள் கீழே விழுந்த தீவனங்களையோ, புற்களையோ சாப்பிடாது. எனவே 5 செ.மீ தடிமனுள்ள மரப்பலகையாலான ஒரு பெட்டியை தீவனம் கட்டும் கயிற்றின் கீழே வைக்கவேண்டும். ஆடுகள் தீவனம் சாப்பிடும் போது கீழே விழும் துண்டுகளை இப்பெட்டியில் சேகரித்தால், மண்படாத அவற்றை மீண்டும் ஆடுகள் உண்டுவிடுவதால், தீவனம் வீணாகாமல் தடுக்கப்படுகிறது.

மேய்ச்சல் முறைகள்

கயிற்றில் கட்டி மேய்த்தல்

குறிப்பிட்ட இடத்தில் சில ஆடுகளை மேய விடுவதற்கு, இம்மேய்ச்சல் முறையே சிறந்தது. கொட்டிலின் வெளியில் வைத்து குறைந்த எண்ணிக்கையுள்ள அடுகளை மரத்திலோ அல்லது வேறு சில கட்டைகளிலோ கயிறு கொண்டு கட்டி மேய்க்கும் முறையில் அந்த இடங்களின் புற்கள் நன்கு மேயப்படுகின்றன.

 

இம்முறையில் காலை மற்றும் மாலை வேளைகளில் மேய்த்தல் சிறந்தது. கயிற்றின் நீளம் 35-50 செ.மீ நீளம் இருக்கவேண்டும். மற்ற மதிய நேரங்களில் கொட்டிலில் அடைத்து வைக்கலாம். இம்முறையில் நோய்களைப் பரப்பும் ஒட்டுண்ணிகள் போன்றவை பரவுவது குறைவு.

 

மேய்ச்சல் முறை

8-10 மணி நேரம் மேய்ச்சலுக்கு அனுப்பி இரவு நேரங்களில் மட்டும் பட்டிகளில் அடைப்பது.

 

கொட்டில் முறை

நாள் முழுவதும் கொட்டகையினுள் அடைத்து தீவனம் கொடுத்து வளர்ப்பதாகும். இம்முறையில் ஆழ்கூளங்களை போட்டு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை எடுத்து விட்டு புதிய ஆழ்கூளத்தை நிரப்பினால் சிறுநீர் மற்றும் சாணத்தின் அமோனியா வாயு ஆடுகளை அதிகம் பாதிக்காது.

 

மேய்ச்சல் கலந்த கொட்டில் முறை

4-5 மணி நேரம் வரை மேய்ச்சலுக்கு அனுப்பிப் பிறகு கொட்டகையில் வைத்துத் தேவையான பசுந்தீவனங்களையும், அடர் தீவனங்களையும் அளிக்கவேண்டும்.

 

அறுவடை முடிந்த வயலில் ஆடுகளை மேய்த்தல்

மலைத்தோட்டப் பயிர்கள் அல்லது அறுவடை முடிந்த வயல்களில் ஆடுகள் மேயச்சலுக்கு விடப்படுகின்றன. இதனால் ஆட்டின் கழிவுகள் வயல்களில் விழுவதால் மண்ணிற்கு நல்ல சத்து கிடைக்கிறது.

 

தீவன மேலாண்மை

பிற கால்நடைகளைப் போல், ஆடுகளும் நல்ல தீவனமும் பராமரிப்பும் இருந்தால் அதிக பால் உற்பத்தி கொடுக்கும். ஆனால் கிராமங்களில் மேய்ச்சலுடன் நிறுத்தி விடுகின்றனர். சரியான அளவு அடர் தீவனங்களும், பயறு வகைகள் அளித்தால் ஆடுகளிடமிருந்து நல்ல இறைச்சியும், பாலும் கிடைக்கும்.

தீவன ஊட்டம்

ஆடுகள் தனிப்பட்ட தீவன ஊட்டத்தையே விரும்புபவை. ஆடுகளுக்குக் கொடுக்கும் தீவனங்கள் அடிக்கடி மாற்றப்பட்ட, சுத்தமான, புதியவையாக இருத்தல் வேண்டும். ஏதேனும் கெட்ட துர்நாற்றத்துடனோ, அழுக்கு மண் கலந்தோ இருந்தால் அல்லது மரக்கிளை, சுவர், நட்டு வைத்த குச்சி போன்ற ஏதேனும் ஒன்றில் கட்டித் தொங்கவிடலாம். இவ்வாறு வைப்பதன் மூலம், புற்கள் அல்லது தழைகள் கீழே விழுந்து வீணாகாமல் இருக்கும். மேலும் அவ்வப்போது சிறிது சிறிதாக ஆடுகளுக்குத் தீவனமளிக்கலாம். அதிக அளவில் ஒரே நேரத்தில் கொடுக்கும் போது பாதித் தீவனம் ஆடுகளின் காலில் மிதிபட்டு வீணாகிறது.

   

ஆடுகளும் அசை போட்டு உண்ணக்கூடியவை. இவை பயறு வகைத் தாவரங்களை அதிகம் விரும்பி உண்கின்றன. இவை சோளம், கம்புச் சோளம், பதப்படுத்தப்பட்ட தீவனங்கள், வைக்கோல் போன்றவற்றை விரும்பவதில்லை. இவை காட்டுப்புற்களை அதிகம் உண்பதில்லை. ஆனால் குதிரை மசால், துவரை, நேப்பியர் புல், தர்ப்பைப்புல், சோயாபீன், முட்டைக்கோஸ், காளிஃபிளவர் போன்றவற்றின் இலை தழைகளையும் செஞ்சி மற்றும் சில பூண்டுகளையும் நன்கு உண்கின்றன. இவைத் தவிர புளியமரம், வேம்பு, இலந்தை போன்றவற்றின் தழைகளையும் முங்பீன் போன்ற பயிறுகளையும் உண்ணும் இயல்புடையவை.

 

தேவையான ஊட்டச்சத்துக்கள்

ஆடுகளுக்கு 3 முக்கியக் காரணங்களுக்காக ஊட்டசத்துத் தேவைப்படுகிறது. அவை பராமரிப்பு உற்பத்தி (பால், இறைச்சி, உரோமங்கள்) மற்றும் சினைத் தருணத்தில் தேவைப்படுகிறது.

 

பராமரிப்புக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள்

ஆடுகளின் பரிணாம வளர்ச்சிக்கு கால்நடைகளை விட அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே ஆடுகளுக்கு 25-30 சதவிகிதம் பராமரிப்பு அதிகம் தேவைப்படுகிறது. பராமரிப்புத் தேவை 0.09 சதவிகிதம் செரிக்கக்கூடிய பண்படாத புரதம் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய கலவையாக இருக்கலாம். மற்ற மாடுகள், எருமைகள், செம்மறி ஆடுகளுடன் ஒப்பிடும் போது வெள்ளாடுகள் மட்டுமே மிக அதிகமாக அதன் உடல் எடையில் 6.5 - 11 சதவிகிதம் அளவ உணவு எடுக்கக்கூடியது. மற்ற கால்நடைகள் அவற்றின் உடல் எடையில் 2.5-3 சதவிகிதம் வரை மட்டுமே தீவனம் உட்கொள்ளும். எனவே சரியான அளவு தீவனம் கொடுத்தால் மட்டுமே வெள்ளாடுகள் அதன் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும்.

 

உற்பத்திக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள்

>3 சதவிகிதம் கொழுப்புச் சத்துள்ள 1 லிட்டர் பாலை உற்பத்தி செய்ய 43 கிராம் செரிக்கக்கூடிய பண்படாத புரதமும், 200 கி ஸ்டார்ச்சும் தேவை. அதே போல் 4.5 சதவிகிதம் கொழுப்புச் சத்துள்ள 1 லி பாலை உற்பத்தி செய்ய 60 கி செரிக்கக்கூடிய பண்படாத புரதமும், 285 கிராம் ஸ்டார்ச் சத்துக்களும் தேவைப்படுகிறது.

 

50 கிலோ எடையுள்ள 2 லி பால் (40 சதவிகிதம் கொழுப்புச் சத்துடன்) உற்பத்தி செய்யக்கூடிய ஆட்டிற்கு 400 கிராம் அடர் தீவனமும், 5 கிலோ குதிரை மசால் போன்ற தீவனங்கள் அளிக்கவேண்டும். 12-15 சதவிகிதம் புரதச் சத்துள்ள தீவனங்கள், உலர் புற்கள் அளிக்கப்படவேண்டும்.

தாதுக்கலவை

தாதுக்கள் உடற்செயல் இயக்கம், எலும்புக்கூடு, பால் உற்பத்தி போன்றவற்றில் முக்கியப் பங்கு வகிப்பதால் சரியான அளவு தாதுக்கள் அளிக்கவேண்டியது, அவசியம். இதில் மிக முக்கியமானவை கால்சியம் மற்றும் பாஸ்பரஸ். 50 கிலோ எடையுள்ள ஆட்டிற்கு கால்சியம் 6.5 கி, பாஸ்பரஸ் 3.5 கி தேவைப்படுகிறது. அடர் தீவனத்தில் 0.2 சதவிகிதம் என்ற அளவில் தாதுக்களைக் கலந்தும் அளிக்கலாம்.

சாதாரண உப்பு

சாதாரண உப்பு பாலில் சோடியம், குளோரைடு மற்றும் இரும்புச் சத்துக்களை அதிகரிக்கச் செய்கிறது. எனவே ஆடுகளுக்கு சாதாரண உப்பு தருவது மிகவும் முக்கியம். ஒரு கட்டி உப்பை ஆடுகள் நாக்கில் நக்குமாறு தருவது மிகுந்த நன்மை பயக்கும் அல்லது தீவனத்துடன் 2 சதவிகிதம் உப்பை கலந்துக் கொடுக்கலாம். 

 

விட்டமின் மற்றும் தடுப்பு மருந்துகள்

விட்டமின், ஏ, ஈ மற்றும் டி போன்றவை ஆடுகளுக்கு அத்தியாவசியமானவை. வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகள் தேவையான விட்டமின்களைத் தயாரித்துக் கொள்ளும். அது போக பசும்புற்களில் விட்டமின் ஏ நிறைந்திருக்கும் மக்காச் சோளம், சதையுள்ள பசுந்தீவனம் பிற விட்டமின்களைத் தரும். வளரும் கன்றுகளுக்கு விட்டமின்கள் மிகவும் அவசியம்.

ஏரோமைசின், டெராமைசின் வளரும் குட்டிகளுக்கு நல்ல தோற்றத்தைத் தருவதோடு, நோய்த் தாக்குதலைக் குறைத்து, வளர்ச்சியை ஊக்கிவிக்கும்.

பராமரிப்பு முறைகள்      

வெள்ளாடுகள் கவனிப்பும் பராமரிப்பும்

சினை ஆடுகள் பராமரிப்பு

  1. சினை ஆடுகளை மந்தையிலிருந்து பிரித்துத் தனியே பராமரித்தல் வேண்டும்.
  2. சரிவிகித ஊட்டச்சத்துக்கள், எளிதில் செரிக்கக்கூடிய தீவனமளித்தல்.
  3. சினை ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக் கொள்ள அனுமதிக்கக்கூடாது.
  4. சினையுற்றபின் கரு கலைந்த ஆடுகளுடன் சினை ஆடுகள் எக்காரணம் கொண்டும் கலந்து விடுதல் கூடாது.
  5. குட்டி ஈனுவதற்கு முன்பு ஆட்டின் பின்பாகத்தில் மடியைச் சுற்றிலும் உள்ள முடியையும் வாலையும் வெட்டி விடுதல் நல்லது.
  6. அடுத்த குட்டி ஈனுவதற்கு 6-8 வாரங்கள் முன்பே பால் கறப்பதை நிறுத்தி விடவேண்டும்.

 

 

பிறந்த குட்டிகளின் பராமரிப்பு

  • குட்டி பிறந்தவுடன் பஞ்சு அல்லது பழைய துணி கொண்டு குட்டியின் வாயையும் மூக்கையும் நன்கு துடைக்கவேண்டும். குட்டி மூச்சுவிட எளிதாகுமாறு வாயைச்சுற்றயுள்ள திரவத்தை அகற்றவேண்டும்.
  • பின்னங்கால்களையும் பிடித்து தலைகீழாக இருக்குமாறு குட்டியை சில நொடிகள் பிடித்திருக்கலாம். இது மூச்சுக் குழல் பாதையை சுத்தம் செய்ய உதவும்.
  • குட்டி பிறந்த அரை மணிக்குள் தானாகவே எழுந்து தாயிடம் பால் குடிக்கவேண்டும். இல்லாவிடில் அது எழுந்து நடக்க உதவி செய்தல் வேண்டும்.
  • தாய் ஆட்டுக்குட்டியை நாக்கினால் தடவி விட அனுமதிக்கவேண்டும். தடவி விடுவதால் குட்டியின் மேலுள்ள உறை போன்ற திரவத்தை எடுத்து விடும்.
  • தொப்புள் கொடியின் மறு நுனியை டின்ச்சர் (அ) அயோடின் கொண்டு நனைத்தல் வேண்டும். இவ்வாறு 12 மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை செய்யவேண்டும்.
  • முதல் அரை மணி நேரத்திற்குள் குட்டியை சீம்பால் குடிக்க வைக்க வேண்டும். குட்டி தானாக குடிக்க முடியாவிட்டால் காம்பை எடுத்து வாயில் வைத்துப் பாலை பீய்ச்சி விடுதல் நலம்.
  • புதிதாகப் தொழில் பிறந்த குட்டிகளைத் தனியே வைத்துப் பராமரிக்க வேண்டும்.
  • தொப்புள் கொடியை சிறிது நேரம் விட்டு நறுக்கிப் பின் உடனே அயோடின் அல்லது டிஞ்சர் போன்ற தொற்று நீக்கிகளைத் தடவி விடவேண்டும்.
  • முதல் இரண்டு மாதங்கள் குளிர் மழை எந்த ஒரு பாதிப்புமின்றி குட்டிகளைக் கவனமாகப் பாதுகாத்தல் வேண்டும்.
  • முதல் இரண்டு வாரங்களில் கொம்பு நீக்கம் செய்தல்.
  • கிடா குட்டிகள் இனச்சேர்கைக்குத் தேவையானவை போக மீதமுள்ள வற்றை காயடித்து விட டவேண்டும்.
  • சரியான தடுப்பூசிகளைத் தவறாமல் தகுந்த நேரம் போடுதல் வேண்டும்.
  • 8 வார வயதில் தாயிடமிருந்து குட்டியைப் பிரித்துத் தனியே வளர்க்கப் பழக்கவேண்டும்.

குட்டிகளைத் தனியே தரம் பிரித்து அதன் எடைக்கேற்ப சரியான தீவனமளித்தல் அவசியம் அதோடு பண்ணைப் பதிவேடுகளில் அடையாளமிட்டுக் குட்டிகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் முறையாகப் பராமரிக்கவேண்டும்.

 

பால் கறக்கும் போது கவனிக்க வேண்டியவை

பால் கறக்கும் பெட்டை ஆடுகளைக் கிடாக்களின் அருகே விடாமல் தனியே பராமரிக்கவேண்டும். ஒரு நாளைக்கு 2 முறை கறக்கலாம். காம்புகள் காயம் படுமாறு அழுத்தாமல் கவனமாகக் கறக்கவேண்டும். கறப்பதற்கு முன், மடி மற்றும் காம்புகளை நன்கு கழுவி உலர வைக்கவேண்டும். காம்பின் எல்லா இடங்களிலும் அழுத்தம் சீராகப் பரவுமாறு, கறக்கும் போது கைவிரல்களை நன்கு மடித்துக் கறக்கவேண்டும். பால் வருவது சிறிதளவாகக் குறையும் வரை கறக்கலாம்.

 

இளம் பெட்டை ஆடுகளின் பராமரிப்பு தொழில்

நல்ல தரமுள்ள பசும்புல் மற்றும் அடர் தீவனங்களை உலகம்  சரியான சமயத்தில் அளித்து வருதல் நல்ல சினை ஆடுகளைத் தயார் செய்ய உதவும்.கலப்புச் செய்ய வேண்டிய ஆடுகளை வாரா வாரம் சரிபார்த்துப் பதிவேட்டில், குறித்துக் கொள்ளவேண்டும்.ஒவ்வொரு 18-24 நாட்களுக்கு ஒரு முறை பெட்டை ஆடு சூட்டிற்கு வரும். இந்தச்சூடானது 2-3 நாட்கள் வரை இருக்கும். சராசரி சினைக்காலம் 151+3 நாட்கள் ஆகும்.

English Summary: Goat breeding Published on: 17 September 2018, 11:37 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.