கால்நடை வளர்ப்பில் முக்கியப் பங்கு வகிப்பது கால்நடைகளின் ஆரோக்கியம். இது அவற்றின் சுத்தம், தகுந்த தீவனம் மற்றும் நோய்ப்பராமரிப்பு மட்டுமல்லாமல் கொட்டகையின் பராமரிப்போடும் இரண்டறக் கலந்தது.
எனவே பின்வரும் கொட்டகை பராமரிப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், கால்நடைகளின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும். நோய்ப்பராமரிப்புச் செலவும் குறையும். கூடுதல் வருமானமும் ஈட்டலாம்.
1. தினமும் கொட்டகையின் தரைப்பகுதியினை நன்கு தண்ணீர் ஊற்றிக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். சாணம் மற்றும் வேறு கழிவுளை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டியது அவசியம்.
2. வாரம் இருமுறையாவது கிருமி நாசினி மருந்து கொண்டு கொட்டகையின் தரையை சுத்தம் செய்ய வேண்டும்.
3. சூரிய ஒளி மிகச்சிறந்தக் கிருமி நாசினி என்பதால், கொட்டகையின் அமைப்பு, ஒரு நாளில் கொஞ்ச நேரமாவது சூரிய ஒளி நன்கு படும்படி இருக்க வேண்டும்.
4. வாரம் ஒரு முறை கொட்டகையின் சுற்றுப்புறச் சுவரை சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் சுவற்றின் விரிசலில் உள்ள இடைவெளிகளில் உண்ணிகள் ஒளிந்து கொண்டு கால்நடைகளின் உடம்பில் ஏறி பலவித நோய்களுக்கு வித்திடும்.
5. கொட்டகையின் சுற்றுப்புறத்தை இரு வாரங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். சுண்ணாம்புத் தூள் 1 கிலோ ப்ளீச்சிங் தூள் (Bleaching powder)100 கிராம் கலந்த கலவையை கொட்டகையைச் சுற்றியுள்ள இடங்களில் வாரம் ஒரு முறை தூவி விட வேண்டும்.
6. வருடம் ஒரு முறை கொட்டகையின் சுவர்களுக்கு சுண்ணாம்பு அடிக்க வேண்டும். கல் சுண்ணாம்பு வாங்கி ஊற வைத்து சுவர்களுக்கு சுண்ணாம்பு அடித்தால் தான் சுண்ணாம்பு கிருமி நாசினியாக செயல்பட்டு கொட்டகையில் உள்ள கிருமிகளை அழித்து விடும்.
7. பண்ணையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்படும் பொழுது, கொட்டகையின் தரை மற்றும் சுவற்றின் 1.5 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதி, தீவனத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றைக் கவனத்தோடு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு,
டாக்டர். இரா.உமாராணி,
பேராசிரியர்,
கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம்,
திருப்பரங்குன்றம்,
மதுரை- 625 005 என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
NLM: எருமைப்பண்ணையாராக மாற விருப்பமா? 50% வரை மானியம் அளிக்கிறது மத்திய அரசு!
Share your comments