மாட்டுப் பண்ணை லாபகரமாக செயல்படுவதற்கு மாடுகளின் ஆரோக்கியம், உற்பத்தித் திறனுடன் மருத்துவச் செலவும் குறைவாக இருக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு (Dairy cows) பால் உற்பத்தித் திறன் இருந்தாலும் நச்சுயிரி, நுண்ணுயிரி மற்றும் ஒட்டுண்ணியால் உடல்நலம் பாதிக்கப்பட்டு பால் உற்பத்தி குறையும். சில நேரங்களில் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தும்.
தடுப்பூசி அவசியம்
நோய் எதிர்ப்புத் திறன் (Immunity) அதிகமுள்ள மாடுகள் மற்றும் கன்றுகள் தொற்று நோய்களால் பாதிக்கப்படுவதில்லை. பல நச்சுயிரி மற்றும் நுண்ணுயிரிகள் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக தடுப்பூசிகள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கால்நடை டாக்டர் ஆலோசனை படி உரிய நேரத்தில் தடுப்பூசி (Vaccine) போட வேண்டும்.
பால் கறக்கும் மாடு, சினை மாடு உட்பட பண்ணையிலுள்ள அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி தேவை. தடுப்பூசி போட்டால் பால் சுரப்பு குறைந்து விடும் என்பது தவறு. சினை மாடுகளில் கன்று விசிறி விடும் என்பதும் தவறான யூகம். கன்றுகளுக்கு சீம்பால் கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்புத் திறன் கிடைக்கிறது.
தீவனம்
தரமான நச்சுத் தன்மையற்ற தீவனம், போதுமான இடவசதியுடன் கூடிய சுகாதாரமான கொட்டகை இருக்க வேண்டும். தீவனம் (Fodder) மற்றும் தண்ணீர்த் தொட்டியைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். மாதம் ஒரு முறை தண்ணீர் தொட்டிக்கு சுண்ணாம்பு பூசி பாசி பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடிக்கும் நேரம் தவிர மீதி நேரங்களில் தண்ணீர்த் தொட்டியை மூடி வைக்கலாம். கொட்டகையிலிருந்து 300 அடி துாரம் தள்ளி உரக்குழி தோண்டி அதில் சாணத்தை கொட்டலாம். நோய்க்கிருமிகள் மற்ற பண்ணைகளிலிருந்தும் மாடுகளுக்கு பரவ வாய்ப்பிருக்கிறது. நோய் தாக்கிய பசுக்களை வாங்கி பண்ணைக்குள் ஒன்றாக விடக்கூடாது. எலி, பூனை உள்ளே நுழைவதை தவிர்க்க வேண்டும். புதிதாக மாடுகளை வாங்கும் போது கால்நடை (Liveatock) டாக்டர் மூலம் பரிசோதித்து வாங்குவது நல்லது. அவற்றை 15 நாட்கள் தனியாக வைத்துப் பராமரித்து நோய் இல்லையென்றால் பண்ணைக்குள் சேர்க்கலாம்.
சுத்தம் மிக அவசியம்
தீவனம் ஏற்றி வரும் வாகனங்கள், தீவன மூட்டை, பயன்படுத்தும் வாளி போன்றவற்றின் மூலம் பண்ணைக்குள் கிருமிகள் பரவலாம். பினாயில், பொட்டாசியம் பர்மாங்கனேட், பார்மலின், சுண்ணாம்புத் துாள், ப்ளீச்சிங் பவுடர் மூலம் தொழுவத்தையும், சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். கிருமிநாசினி (Gem killer) மருந்தை பயன்படுத்துவதற்கு முன்பு தரை, மாடு நிற்கும் இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். பண்ணையின் வாசலில் கிருமிநாசினி கலந்த தண்ணீரால் பாதங்களை நனைத்த பின் உள்ளே செல்வது நல்லது. பால் கறக்கும் போது தரையில் சிந்தினால் உடனடியாக கழுவ வேண்டும். பால் கறக்கும் முன்பும் கறந்த பின்பும் மடியை 0.5 சதவீத பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலால் கழுவ வேண்டும்.
கறவை முடிந்தவுடன் பால் இயந்திரத்தின் ரப்பர் பாகத்தை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பண்ணை மாடுகள் வெளியில் சென்று மேய்வதையும், மற்ற மாடுகளோடு கலப்பதையும் அறவே தவிர்க்க வேண்டும். வெளி மாடுகளையும் பண்ணைக்குள் நுழைய விடக் கூடாது. நோய் தாக்கிய பசுக்களை தனியாக வைத்து பராமரிக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு
- பேராசிரியர் உமாராணி
கால்நடை சிகிச்சை வளாகம்,
கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தேனி.
kamleshharini@yahoo.com
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வனவிலங்குகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த வனத்துறை! பலாக்காய்கள் வெட்டி அகற்றம்
கோழிகளுக்கு வெப்ப அயற்சியைத் தடுக்க குளிர்ந்த நீர் கொடுக்க வேண்டும்! ஆராய்ச்சி நிலையம் தகவல்
Share your comments