கறவை மாடு வளர்ப்பில் கன்று ஈன்ற பின்பு பசுக்களை பராமரிப்பதே லாபகரமான கால்நடை வளர்ப்பாகும். கன்று ஈன்றவுடன் காய்ந்த தரையிலோ அல்லது வைக்கோல் (Straw), புல் மற்றும் கோணிப்பையைப் பரப்பி கன்றினை படுக்க வைக்க வேண்டும். தாய் நாவால் கன்றை நக்கி சுத்தம் செய்யும்போது தாய் சேய்க்கு பிணைப்பு ஏற்படும். நாமாக கன்றினைத் துணி கொண்டு துடைக்கவோ, கால்களில் உள்ள குளம்புகளைக் கிள்ளி எடுக்கவோ கூடாது. நக்கும் போது கன்றின் உடலை சூடேற்றுவதால் நெஞ்சுப் பகுதி உலர்ந்து கன்று எளிதில் மூச்சுவிட முடியும். மூக்கில் உள்ள சளியை மட்டும் துணியால் அகற்றவேண்டும்.
பராமரிக்கும் முறை:
தண்ணீரில் வேப்ப இலை (Neem), மஞ்சள் துாள் (Turmeric) கலந்து வெதுவெதுப்பான சூட்டில் பசுவின் பின்பகுதியை கழுவ வேண்டும். இதனால் மடி மற்றும் பிறப்புறுப்பில் நோய்த் தொற்று ஏற்படுவதை தடுக்கலாம். கன்று ஈன்ற அரை மணி நேரத்திற்குள் பால் குடிக்க செய்து அதன்பின் மடியில் உள்ள சீம்பாலை கறந்து விட வேண்டும். சீம்பாலின் கால் பாகம் மடியிலேயே இருந்தால், பால் காய்ச்சல் என்னும் நோயில் இருந்து பாதுகாக்கலாம். வெதுவெதுப்பான நீர், ஜீரணிக்கக்கூடிய கூழ் அல்லது கஞ்சி, தேவையான அளவு உலர் தீவனம் (Fodder) கொடுக்க வேண்டும். கன்று ஈன்றவுடன் கருப்பை சுருங்குவதால் இரைப்பை விரிவடையும். இந்தநிலையில் அடர்தீவனம் கொடுத்தால் இரைப்பையில் தங்கி அஜீரண கோளாறு ஏற்படும்.
கருப்பை நன்கு சுருங்கி அதில் உள்ள திரவத்தை வெளியேற்றுவதற்கு எள்ளுப்பிண்ணாக்கு ஒரு நாளைக்கு அரை கிலோ முதல் முக்கால் கிலோ வீதம் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு கொடுக்கலாம். இல்லாவிட்டால் மருந்து கடைகளில் கிடைக்கும் எர்கோமெட்ரிக்ஸ் (Ergometrics) மருந்தை கால்நடை டாக்டர் ஆலோசனை பெற்று கொடுக்கலாம்.
நஞ்சுக் கொடி பராமரிப்பு
கன்று ஈன்ற 4 மணி முதல் 8 மணி நேரத்திற்குள் நஞ்சுக் கொடி விழாவிட்டால் கால்நடை டாக்டரை (Veterinary doctor) அணுக வேண்டும். தொங்கிக் கொண்டிருக்கும் நஞ்சுக் கொடியில் எடை அதிகமான பொருட்களை கட்டக்கூடாது. நஞ்சுக் கொடி விழாவிட்டாலும் பால் கறக்கலாம். இல்லாவிட்டால் மடி நோய் ஏற்பட்டு வலியினால் பசுக்கள் தீவனம் (Fodder) உண்ணாமல் பால் குறைய வாய்ப்புள்ளது. கவனக்குறைவால் நஞ்சுக்கொடியை பசு உண்டால் அஜீரணக்கோளாறு ஏற்பட்டு ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். பயப்பட தேவையில்லை. கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி சுருங்கி முழுமையாக மூட 20 முதல் 25 நாட்கள் ஆகும். கொட்டகை சுத்தமாக இல்லையெனில் நோய்க்கிருமிகள் கர்ப்பப்பையைத் தாக்கி புண் ஏற்படும். புண் ஏற்பட்டால் தீவனம் உண்ணாமல் காய்ச்சல் ஏற்பட்டு பால் குறையும். கர்ப்பப்பையிலிருந்து துர்நாற்றம் வீசுவதோடு ஈக்கள் மொய்க்கும். இதற்கு மருத்துவ சிகிச்சை அவசியம்.
- உமாராணி
பேராசிரியர்
கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம்,
தேனி
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பசுக்களைப் பாதுகாக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பசு அறிவியல் தேர்வு!
Share your comments