பஞ்சகவ்யம்
பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரக்கூடிய இயற்கை ஊட்டச் சத்து உரமாக விளங்குவது பஞ்சகவ்யம். இதைக் கொண்டு பயிர்களையும், மண்ணின் தன்மையையும் மேம்படுத்தலாம்
உணவுப் பயிர்களில் பயன்படுத்தப்பட்டு வரும் செயற்கை ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் கேடு விளைவிப்பதாக உள்ளன.
இதில் இருந்து மீளும் வகையில் விவசாயிகளுக்கு இயற்கை வழியாகவும், பசுமாட்டின் வாயிலாகவும் கிடைக்கப் பெரும் பஞ்சகவ்யம் பயனுள்ளதாக இருக்கும்
பஞ்சகவ்யம் தயாரிக்கத் தேவையானவை
பசுவின் புது சாணம் 5 கிலோ. பசுவின் கோமியம் 3 லிட்டர், பசு மாட்டுப் பால் 2 லிட்டர், பசுந்தயிர் 2 லிட்டர், பசு நெய் 1 லிட்டர், கரும்புச் சாறு 3 லிட்டர், இளநீர் 2 லிட்டர், வாழைப்பழம் 12, கள் (கிடைக்கும் இடங்களில்) 2 லிட்டர் ஆகியவை தேவை.
கரும்புச் சாறு கிடைக்கவில்லையென்றால் 500 கிராம் நாட்டுச் சர்க்கரையுடன் 200 கிராம் ஈஸ்டு சேர்த்து 3 லிட்டர் நீரில் ஊற வைத்தால் 30 நிமிடங்களில் அதே தன்மையுடைய கரைசல் கிடைக்கும்.
தயாரிக்கும் முறை
பசுவின் புது சாணம், கோமியம், நெய் ஆகியவற்றை நன்கு கலந்து 3 நாள்களுக்கு அடிக்கடி கலக்கி வைக்கவும். நான்காம் நாள் இந்தக் கலவையுடன் இதர பொருள்களான தயிர், நெய், கரும்புச் சாறு, இளநீர், வாழைப்பழங்கள், கள் ஆகியவற்றை அதனுடன் கலக்க வேண்டும். இந்தக் கலவையை குறைந்த பட்சம் 4 நாள்கள் நன்றாக கலக்கி 15 நாள்கள் வைத்திருந்து 19-ஆம் நாள் முதல் பயிர்களில் தெளிக்கலாம்.
பஞ்ச கவ்யத்தில் உள்ள சத்துக்கள்
பசும் சாணம், பாக்டீரியா, பூஞ்சானம், நுண் சத்துக்கள்.
பசு கோமியம்
பயிர் வளர்ச்சிக்குத் தேவையான தழைச்சத்து.
பால்
புரதம், கொழுப்பு, மாவு, அமினோ, அமிலம், கால்சியம் சத்துக்கள்.
தயிர்
ஜீரணிக்கத் தக்க செரிமானத் தன்மையைத் தரவல்ல நுண்ணியிரிகள்.
நெய்
வைட்டமின் ஏ.பி.கால்சியம், கொழுப்புச் சத்து.
கரும்புச் சாறு
சைக்கடோகைனின் எனும் வளர்ச்சி ஊக்கி, அனைத்து வகை தாது உப்புக்கள்.
இளநீர்
நுண்ணுயிர் வளர்ச்சிக்கான இனிப்பு.
வாழைப்பழம், பதநீர்
தாது உப்புக்கள் தரவல்லது. நொதிப்பு நிலை தந்து நுண்ணூட்டச் சத்தை உருவாக்குகின்றன.
முறையாக தயாரிக்கப்பட்ட பஞ்ச கவ்யத்தில் பயிர் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்புக்கும், உறுதுணையாக விளங்கும் நுண்ணுயிர்களான அசோபைரில்லம், அசட்டோபேக்டர், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனாஸ் ஆகியவையும், பேரூட்டச் சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள், வளர்ச்சி ஊக்கிகள் உள்ளிட்ட பயிர்களுக்குத் தேவையான அனைத்தும் உள்ளன.
பயிர்களுக்குப் பயன்படுத்தும் முறை
முறையாக தயாரிக்கப்பட்ட பஞ்சகவ்யம் 300 மில்லி மருந்தை 10 லிட்டர் நீரில் கலந்து விசைத் தெளிப்பான், கைத் தெளிப்பான் மூலம் எல்லா பயிர்களுக்கும் படும் வகையில் காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்கலாம். ஒரு ஏக்கர் பயிருக்கு ஒரு முறை தெளிக்க 3 லிட்டர் பஞ்சகவ்யம் தேவைப்படும். இந்தக் கரைசலைத் தெளிப்பான்களில் ஊற்றிப் பயன்படுத்தும்போது கைத் தெளிப்பான் எனில், வடிகட்டியும், விசைத் தெளிப்பான் எனில் அதன் வால்வு, குழாயின் நுனிப் பகுதியை பெரிதாக்கிக் கொண்டும் பயன்படுத்த வேண்டும்.
இந்த முறைகளில் பஞ்சகவ்யத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது பயிர்களை இயற்கை வழியில் பராமரித்துப் பயன் பெறலாம்.
Share your comments