கால்நடைகளில் கோமாரி நோயை கால், வாய் காணை நோய், குளம்பு வாத நோய் என்றும் சொல்வதுண்டு. மாடு, ஆடு, பன்றி என குளம்பு உள்ள கால்நடைகளை (Livestock) தாக்கும் நச்சுயிரி இது. அதிக நாள் உயிர் வாழும். நோய்க்கிருமியில் 7 வகை இருப்பதால் அதற்கேற்ப பாதிப்பின் தன்மை மாறுபடும். அதிக உயிரிழப்பு இல்லையென்றாலும் அதிக பொருளாதார இழப்பு ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உமிழ்நீர், சிறுநீர், சாணம் மூலம் மற்றவற்றுக்கு பரவும். காற்று வீசும் திசையில் காற்றுத் துகள்கள் மூலம் 300 கிலோ மீட்டர் வரை இந்நோய் பரவக்கூடியது.
அறிகுறிகள்
இரண்டு முதல் நான்கு நாட்களில் நோய் அறிகுறி தென்படும். வாயின் உட்புறங்களில் நீர் கோர்த்த கொப்புளங்கள் காணப்படும். ஆடு மாடுகளின் காம்புகளிலும் கொப்புளங்கள் தோன்றுவதால் பால் குறைவதுடன் மடிவீக்க நோய் ஏற்படுகிறது. இந்நோயுள்ள மாடுகளின் பாலை குடிக்கும் கன்றுகள், தீவிர இதயத் தசை அழற்சியினால் இறந்து விடும். கருவுற்ற கால்நடைகளில் கருச்சிதைவு ஏற்படுகின்றன. நோய் தாக்கிய கால்நடைகளை தனியே சிகிச்சை (Treatment) அளிக்க வேண்டும்.
சிகிச்சை முறைகள்
வாயில் உள்ள புண்களுக்கு கிளிசரின் அல்லது போரிக் அமில பவுடரை தேங்காய் எண்ணெயில் குழைத்து தினமும் 4 முறை தடவ வேண்டும். கால் புண்ணுக்கு தண்ணீரில் பொட்டாசியம் பர்மாங்கனேட்டு கலந்து கழுவிய பின் “லோரெக்சான்” களிம்பு தடவலாம். அல்லது போரிக் பவுடரை வேப்ப எண்ணெயில் கலந்தும் தடவலாம். கற்பூரத்தை பொடியாக்கி புண்கள் மீது துாவினால் புழுக்கள் இறந்து விடும் அல்லது டர்பன்டைன் எண்ணெய் ஊற்றலாம். அதன் பின் ஆன்டிசெப்டிக் மருந்திடலாம். கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தர வேண்டும். நோய்க்கிருமி அதிக நாள் உயிருடன் இருக்கும் என்பதால் கொட்டகையில் 40 கிராம் சலவை சோடாவை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து கழுவினால் நோய்க் கிருமிகள் அழிந்து விடும்.
மூலிகை வைத்தியம்பூண்டு 10 பல், மஞ்சள் தூள் 10 கிராம், துளசி, குப்பை மேனி, மருதாணி மற்றும் வேப்பிலை தலா 10 சேர்த்து அரைத்து ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து 10 நிமிடம் காய்ச்ச வேண்டும். ஆறிய பின் இந்த எண்ணெய்யை தினமும் இரு முறை கால் புண்களில் தடவினால் விரைவில் குணமாகும்.
வாய்ப் புண்களுக்கு சீரகம், வெந்தயம், மிளகு, மஞ்சள் தலா 20 கிராம், பூண்டு 4 பல் சேர்த்து ஊற வைத்து அரைக்க வேண்டும். இதனுடன் வெல்லம் 100 கிராம், துருவிய தேங்காய் 1 சேர்த்து 4 அல்லது 5 பாகங்களாகப் பிரித்து உண்ணக் கொடுக்கலாம். 5 நாட்கள் கொடுக்க வேண்டும். வாயின் உள்ளே நெய் அல்லது வெண்ணெய் தடவ வேண்டும்.
நோய் பரவியுள்ள நேரத்தில் சந்தையில் கால்நடைகளை வாங்கவோ விற்கவோ கூடாது. நோயுள்ள கால்நடைகளை குளம் ஏரியில் குளிக்க வைப்பதோ குடிக்க வைப்பதோ கூடாது. கன்றுகளுக்கு பாலுாட்டுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து கால்நடைகளுக்கும் ஒரே நேரத்தில் தடுப்பூசி போட வேண்டும். நோய் வராமல் தடுக்க கன்றுகளுக்கு 4 வது மாதத்திலும் ஆடுகளுக்கு 8 வார வயதில் முதல் கோமாரி நோய்த் தடுப்பூசியும் ஒரு மாதம் கழித்து இரண்டாம் முறை தடுப்பூசி போட வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை தடுப்பூசி அவசியம்.
பேராசிரியர் உமாராணி,
கால்நடை சிகிச்சை வளாகம்,
கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தேனி
kamleshharini@yahoo.com
மேலும் படிக்க
நாட்டுக் கோழிகளுக்கு செலவில்லாத, சிறந்த தீவனமாகப் பயன்படும் கரையான்களை தயாரிக்கும் வழிமுறை!
கோடையில் உடல் நலம் காக்கும் வெள்ளை வெங்காயத்தின் அற்புதமான நன்மைகள்!
Share your comments