தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தேனீ வளர்ப்பதில் ஆர்வமுள்ள விவசாயிகள், தேனீக்கள் வளர்க்க முன்வரலாம் என வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு தேனீ வளர்க்க முழு மானியம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
தேனீ வளர்ப்பு என்பது அதிக முதலீடு இல்லாமல் தொடர்ந்து வருமானம் தரக்கூடிய உபத்தொழிலாகும். தேனீ வளர்ப்பதன் மூலம் விவசாய நிலங்களில் அயல் மகரந்த சேர்க்கை நடைபெற்று வேளாண் உற்பத்தியும் அதிகரிக்க உதவுகிறது. ஒரு ஏக்கருக்கு சராசரியாக 810 தேனீ பெட்டிகளை வைத்து தேனீ வளர்ப்பை தொடங்கலாம். தரையில் இருந்து மூன்று அடி உயரத்தில் பெட்டியை வைக்க வேண்டும்.
பொதுவாக ஒரு பெட்டியில் ராணி தேனீ ஒன்றும், நூற்றுக்கணக்கான ஆண் தேனீக்களும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைக்கார தேனீக்களும் காணப்படும். அயல் மகரந்த சேர்க்கை நடைபெறுவதில் தேனீக்களின் பங்கு மிக முக்கியமானது.
எண்ணெய் வித்து பயிர்களான, எள், சூரியகாந்தி, கடுகு மற்றும் தென்னை, காய்கறி பயிர்களில் கத்தரி, வெண்டை, தக்காளி, கொத்தமல்லி, பூசணி பயிர்கள், பழ வகை பயிர்களில் மா, கொய்யா, மாதுளை, அத்தி, பப்பாளி பயிர்களில் மகரந்த சேர்க்கை நடைபெற தேனீக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.
தேனீக்களில் நான்கு வகைகள் உள்ளன, அவை மலைத்தேனீ, கொம்புத்தேனீ, இந்திய தேனீ, மற்றும் இத்தாலிய தேனீ எனப்படும். அதில் மலைத்தேனீ மட்டுமே அளவில் பெரியவை. இவற்றின் மூலம் வருடத்திற்கு அதிகபட்சமாக 60 கிலோ தேன் கிடைக்கும். இவை மகரந்தச் சேர்க்கைக்கு அதிகம் உதவுகிறது. கொம்புத் தேனீக்கள் இடம் விட்டு இடம் பெயரும் தன்மை கொண்டவை என்பதால் வளர்ப்பதற்கு ஏற்றவை அல்ல. இந்திய தேனீக்கள் பெட்டிகளில் வளர்க்க தகுந்த தேனீக்கள். இவை இடம் விட்டு இடம் பெயரும் தன்மையற்றது. இவற்றின் மூலம் வருடத்துக்கு 5 முதல் 10 கிலோ தேன் கிடைக்கும்.
தேனீ வளர்ப்பதில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு முழு மானியம் மற்றும் அதற்கான பெட்டிகளும் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
நன்றி: அக்ரி டாக்டர்
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments