நிலமற்றவர்களில் தொடங்கி பெரிய பண்ணையாளர்கள் வரை மேற்கொள்ளக் கூடிய ஓர் எளிய தொழில் ஆடு வளர்ப்பு. ஆடு வளர்ப்பில் இலாபம் அதிகரிக்கத் தீவன மேலாண்மை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
தீவனச் செலவு (Feed cost)
உற்பத்தி செலவில் 65 - 70 சதவீதம் தீவனத்திற்காக மட்டும் செலவிட நேரிடுகிறது. ஆகையால், தீவனத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியது கட்டாயமாகிறது.
தீவனத்தில் மாற்றம் தேவை (Change in feed is required)
ஆடுகளின் வயது, உற்பத்தித் திறன், அதன் பல்வேறு பருவங்களின் வளர்ச்சி வீதம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு ஊட்டச்சத்துகளின் தேவைக்கேற்பத் தீவனத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.
அவ்வாறு மாற்றம் செய்து சரிவிகித தீவனம் அளிக்கும் பொழுது உற்பத்தி செலவு குறைந்து ஆடு வளர்ப்பில் நல்ல லாபம் ஈட்டலாம்.
ஊட்டச்சத்துக்கள் (Nutrients)
ஆடுகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு எரிசக்தி, புரதச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, உயிர்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் தண்ணீர் மிக முக்கியமானவையாகும்.
உயிர்ச் சத்துக்கள் (Vitamins)
ஆடுகளின் வளர்ப்பு முறைக்கேற்ப அதன் வளர்ச்சி மற்றும் உற்பத்தி வேறுபடுகிறது. உதாரணமாக, மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் ஆடுகளுக்குத் தேவையான அளவிற்கு புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள் மற்றும் உயிர்ச் சத்துக்கள் கிடைப்பதில்லை. ஆகையால், வளர்ச்சி மற்றும் உற்பத்தி குறைகிறது.
அதேநேரத்தில் கொட்டில் முறையில் வளர்க்கப்படும் ஆடுகளுக்குப் பசுந்தீவனங்கள், உலர் தீவனங்கள், மர இலைகள் மற்றும் அடர் தீவனம் 150 முதல் 200 கிராம் அளவில் கொடுக்கும் பொழுது வளர்ச்சி மற்றும் உற்பத்தி அதிகரிக்கிறது.
உலர் தீவனங்கள் (Dry fodder)
பொதுவாக, ஆடுகள் அதன் உடல் எடையில் 3 - 5 சதவிகிதம் வரை உலர் பொருளைக் கொண்ட தீவன அளவினை உட்கொள்ளக்கூடியவை. ஆடுகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தித் திறன் அதன் வயது மற்றும் பருவத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது.
அதற்கேற்றவாறு தீவனத்தின் அளவும், ஊட்டச்சத்துக்களின் தேவையும் வேறுபடுகிறது . ஆகையால், ஆடுகளின் பருவத்திற்கு ஏற்றவாறு தீவனத்தின் அளவிலும் ஊட்டச்சத்திலும் மாற்றம் செய்து அளிக்கும் பொழுது, உற்பத்தித் திறன் மேம்படுவதோடு தீவனச் செலவினையும் குறைத்து பண்ணையை லாபகரமாக நடத்தலாம்.
பல்வேறு பருவங்கள் (Varieties)
-
பிறந்த குட்டிகள் தாயுடன் உள்ள குட்டிகள்.
-
தாய் இல்லா குட்டிகள்
-
வளரும் பருவக் குட்டிகள்
-
பருவமடைந்த பெட்டை ஆடுகள்
-
தாய் ஆடுகள்
-
பால் வற்றிய ஆடுகள்
-
இனப்பெருக்கத்திற்கான கிடாக்கள்
-
இறைச்சிக்கான கிடாக்குட்டிகள்
அடர் தீவனம் அவசியம்
ஆடுகளுக்கு பசுந்தீவனம், உலர் தீவனத்திலிருந்து உடல் பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்த போதிலும், சிறந்த உற்பத்திக்கு தேவையான கூடுதல் சத்துக்களைப் பெற அடர் தீவனத்தையும் அளிக்க வேண்டும்.
ஆடுகளுக்கான அடர் தீவனம் என்பது, ஆடுகளின் வயது, பருவம் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் மேலும், 14 -18 சதவீதம் புரதமும் , 65 - 75 சதவீதம் மொத்த செரிமான சத்துக்களும் கொண்டவாறு அருகாமையில் கிடைக்கும் மூலப் பொருட்களை கொண்டு குறைந்த செலவில் தயாரித்தல் வேண்டும்.
அடர் தீவனம் (Concentrated fodder)
எரிசக்தி மிக்கவை (High in energy)
மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், அரிசிக்குருனை, மரவள்ளிக் கிழங்கு மாவு, சர்க்கரை ஆலைக் கழிவு
புரதச்சத்து (Protein)
கடலைப் பிண்ணாக்கு, எள் பிண்ணாக்கு, சோயா பிண்ணாக்கு, தேங்காய் பிண்ணாக்கு, பருத்திக்கொட்டை பிண்ணாக்கு
எரிசக்தி (Energy)
அரிசி , கோதுமை தவுடு, உளுந்து நொய், பாசிப்பயறு நொய், துவரம் பொட்டு தூசு, கருவேல மரக்காய்கள், மரவள்ளிக்கிழங்கு திப்பி, தாது உப்புக்கலவை, சமையல் உப்பு.
மேலும் படிக்க...
சினை ஆடுகளுக்கானத் தீவன மேலாண்மை!
கோழிகளுக்கு வெப்ப அயற்சியைத் தடுக்க குளிர்ந்த நீர் கொடுக்க வேண்டும்! ஆராய்ச்சி நிலையம் தகவல்
பால் பண்ணை அமைக்க ரூ.1.75 லட்சம் மானியம்- மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!!
Share your comments