1. கால்நடை

தரமான சைலேஜ் தயாரிக்கும் முறைகள்

KJ Staff
KJ Staff
  1. பால் பிடிக்கும் தருணத்தில் உள்ள தீவன மக்காச்சோளப் பயிர், தீவனச் சோளப் பயிர். இவற்றின் தண்டுப் பகுதியை நாம் கடித்துச் சுவைத்தால், நாவில் இனிப்புச் சுவை தட்ட வேண்டும். சுக்ரோஸ் எனும் இனிப்புச் சத்து தட்டையில் இருந்தால் இனிப்பாக இருக்கும். இந்தப் பயிரை தீவனம் நறுக்கும் சாப் கட்டர் (Chaff cutter) கருவி மூலம் இரண்டு அங்குலத்துக்கு மிகாத துண்டுகளாக நறுக்க வேண்டும். இவ்வாறு வெட்டிய துண்டுகளை நமது உள்ளங்கையில் வைத்து இறுக்கி அழுத்தும்போது கைகளில் ஈரப்பதம் உணரப்பட வேண்டும். ஆனால், தண்ணீர் சொட்டக்கூடாது. இதுதான் சைலேஜ் தயார் செய்ய சரியான பக்குவம். வெட்டிய துண்டுகளில் ஈரம் அதிகம் தெரிந்தால், வெய்யிலில் லேசாக வாட விடுங்கள். குறைவாக இருந்தால், லேசாகத் தண்ணீர் தெளியுங்கள்.
  2. இரண்டு அடி அகலம், மூன்று அடி உயரம் உள்ள காற்று புக முடியாத பிளாஸ்டிக் பையை எடுத்துக்கொள்ளுங்கள். பை கெட்டியாக இருக்க வேண்டும். ஒரு பை 100 கிராமுக்கும் குறைவில்லாமல் எடை இருக்க வேண்டும். இந்தப் பைக்குள், வெட்டிய பசுந்தீவனத்தைக் கொட்டி மிகவும் நன்றாக அழுத்தி, அதிகப்படியான இறுக்கத்துடன் நிரப்ப வேண்டும். கனமான ஆள்கள் ஏறி கால்களால் மிதித்து இறுக்குவது அல்லது திம்சுக்கட்டையால் இறுக்குவது போன்ற முறைகளை கடைப்பிடிக்கலாம். நன்கு இறுக்கி, உள்ளே இருக்கும் காற்றை வெளியேற்றி, வாய்ப் பகுதியை கூட்டிப் பிடித்து, பைகளில் மேல்புறம் உள்ள காற்றையும் அழுத்தம் கொடுத்து வெளியேற்றி சணல் கயிற்றால் மிக இறுக்கமாகக் கட்ட வேண்டும். கட்டுக்கு மேல் 3 அங்குல பேக்கிங் டேப்பால், வெளிக்காற்று உள்ளே புகாதபடி ஒட்டிவிட வேண்டும். எந்த நிலையிலும் பைக்குள் காற்று இருக்கக்கூடாது. கவனம் தேவை.

3. இந்த பேக்கிங் சுமார் 20 – 25 கிலோ எடை இருக்கும். இதனை அப்படியே வைக்கலாம். வாய்ப்பு இருப்போர், பயன்படுத்திய சுத்தம் செய்த உர, மாட்டுத் தீவனப் பைகளிலும் கட்டிவைக்கலாம்.

4. மூன்று வாரம். 21 நாள்களை எண்ணிக்கொள்ளுங்கள். ‘அனிரோபிக்’ கண்டிஷனையும் தாண்டி அருமையான மணம் வீசும். அது ஆல்கஹால் மணம். வெட்டிய தீவனத்தில் உள்ள சுக்ரோஸ், நுண் உயிர்களால் சிதைக்கப்பட்டு நொதித்தல் முறையில் ஆல்கஹாலாக உருவாகிறது. ஆல்கஹால் ஒரு சிறந்த பிரிசர்வேட்டிவ். அதனால், உள்ளே இருக்கும் பொருள்கள் கெட்டுவிடாமல் இருக்கும்.

5. இந்த சைலேஜ் மூட்டைகளை எலி, அணில் போன்றவை கடித்துவிடாமல் பத்திரப்படுத்த வேண்டும். இதன் மணமும் சுவையும் எலி, அணில் போன்றவற்றை கவர்ந்து இழுக்கும். சாக்குப்பைகளை இவை ஓட்டையிட்டுவிடாமல், அதன் வழியே காற்று உள்ளே புகுந்து சைலேஜ் முழுவதும் கெட்டுவிட நேரிடும். சைலேஜ் மூட்டைகளை நிழலான பகுதியில் மழை, வெய்யில் இரண்டில் இருந்தும் பாதுகாப்பு செய்து சேகரித்து வைக்க வேண்டும். சைலேஜ் செய்வதற்கென தனியே பெரிய பைகளை சில நிறுவனங்கள் தயார் செய்து விற்கின்றன. இவற்றின் கொள்ளளவும், எடையும் அதிகம். ஆகவே, கையாள்வது சிரமம். ஒரே முறையில் உபயோகிக்க இயலாது. சிறிய பைகளில் சைலேஜ் தயாரிக்கும்போது, மூட்டைகளைத் தூக்குவது, அடுக்குவது, பசு, ஆடு போன்ற கால்நடைகளுக்கு அளவறிந்து கொடுப்பது போன்ற வேலை எளிதாக இருக்கும்.

6. நமது தினசரி சைலேஜ் தேவை எத்தனை கிலோ, மாதாந்திர தேவை எத்தனை கிலோ என எளிதாகக் கணக்கிடலாம். அதற்கு ஏற்க, முன்கூட்டியே திட்டமிட்டு பேட்ச், பேட்ச் ஆக தயார் செய்து வைத்துக்கொள்ளலாம். வருடம் முழுவதும் ஒரே மாதிரியான சுவையும் சத்தும் உள்ள தீவனத்தை நம்முடைய ஆடு மாடுகளுக்குக் கொடுக்கலாம். நூறு சதவீதம் வெளி இடுபொருள் எதுவும் இல்லாத இயற்கை முறை தயாரிப்பு.

7. தீவனம் மட்டும் உற்பத்தி செய்து, அதை தரமான சைலேஜாக மாற்றி மற்ற பண்ணைகளுக்கும் விற்பனை செய்யும் தொழில் வாய்ப்பு இதில் உள்ளது. தயாரிப்பில் கவனமாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர, வேறு எவ்வித உற்பத்தி ரகசியமும் இதில் இல்லை. எவருக்கு விற்பனை செய்வது என்பதையும் மிக எளிதில் கண்டறியலாம். கிராமப்புற இளைய தொழில்முனைவோருக்கு நல்லதொரு புதிய தொழில் வாய்ப்பு.

8. பன்னெடுங்காலமாக உள்ள தொழில்நுட்பம் என்றாலும், இப்போது எளிமையாகச் செய்வதற்கு ஏற்ற வடிவில் உள்ளதால், அபரிமிதமாக பசுந்தீவனம் கிடைக்கும்போது தயார் செய்து, தீவனப் பற்றாக்குறை காலங்களில் பயன்படுத்த அருமையான தொழில்நுட்பம் இந்த சைலேஜ்.

 

English Summary: Silage Making Published on: 08 November 2018, 11:55 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.