மருத்துவச் செலவுகளுக்கு, குடும்பத்தினரது எதிர்காலத்துக்கு, விபத்துகளுக்கு, இயற்கைப் பேரிடர்களுக்கு எல்லாம் காப்பீடு (Insurance) வந்துவிட்டது. வேலையிழப்பு (Job loss), வருவாய் இழப்பு ஆகிய சூழ்நிலைகளை எதிர்கொள்ள, ஒரு காப்பீடு வந்துவிட்டது.
வேலையின்மை உயர்வு:
கொரோனா (Corona) கொள்ளை நோயும், ஊரடங்கு (Lockdown) உத்தரவுகளும் பல நிறுவனங்களை கடுமையாகப் பாதித்துள்ளது. அதனால், ஏராளமான பணி நீக்கங்களும் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு, ஜனவரி முதல் மார்ச் வரையான நான்காம் காலாண்டில், இந்திய நகர்புறங்களில் வேலையின்மை (Unemployment), 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள், 8.7 சதவீதம் பேர் வேலையற்றிருக்க, பெண்களோ, 10.5 சதவீதம் பேர் வேலையின்மையால் தவிக்கின்றனர்.இது கொரோனாவுக்குச் சற்று முன்பு உள்ள நிலை.
வேலையிழப்பு, வருவாய் இழப்பு காப்பீட்டுப் பாலிசி
கடந்த, 9 மாதங்களில் நிலைமை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இப்போது தான் படிப்படியாக பல துறைகள் மீண்டு வருகின்றன. இந்நிலையில் தான், காப்பீட்டு நிறுவனங்கள் (Insurance Company) ஒரு புதிய பாலிசியை அறிமுகம் செய்துள்ளன. அதற்கு, ‘வேலையிழப்பு, வருவாய் இழப்பு காப்பீட்டுப் பாலிசி’ என்று பெயர். பொதுவாக இதுநாள் வரை இந்தக் காப்பீடு தனியாக விற்கப் பட்டதில்லை.
இரண்டு அம்சங்கள்
- பணிநீக்கம், ஆட்குறைப்பு, செலவினங்களைக் குறைத்தல் ஆகிய காரணங்களுக்காக, பணியில் இருந்து விலக்கப் படுபவர்களுக்கு உரியது. இவர்கள் வாங்கியிருக்கக்கூடிய பல்வேறு கடன்களின் இ.எம்.ஐ.,யை (EMI) அடுத்த மூன்று மாதங்களுக்குச் செலுத்துவதற்குத் தேவையான தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.
- ஏதேனும் அசம்பாவித சம்பவங்களால், பகுதியளவோ, முழுமையாகவோ உடற்குறைபாடு அல்லது மரணமோ நிகழ்ந்துவிட்டால், அந்த பாலிசிதாரருக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை, வாராந்திர வருவாய் (Weekly income) வழங்கப்படும்.
வரிவிலக்கு:
இந்த பாலிசிகளை, மாத சம்பளதாரர்களும், சுயதொழில் செய்வோரும் வாங்கலாம். பாலிசிக்கு செலுத்தும் பிரிமியத்துக்கு, ‘80 டி பிரிவின்படி வரிவிலக்கும் பெற முடியும். இந்த காலகட்டத்துக்கு மிகவும் தேவையான பாலிசியாக இது அறிமுகமாகியிருக்கிறது. மூன்று மாதத் தொகையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற கேள்வி எழத்தான் செய்யும். ஆனால், வேலையிழப்பு என்பது திடீர் அதிர்ச்சி. பல நிறுவனங்களில், மூன்று மாதச் சம்பளம் வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவர். வேறு சில தனியார் நிறுவனங்களில், எந்தவிதமான பணிப் பாதுகாப்பும் இல்லாத நிலையும் உள்ளது. அத்தகையவர்களுக்கு இந்த பாலிசி நிச்சயம் உதவும். எஸ்.பி.ஐ., ஜெனரல், ஸ்ரீராம் ஜெனரல், யுனிவர்சல் சம்போ, ஆதித்ய பிர்லா ஆகிய நிறுவனங்கள் இந்தப் புதிய வகை பாலிசியை வழங்க முன்வந்துள்ளன. அலைகடலில் தத்தளிக்கும்போது, பிடித்துக் கொள்ளும் சிறு துரும்பாக, இந்தக் காப்பீடு விளங்கும் என்பதே நம்பிக்கை.
மேலும் விவரங்களுக்கு
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
9841053881
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சிலிண்டர் புக் செய்ய மிஸ்டு கால் வசதி! இண்டேன் அறிமுகம்!
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணையவதற்கு, ரோட்டரி கிளப் இலவச உதவி! பெற்றோர்களுக்கு அழைப்பு!
Share your comments