இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கால்நடை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இறுதியாக இருபதாவது கால்நடை கணக்கெடுப்பு கடந்த 2018ல் நடத்தப்பட்டு அதன் அறிக்கை 2019ல் வெளியிடப்பட்டது. பொதுவாகவே கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்து இருந்த சூழலில் மிக அதிகபட்சமாக சற்றேறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு அதாவது 62% அளவிற்கு எண்ணிக்கையில் குறைந்து இருக்கின்றன கழுதைகள். காணாமல் போய்விட்ட சூழலை எட்டி இருக்கின்றன கழுதைகள் என்றே சொல்லும் அளவிற்கான வீழ்ந்து இருக்கின்றது கழுதைகளின் எண்ணிக்கை. 2012ல் மூன்று லட்சத்து இருபதாயிரம் (0.32 மில்லியன்) என்று இருந்த கழுதைகளின் எண்ணிக்கை 2019 இல் ஒரு லட்சத்து இருபதாயிரம் (0.12 மில்லியன்) என்று குறைந்து இருப்பதுதான் வேதனையின் உச்சம்.
உலகம் முழுவதும் 4.58 கோடி கழுதைகள் உள்ளதாக குறிப்பிடுகிறது ஒரு ஆய்வறிக்கை. கழுதையின் தோலுக்கும் இறைச்சிக்கும் சந்தையில் நல்ல மதிப்பு இருப்பதால் இவை குறி வைத்து கொல்லப்படுகின்றன. 2013-16 காலகட்டத்தில் கழுதை வளர்ப்பு 20 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இருந்த போதும் வேட்டையாடப்படுவதன் காரணமாக 1992 இல் இருந்து 76% கழுதைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் விலங்கு நல ஆர்வலர்கள்.
பொதி சுமப்பதற்காகவும் பழங்காலங்களில் மனிதர்கள் பயணிப்பதற்காகவும் கரடு முரடான மற்றும் மலைப் பகுதிகளில் போக்குவரத்திற்காகவும் கழுதைகள் பழங்காலம் தொட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாகனங்களின் வருகையினால் அறிவியலின் அபரிமிதமான வளர்ச்சியினால் இந்த பயன்பாட்டிற்கு கழுதைகள் தேவையற்ருப் போன காரணத்தினால் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. சீன நாட்டில் பாரம்பரிய மருந்து தயாரிப்பதற்காக பதப்படுத்தப்பட்ட கழுதை தோல் பயன்படுத்தப்படுவதால் ஆண்டு தோறும் சீனாவில் மட்டும் 50 லட்சம் கழுதைகள் கொலை செய்யப்படுகின்றன என்பதும் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களுள் ஒன்றாக சர்வதேச அளவில் கருதப்படுகிறது.
சீனாவின் பாரம்பரிய மருந்தான இஜியாவோ தயாரிக்க ஆண்டுதோறும் 50 லட்சம் கழுதைகள் கொல்லப்படுவது தொடருமானால் அடுத்த 5 ஆண்டுகளில் கழுதைகளின் எண்ணிக்கை சரிபாதியாக குறையும் என எச்சரிக்கிறது இங்கிலாந்தைச் சேர்ந்த கழுதைச் சரணாலய அமைப்பு என்னும் விலங்கு நல நிறுவனம். முறையான உணவு சங்கிலி அமைப்பும் பண்ணை முறையில் கழுதை வளர்ப்பும் கழுத்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அரசாங்கங்களின் திட்டங்களும் இல்லாமல் போனால் காட்சிப் பொருளாகவும் அழிந்துவிட்ட மிருகங்களின் பட்டியலில் இடம்பெற்றுள் ஒரு உயிரினமாக மட்டுமே வருங்கால சந்ததியினர் கழுதை என்னும் இனத்தை பார்க்க நேரும்.
சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
சென்னை-07
Share your comments