கறவை/ எருமை மாடுகளை தாக்கும் நுண்ணுயிரிகளை தடுப்பதற்கு முக்கிய வழிமுறை நோய் தடுப்பாகும். அதற்கு சரியான நேரத்தில் சரியான தடுப்பூசி போடுவது கறவை/ எருமை மாடுகளை நோய் தொற்றிலிருந்து பாதுக்காக்கும். பண்ணையாளர்கள் பொருளாதார இழப்பை தடுக்க தங்கள் பண்ணையில் உள்ள அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி போடுவது அவசியம்.
தடுப்பூசி போடுவதால் பால் உற்பத்தி குறையாது, கரு சிதைவு ஏற்படாது
தடுப்பூசி போட்டால் பால் குறையுமா?
பெரும்பாலும் கறவை மாடு / எருமை மாடு வளர்க்கும் விவசாயிகள் தங்கள் பண்ணையில் உள்ள கறவை பசு மற்றும் சினை மாட்டிற்கு தடுப்பூசி போடுவதை தவிர்த்து வருகின்றனர். அது மிகப்பெரும் தவறாகும். தடுப்பூசி போடுவதால் பால் குறையாது. அப்படியே குறைந்தாலும் இரண்டு நாட்களில் பால் கறவை மீண்டு வரும். அதேபோல் கருச்சிதைவும் ஏற்படாது. ஆரோக்கியமான மாடுகளுக்கு மட்டுமே தடுப்பூசி போட வேண்டும். சத்து குறைபாடு உள்ள மாடுகளுக்கு மட்டும் பால் கறவையின் அளவு மீண்டு வர நேரம் எடுக்கும். அதனால் அனைவரும் உங்கள் பண்ணையில் உள்ள அனைத்து வயது மாடுகளுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வது மிக மிக அவசியம்.
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் (NADCP):
கோமாரி / காணை நோய் தடுக்க மாடுகள், எருமை, செம்மறி ஆடு, ஆடு மற்றும் பன்றிகள் உட்பட 50 கோடிக்கும் அதிகமான கால்நடைகளுக்கும் கருச்சிதைவு நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் நோயை தடுக்க ஆண்டுதோறும் 3.6 கோடி கிடேரி கன்றுகளுக்கு மாடுகளுக்கும் தடுப்பூசி போடப்படவேண்டும் என்பது இந்த திட்டத்தின் நோக்கம்.
மேலே உள்ள இரண்டு நோய்களுக்கும் அரசாங்கமே இலவசமாக தடுப்பூசி போடுகிறது. மற்ற நோய்களுக்கான தடுப்பூசி உங்கள் ஊரில் உள்ள கால்நடை மருத்துவரின் ஆலோசனை படி போட்டுக்கொள்வது நல்லது. கோமாரி, சப்பை நோய் மற்றும் தொண்டை அடைப்பான் ஆகிய மூன்று நோய்களுக்கும் பன்முக தடுப்பூசி கிடைக்கின்றது. இதை போடுவதன் மூலம் மூன்று நோய்களுக்கான பாதுகாப்பு ஒரே தடுப்பூசியில் கிடைக்கும்.
முதல் முறையாக இப்பொழுது பரவி வரும் பெரியம்மை நோய் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான தடுப்பூசி தற்போது நம்மிடம் இல்லையென்றாலும் வருங்காலத்தில் இதற்கான தடுப்பூசி போடப்படும்போது அதையும் வருடம் ஒரு முறை போட்டு கொள்வது அவசியம்.
குறிப்பு:
- தடுப்பூசி போடும் நேரத்தில் மாடுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
- தடுப்பூசி போடுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் குடற்புழு நீக்கம் செய்வது அவசியம்.
- மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி போட வேண்டும்.
- தடுப்பூசி போட்ட விவரங்களை பதிவு செய்வது மிகவும் அவசியம்.
- குளிர் சங்கிலியில் பாதுகாக்கப்பட்ட தடுப்பூசி போடுவது நல்லது
- ஒவ்வொரு மாட்டிற்கும் தனி ஊசி பயன்படுத்தப்பட வேண்டும்.
கோமாரி தடுப்பூசி விழிப்புணர்வு பாடல் : https://youtu.be/R2G5870V5hw
தடுப்பூசி போட்டு!!! நோய தூர ஓட்டு!!!
தடுப்பூசி போடுவோம்!!! வாழ்வாதாரம் காப்போம்!!!
முனைவர் சா. தமிழ்குமரன்
(கால்நடை நண்பன் JTK)
கால்நடை மருத்துவர் / ஆராய்ச்சியாளர் /பண்ணை ஆலோசகர்
தொடர்புகொள்ள : kalnadainanban@gmail.com
மேலும் தகவலுக்கு: https://www.youtube.com/c/kalnadainanbanjtk
Share your comments