கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் வாங்குவோரின் ஆதார் அட்டைத் தொடர்பானத் தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ரவுடிகள் கைது (Rowdies arrested)
தமிழகத்தில் சமீபகாலமாகக் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் சமீபத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பல்வேறு ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தடுப்பு நடவடிக்கை (Preventive action)
தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, காவல் துறை சார்பில் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்விரோதக் கொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து மாநில அளவில் எடுக்கப்பட்ட ஆப்பரேஷன் டிஸ்ஆர்ம் என்னும் தேடுதல் வேட்டையில் சுமார் 3325 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 1110 கத்திகள் மற்றும் 7 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கண்காணிக்க நடவடிக்கை (Action to monitor)
இதன் தொடர்ச்சியாக கத்தி, வாள், வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பை கண்காணிக்கவும், இது போன்ற ஆயுதங்களை தவறானவர்கள் கைகளுக்கு செல்வதைக் கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு காவல் ஆணையர் களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்க அறிவித்துள்ளார்.
-
அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பவர்கள், தயாரிக்கும் இடங்களை கண்டறிய வேண்டும்.
-
அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்குபவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆதார் எண், என்ன காரணத்திற்காக வாங்குகிறார்கள் போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
-
விவசாயம், வீட்டு உபயோகம் இல்லாமல் மற்ற காரணங்களுக்காக கத்தி போன்ற ஆயுதங்களை அடையாளம் தெரியாதவர்களிடம் விற்பனை செய்யக்கூடாது.
-
கண்காணிப்புக் கேமராக்கள் கடை மற்றும் பட்டறைகளில் பொருத்தப்பட வேண்டும்.
-
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது சிரமம் ஏற்பட்டால் காவல்துறை உதவி செய்ய வேண்டும்.
-
குற்றவாளிகள் பற்றியத் தகவல்களை காவல்துறைக்கு தெரிவிப்பவர்களுக்கு தக்க வெகுமதி வழங்க வேண்டும்.
இந்த அறிவுரைகளை காவல்துறை தலைமை இயக்குனர் மற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க...
எங்களையும் தத்து எடுத்துக்கோங்க ப்ளீஸ்!
பண்டிகை காலம் வந்தாச்சுங்கோ- வீட்டுக் கடன் வாங்க வங்கிகள் தரும் ஆஃபர் லிஸ்ட்!
Share your comments