பயிருக்கு சரியான அளவில் அங்கக, அனங்கக மற்றும் உயிர் உரங்களை இட்டு, ஊட்டச்சத்து இழப்பைக் குறைத்து, ஊட்டச்சத்தின் பயன்பாட்டு திறனை அதிகரிப்பதே ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை எனப்படும். பயிர், நீர் மற்றும் நில மேலாண்மையுடன் ஊட்டச்சத்து மேலாண்மை செய்து நிலையான உற்பத்தியை அதிகப்படுத்துவதே ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையின் நோக்கமாகும்.
கீழ்க்கண்ட நுட்பங்களை அறிந்து கொண்டு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையை திறம்பட மேற்கொள்ளலாம்.
- மண் ஆய்வு மேற்கொண்டு மண்ணின் ஊட்டத்திறனை அறிதல்
- மண் ஆய்வின்படி உரமிடுதல்.
- மண்வள அட்டையைப் பயன்படுத்துதல்.
- உரப்பரிந்துரைக்கான மென்பொருளை பயன்படுத்துதல்
- அங்கக உரங்களான தொழு உரம், பிண்ணாக்குகள், பசுந்தாள், பசுந்தழை மற்றும் உயிர் உரங்களை மண்ணில் இட்டு மண்ணின் பெளதீக, இரசாயனத் தன்மையை சீர்செய்தல்
- உரங்களை சிபாரிசு செய்யப்பட்ட அளவில், சரியான முறையில், தக்க தருணத்தில் இடுதல்
- இரசாயன உரங்களை பயிரின் வளர்ச்சிப் பருவத்திற்கேற்றாற்போல் மேலுரமாக பிரித்து அளித்தல்
- ஊட்டச்சத்து வீணாவதை தடுக்க மெதுவாக கரையும் வகையில் உள்ள உரங்களை இடுதல்
- ஊட்டச்சத்தின் பயன்பாட்டு திறனை அதிகரிக்க நீர்வழி மற்றும் அடிமண்ணில் உரமிடுதல்.
ஊட்டச்சத்து பயன்படுதிறன் (Nutrient Use Efficiency)
பயிருக்கு இடப்பட்ட ஊட்டச்சத்தின் அளவிற்கும், பயிரால் பயன்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து அளவிற்கும் உள்ள விகிதமே ஊட்டச்சத்து பயன்படுதிறன் எனப்படும்.
ஊட்டச்சத்தின் பயன்படுதிறனை அதிகரிக்கும் வழிமுறைகள்
- மண்ணின் ஊட்டச்சத்து நிலை அறிந்து உரமிடவேண்டும்.
- மண்ணில் ஊட்டச்சத்து குறைநிலையில் உள்ளபோது சிபாரிசு செய்யப்பட்ட அளவில் 25 சதம் அதிகமாகவும், அதிக நிலையில் உள்ளபோது 25 சதம் குறைவாகவும் உரமிடவேண்டும்.
- ஊட்டச்சத்து பயன்படுதிறனை சொட்டு நீர் மற்றும் நீர்வழி உரமிடுதல் மூலம் அதிகரிக்கலாம்.
- பரிந்துரைக்கப்பட்ட உர அளவில் 50 சதத்தை அடி உரமாகவும், 25 சதம் வீதம் இரண்டு மேலுரமாக இட்டு உரபயன்படு திறனை அதிகரிக்கலாம்.
- மெதுவாக கரையக்கூடிய பூச்சு செய்யப்பட்ட யூரியாவை பயன்படுத்தி தழைச்சத்தின் பயன்படுதிறனை அதிகரிக்கலாம். எளிதில் கரையாத ராக் பாஸ்பேட்டை பயன்படுத்தி மணிச்சத்தின் பயன்படு திறனை அதிகரிக்கலாம்.
- இரசாயன உரங்களை தொழுஉரம் மற்றும் பசுந்தாள் உரங்களுடன் சேர்த்து இடலாம்.
- உயிர் உரங்களான அசோலா, நீலப்பச்சைப்பாசி, அசோஸ்பைரில்லம், ரைசோபியம் ஆகியவற்றுடன் இரசாயன உரங்களைக் கலந்து இடலாம்.
- மணிச்சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் பயன்படு திறனை அதிகரிக்க அவற்றை ஊட்டமேற்றிய தொழுஉரத்துடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
நன்மைகள்
- உரம் வீணாவது குறைக்கப்படுகிறது.
- உரச்செலவு குறைவதால், உற்பத்தி செலவு குறைந்து லாபம் அதிகரிக்கிறது.
- சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதில்லை.
- மண்வளம் காத்து, மண்ணின் உற்பத்தித் திறனை அதிகரிக்கலாம்.
Share your comments