1. கால்நடை

பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள்

KJ Staff
KJ Staff

பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கும் அங்கக மற்றும் அனங்கக பொருட்களுக்கு உரம் என்று பெயர். தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பேரூட்டச் சத்துக்கள் மற்றும் நுண்ணுரட்டச்சத்துக்கள் என இருவகைகளாகப் பிரிக்கலாம்.

பேரூட்டச்சத்துக்கள் (Macronutrients)

தாவரங்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு அதிக அளவில் தேவைப்படும் சத்துக்கள் பேரூட்டச்சத்துக்களாகும்.

அவையாவன :

  • கார்பன் (C),
  • ஹைட்ரஜன் (H),
  • ஆக்ஸிஜன் (O),
  • நைட்ரஜன் (N),
  • பாஸ்பரஸ் (P),
  • பொட்டாசியம் (K),
  • கால்சியம் (Ca),
  • மக்னீசியம் (Mg),
  • கந்தகம் (S).

இச்சத்துக்களை தாவரங்கள் மண், நீர் மற்றும் காற்றிலிருந்து பெற்றுக் கொள்கின்றன.

நுண்ணுரட்டச் சத்துக்கள் (Micronutrients)

பயிர் வளர்ச்சிக்கு மிகக் குறைந்த அளவில் ஆனால் அத்தியாவசியமாகத் தேவைப்படும் சத்துக்கள் நுண்ணூட்டச் சத்துக்கள் எனப்படும்.

அவையாவன:

  • இரும்பு (Fe),
  • மாங்கனீசு (Mn),
  • துத்தநாகம் (Zn),
  • தாமிரம் (Cu),
  • போரான் (B),
  • மாலிப்டினம் (Mo)
  • குளோரின் (C).
  • சோடியம் (Na),
  • சிலிக்கான் (Si),
  • அயோடின் (),
  • ப்ளூரின் (F),
  • கோபால்ட் (Co),
  • செலினியம் (Se),
  • அலுமினியம் (Al),
  • வெனடியம் (V)

போன்ற தனிமங்களும் பயிர் வளர்ச்சிக்கு சிறிதளவு தேவைப்படுகின்றன.

 கார்பன்

  1. பயிர்கள் கார்பனை கார்பன்டை ஆக்ஸைடு (CO) வடிவத்தில் வளிமண்டலத்திலிருந்து கிரகித்துக் கொள்கின்றன.
  2. உணவு தயாரிக்கவும், புரோட்டோபிளாசம் மற்றும் செல் சுவர் உற்பத்திக்கும் கார்பன் தேவைப்படுகிறது.

ஹைட்ரஜன்

  1. பயிர்கள் இச்சத்தினை நீரிலிருந்து பெறுகின்றன.
  2. இது தாவரத்தின் உடற்செயலியல் நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆக்ஸிஜன்

  1. நீர் மற்றும் வளிமண்டலத்திலிருந்து இச்சத்து தாவரங்களுக்கு கிடைக்கிறது.
  2. இச்சத்து தாவரங்கள் உயிர் வாழவும், உடற்செயலியல் நிகழ்ச்சிகள் நடைபெறவும் பயன்படுகிறது.

நைட்ரஜன் அல்லது தழைச்சத்து (Nitrogen - N)

  1. தாவரத்தின் அனைத்து செல்கள் மற்றும் புரோட்டோபிளாசத்தில் நைட்ரஜன் உள்ளது.
  2. பயிர்களுக்கு பசுமை நிறத்தைக் கொடுப்பதுடன், அவற்றின் தரம் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
  3. தாவரத்தின் புரதச் சத்தின் அளவை அதிகரிக்கிறது.
  4. இச்சத்தின் அளவு அதிகரிப்பால் தாவரத்தின் வளர்ச்சி கூடுவதுடன், பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.

பாஸ்பரஸ் அல்லது மணிச்சத்து (Phosphorus - P)

  1. தாவரத்திலுள்ள நியூக்ளிக் அமிலம் மற்றும் பாஸ்போலிப்பிடுகளில் பாஸ்பரஸ் சத்து அதிக அளவில் உள்ளது.
  2. விதை முளைக்கவும், வேர்கள் மற்றும் மலர்கள் தோன்றுவதற்கும் இச்சத்து தேவை.
  3. பயிர் முதிர்ச்சி அடைவதற்கும், தானியங்களின் தரம் மற்றும் எண்ணிக்கை அதிகரிக்கவும் இச்சத்து அவசியம்.
  4. வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன் அவரை (Legume) குடும்பப் பயிர்களில் வேர் முடிச்சுகளில் நிலைநிறுத்தும் பாக்டீரியாக்களின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது.

பொட்டாசியம் அல்லது சாம்பல் சத்து (Potassium - K)

  1. தாவரத்திலுள்ள கூட்டுப்பொருள் எதிலும் பொட்டாசியம் பங்கேற்காமல் தனித்து அயனியாக காணப்படும்.
  2. பூச்சி மற்றும் நோய்களை எதிர்க்கவும், வறட்சியைத் தாங்கவும் பயிர்களுக்கு இச்சத்து தேவை.
  3. கனிகள் மற்றும் விதைகளின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது.

கால்சியம்

  • தாவரங்களின் செல்சுவர் தோன்றவும், ஆரம்ப வேர் வளர்ச்சிக்கும், தீங்கு விளைவிக்கும் அமிலங்களின் தன்மையை நீக்கவும் கால்சியம் சத்து பயன்படுகிறது.
  • பயிர் நைட்ரஜனை கிரகித்துக் கொள்ளவும், நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியாக்களின் செயலை அதிகரிக்கவும் இச்சத்து அவசியம்.
  • இது பயிரினூடே நகர்ந்து செல்லும் தன்மை அற்றது.

மெக்னீசியம் (Magnesium - Mg)

  • தாவரத்திலுள்ள பச்சையத்தில் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது. இது ஊட்டப் பொருட்களை உறிஞ்சும் திறனை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
  • தாவரத்திலுள்ள பாஸ்பரஸ் சத்தை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டுசெல்லப் பயன்படுகிறது.
  • விதைகளின் எண்ணெய்ச்சத்தை அதிகரிக்க மெக்னீசியம் உதவுகிறது.

கந்தகம்

  • தாவரத்தில் பச்சையம் மற்றும் புரதம் தோன்றுவதற்கு உதவுகிறது.
  • விதை உற்பத்தி, வேர் வளர்ச்சி மற்றும் வேர் முடிச்சுகள் தோன்றுவதற்கும் கந்தகம் தேவை.

இரும்பு

பச்சையம் தோன்றுவதற்கும், மண்ணிலுள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் இரும்புச்சத்து தேவை.

  • தாவரத்தில் நடைபெறும் ஆக்ஸிகரண வினைகளுக்கான என்சைம்கள் தோன்றவும், புரத உற்பத்திக்கும் இரும்புச்சத்து அவசியமாகும்.

மாங்கனீசு

  • தாவரத்தில் பச்சையம் தோன்றுவதற்கு மாங்கனீசு உதவுகிறது.
  • தாவரத் திசுக்களில் நடைபெறும் ஆக்ஸிகரண வினைகளை ஊக்குவிக்கும் காரணியாக விளங்குகிறது.

துத்தநாகம்

  • தாவரத்தில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றங்களுக்கான என்சைம்களை தோற்றுவிக்க துத்தநாகம் தேவை.
  • பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஆக்ஸின் (Auxin) ஹார்மோன் உருவாக முக்கிய காரணியாக செயல்படுகிறது.

தாமிரம் (Copper - Cu)

தாவரங்கள் பச்சையம் தயாரிக்கவும், ஆக்ஸிகரண வினையூக்கியாகவும் தாமிரம் செயல்படுகிறது.

போரான்

  • தாவரம் கால்சியத்தை கிரகித்துக் கொள்ளவும், பயன்படுத்தவும், அதன் கரையும் திறனை நிலையாக வைத்திருக்கவும் போரான் உதவுகிறது.
  • தாவரத்திலுள்ள பொட்டாசியம், கால்சியம் ஆகியவற்றின் விகிதத்தை ஒரே சீராக வைத்திருக்க பயன்படுகிறது.
  • மகரந்தத்துள்களின் வீரியத்தை அதிகரிக்கச் செய்கிறது.
  • சர்க்கரைச்சத்து உருவாகவும், அது பயிரினுாடே இடம் பெயர்ந்து செய்யவும் உதவுகிறது.

மாலிப்டினம்

  • வாயு மண்டல நைட்ரஜனை நிலைநிறுத்த நேரடியாகவோ, மறைமுகமாகவோ மாலிப்டினம் பயன்படுகிறது.
  • ஆக்ஸிகரண வினைகளுக்கான என்சைம்கள் தோன்ற இச்சத்து தேவை.

குளோரின்

  1. தாவர வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஊட்டப்பொருளாக குளோரின் உள்ளது.
  2. பயிர்களின் அயனிகள் சமன்பாட்டுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

மேற்கூறிய பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் பற்றாக்குறை மண்ணில் ஏற்படும்போது, அவற்றை ஈடுசெய்ய உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 

English Summary: Macro and Micro nutrients for Plant Growth Published on: 17 November 2018, 05:03 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.