மீன் வளர்ப்பினை நண்ணீர், உவர்நீர் மற்றும் கடல்நீர் ஆகிய 3 வகை நீரிலும் மேற்கொள்ளலாம். நமது நாட்டில் உவர் மற்றும் கடல்நீரைப் பயன்படுத்தி இறால், நண்டுகள், கடற்பாசிகள், நுண்பாசிகள் போன்றவைகளை வளர்க்க இயலும்.
கெண்டை மீன்கள் பல்வேறு நோய்களுக்கு எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளவை. மேலும் இவை தாவரப் பொருட்கள், கழிவுகள் மற்றும் சிறிய விலங்கினங்களை உண்டு வாழக்கூடியவை. எனவே இவற்றை குறைந்த செலவில் அதிகளவு உற்பத்தி செய்யலாம்.
மீன் பண்ணை அமைக்க களி மண், வண்டல் மற்றும் மணல் கலந்த மண் வகைகள் ஏற்றவை. பாறைகள், அதிக மேடு பள்ளங்கள் இன்றி சிறிதளவு சாய்தளத்தோடு இருத்தல் வேண்டும். மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 9 வரை இருக்க வேண்டும்.
மீன் வளர்ப்புக் குளங்களை குறைந்தது 1/4 ஏக்கர் (1000 ச.மீ) பரப்பில் அமைக்கலாம். மீன்களை எளிதாக அறுவடை செய்வதற்கு செவ்வக வடிவ குளங்களே சிறந்தது.
மீன் குளங்களில் சுண்ணாம்பு இடுதல் நீருக்கு போதுமான கார மற்றும் அமிலத்தன்மையை அளிக்கவும், நச்சுயிரிகளை அழிக்கவும் உதவும். அதோடு நீரின் கலங்கல் தன்மையையும், பாசிப்படர்வுகளையும் குறைத்து நீரில் ஒளி ஊடுருவும் ஆழத்தை அதிகரித்தல் போன்ற பலன்களையும் தரும்.
மீன் பண்ணைகளில் களை அல்லது பகை மீன்களை அழிப்பதற்கு குளத்தில் பலமுறை இழுவலை கொண்டு இழுத்துத் தேவையற்ற மீன்களை அழிக்கலாம் அல்லது பிளீச்சிங் பவுடர், இலுப்பைப் புண்ணாக்கு போன்ற சில குறிப்பிட்ட மீன் (பூச்சிக்) கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.
நன்னீர் மீன் குளங்களில் நீரின் ஆழம் 1 மீ (4 - 5 அடி)க்கு அதிகமாக இருத்தல் வேண்டும். மீன்களின் வளர்ச்சி அதிகரிக்கும்போதும், வெப்பநிலை அதிகரிக்கும் போதும் நீரின் ஆழத்தை அதிகரிக்க வேண்டும்.
நன்னீர் மீன் வளர்ப்பில் நீரின் பச்சை நிறம் குறைந்து, ஒளி ஊடுருவும் ஆழம் அதிகரிப்பது, நீரில் இயற்கை உணவுகளின் அளவு குறைவதைக் காட்டும் அறிகுறி. இந்நிலையில் குளங்களுக்கு உரமிடுதல் அவசியம். ஒளி ஊடுருவும் ஆழம் 20 - 30 செ.மீ ஆக இருப்பது நல்லது.
மீன் வளர்ப்புக் குளங்களில் கோடை காலங்களிலும், தொடர்ச்சியாக மேகமூட்டம் இருக்கும்போதும். பிராணவாயு பற்றாக்குறை ஏற்படலாம். மழைக்காலங்களில் குளத்து நீரில் அமிலத்தன்மை ஏற்படலாம். இத்தகைய தருணங்களில் குளங்களுக்கு அதிக அளவில் அங்கக உரம் இடக்கூடாது.
மீன் குளங்களில் அல்லி, தாமரை போன்ற படரும் நீர்த்தாவரங்கள் அதிகமாக இருந்தால் சூரிய வெளிச்சம் கிடைக்காமல் இயற்கை உணவு உற்பத்தி குறையும் . எனவே அவற்றின் தண்டுகளை வெட்டி, இலைகளை கிழித்து விட்டால் புல் கெண்டை மற்றும் ரோகு இன மீன்களுக்கு உணவாக பயன்படும்.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments