1. கால்நடை

தேசிய செயற்கை முறை கருவூட்டல் திட்டம், பிரதமர் மோடி அறிமுகம்

KJ Staff
KJ Staff
Indian Cattle

மதுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தேசிய விலங்குகள் நோய்த் தடுப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் மரியாதைக்குரிய பாரத பிரதமர் அவர்கள். சர்வதேச அளவில் பால் மற்றும் இதர கால்நடை உற்பத்தி பொருட்களின் வர்த்தகத்தை பாதிக்கக் கூடிய கோமாரி நோய் எனும் தொற்று நோய் மற்றும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக் கூடிய கருச்சிதைவை ஏற்படுத்தக் கூடிய கன்று வீச்சு நோய் (புரூசெல்லோசிஸ்) ஆகிய இரு நோய்களையும் கட்டுப்படுத்தி ஒழிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இவ்விரு நோய்களும் பொருளாதார ரீதியில் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தக் கூடியவை ஆகும்.

பொருளாதார இழப்புகள்

கோமாரி நோய் அல்லது கால் மற்றும் வாய் நோயால் பாதிக்ப்பட்ட பசு அல்லது எருமையின் பால் உற்பத்தியில் 100% வரை இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த உற்பத்தி இழப்பு 4 முதல் 6 மாதங்கள் வரை இருக்கும். அதாவது, ஒரு கறவையில் சற்றேறக்குறைய பாதி காலம் இருக்கும். கன்று வீச்சு நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளில் கருச்சிதைவு ஏற்படுகிறது. மேலும், வாழ்நாள் முழுவதும் 30% வரை பால் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படுகிறது. இந்த நோய் பண்ணையில் வேலை பார்ப்பவர்களுக்கும், கால்நடைகளோடு தொடர்பில் உள்ளவர்களுக்கும் பரவுவதோடு கால்நடைகளில் மலட்டுத் தன்மையையும் ஏற்படுத்துகிறது. இவ்விரு நோய்களும் வேகமாக மற்ற விலங்குகளுக்கும் பரவும் தன்மைக் கொண்ட தொற்று நோய்களாகும். இதனால் ஆண்டொன்றுக்கு 50000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதோடு ஏற்றுமதி வாய்ப்புகளுக்கான கதவுகளையும் அடைத்து விடுகிறது.

திட்டத்தின் நோக்கங்கள்

கோமாரி நோய் பாதிக்க வாய்ப்பு உள்ள கால்நடைகளுக்கு ஆண்டில் இருமுறை தடுப்பூசி கொடுப்பதன் மூலமும் 4-8 வார வயதுடைய பெட்டைக் கன்றுகளில் வாழ்நாளில் ஒருமுறை கன்று வீச்சு நோய்க்கு எதிரான தடுப்பூசி கொடுப்பதன் மூலமும் இந்நோய்களை கட்டுப்படுத்த முடியும். தேசிய விலங்குகள் நோய்த் தடுப்புத் திட்டம் (என்.ஏ.டி.சி.பி.) இவ்விரு நோய்களையும் கட்டுப்படுத்தி ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. கோமாரி மற்றும் கன்று வீச்சு நோய்களை 2025ம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்தி அவற்றை 2030ம் ஆண்டுக்குள் நாட்டிலிருந்து ஒழிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பெட்டை பசுக் கன்றுகளில் தீவிர புரூசெல்லோசிஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் இந்நோயை சிறப்பாக கையாளும் நோக்கத்தோடு செயல்படுத்தப்படுகிறது.

திட்ட மதிப்பீடு

இத்திட்டத்திற்கான 100 சதவீத செலவுத் தொகையையும் மத்திய அரசு ஏற்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் (2019-2024) இத்திட்டத்திற்காக 12,652 கோடி ரூபாயினை மத்திய அரசு செலவிடுகிறது.

Young Cow

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

  • நாட்டிலுள்ள அனைத்து (100%) மாடுகள், எருமைகள், ஆடுகள், செம்மறியாடுகள் மற்றும் பன்றிகளுக்கும் ஆண்டுக்கு இருமுறை கோமாரி நோய் தடுப்பூசி போடுதல்
  • 4 முதல் 5 மாத வயதுடைய கன்றுகளுக்கு கோமாரி நோய் முதன்மைத் தடுப்பூசி போடுதல்
  • நாட்டிலுள்ள 4 முதல் 8 மாத வயதுடைய எல்லா (100%) பசு மற்றும் எருமைக் கன்றுகளையும் கன்று வீச்சு நோய்க்கெதிராக தடுப்பூசி போடுதல்

தடுப்பூசி போடுவதற்கு முன் குடற்புழு நீக்க மருந்து அளித்தல்

கால்நடைகளை தனித்துவமான காதுகளில் பொருத்தக்கூடிய அடையாள வில்லைகளைக் கொண்டு அடையாளப்படுத்துதல் மற்றும் கால்நடைகளுக்கான சுகாதார அட்டைகளை விநியோகித்தல்

திட்டத்தின் இலக்குகள்

  • 50கோடி கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடுதல் (இது நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ள 100 சதவீத மாடுகள், எருமைகள், ஆடுகள், செம்மறியாடுகள் மற்றும் பன்றிகளை உள்ளடக்கி இருக்கும்)
  • ஆண்டொன்றுக்கு 3.6கோடி கன்றுகளுக்கு கன்றுவீச்சு நோய்க்கு எதிரான தடுப்பூசி போடுதல் (இது நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ள 100 சதவீத 4 முதல் 8 மாத வயதுடைய பெட்டைக் கன்றுகளை உள்ளடக்கி இருக்கும்).
artificial Insemination

கால்நடைகளுக்கான தேசிய செயற்கை முறை கருவூட்டல் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் அதிக பால் உற்பத்திக்கு ஏற்ற காளைகளிடம் இருந்து பெறப்பட்டு உறை வெப்ப நிலையில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் விந்தணுக்கள் செயற்கை முறையில் மாடுகளின் யோனியினுள் செலுத்தப்படும். கட்டணம் ஏதுமின்றி விவசாயிகளின் வீட்டிற்கே வந்து இந்த சேவை வழங்கப்படும். 50 சதவீதத்திற்கும் குறைவாக செயற்கைமுறை கருவூட்டல் செய்யப்படும் 600 மாவட்டங்களில் இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

இத்திட்டத்தின்படி அடுத்த ஆறு மாதங்களில் 1.2 பசு மற்றும் எருமைகளுக்களுக்கு 3.6 கோடி செயற்கை முறை கருவூட்டல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற நபர்களைக் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்திலும்200 மாடு மற்றும் எருமைகளுக்கு கருவூட்டல் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் கருவூட்டல் செய்யப்படும் கால்நடைகளுக்கு பசு ஆதார் எனும் தனித்துவ அடையாள எண் கொடுக்கப்பட்டு தகவல்கள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றப்படும். இதர சேவைகளைப் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் அலைபேசி எண்ணை பதிவு செய்து பெறலாம். கன்று பிறக்கும் வரை பரிசோதனைகளும் இத்திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படுகின்றன.

பயிலரங்குகள்

நாடு முழுவதும் 687 மாவட்டங்களில் உள்ள வேளாண் அறிவியல் மையங்களில் தேசிய பயிலரங்கள் நடத்தும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி, அனைத்து வேளாண் அறிவியல் மையங்களிலும் தடுப்பூசி, நோய் மேலாண்மை, செயற்கை முறை கருவூட்டல் மற்றும் உற்பத்தி போன்ற தலைப்புகளில் பயிலரங்குகள் நடத்தப்பட உள்ளன.

சி. அலிமுதீன் 
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
சென்னை-07.

ச. பாவா பக்ருதீன்
கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி,
குரு அங்கத்தேவ் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
லூதியானா, பஞ்சாப்-141001.

English Summary: Prime Minister Modi Has Launched New Scheme For Cow: National Animal Disease Control Programme Published on: 19 September 2019, 12:30 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.