தமிழகத்திம் முழுவதிலும் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை இயற்கை உரமாக மாற்றி அப்பகுதி மக்களுக்கு மலிவு விலையில் விற்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பகுதியில் உள்ள 15 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல் பட்டு வருகிறது. இதற்காக பேரூராட்சிக்கு சொந்தமான நிலத்தில் உர கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. 2 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கிடங்கில் நாள்தோறும் 2 டன் குப்பை துப்பரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. இவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. மேலும் உணவகங்களில் இருந்தும் உணவு கழிவுகள், காய்கறி கழிவுகள் போன்றவை சேகரிக்கப் படுகின்றன. மக்கும் குப்பைகளின் மீது, மாட்டு சாணம் மற்றும் கரைசல் கலந்து, 45 நாட்களில் இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. அதன் பின் இயற்கை உரத்தை மறு சுழற்சி செய்து, மண் புழு உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரங்களை உலர செய்த பின், பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும், விற்பனை செய்கின்றனர்.
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பகுதியில், தினந்தோறும் 2 டன் குப்பையும், வார சந்தை நாட்களில் சுமார் 2.5 டன் வீதமும் குப்பை சேகரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், சாகுபடி பணிகள் மேற்கொள்ள வாங்கி செல்கின்றனர். சில்லரை விற்பனையில் கிலோ 5 ரூபாய் எனவும், மொத்த விற்பனையில் அதாவது டன் கணக்கில் வாங்குவோர்க்கு அதை விட குறைத்தும் வழங்கப்படுகிறது.
Share your comments