பணத்தை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்வரைதான் நிம்மதி. அதே பணம் நம்மைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிட்டால், நரகத்தை நாம் அனுபவிக்க நேரிடும் என்பதற்கு, அந்த ஆட்டோ ஓட்டுநரே எடுத்துக்காட்டு. லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு விழுந்தது தற்போது இவருக்கு வினையாக மாறியிருக்கிறது.
கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி விற்பனை செய்த லாட்டரியை வாங்கிய அனுப் என்ற ஆட்டோஓட்டுநருக்கு, ரூ.25 கோடி பரிசு விழுந்தது.
ஒரே நாளில் கோடீஸ்வரரான அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. அனுப்புக்கு வரிபிடித்தம் போக சுமார் ரூ.15 கோடியே 75 லட்சம் பணம் கிடைக்கும் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து அவர் பரிசு விழுந்த லாட்டரி சீட்டை வங்கியில் டெபாசிட் செய்தார். பின்னர் அதனை கொண்டு வீடு கட்டுவேன், ஏழைகளுக்கு உதவுவேன் எனக்கூறினார். இவரது பேட்டி வைரலான பிறகுதான் தொடங்கியது, பிரச்னை.
நச்சரிக்கும் மக்கள்
மருத்துவ செலவிற்கு உதவி, கல்விக்கு உதவி என தினமும் அனுப்பிடம் உதவி கேட்டு ஏராளமானோர் அவரது வீட்டுக்கு வரத்தொடங்கினர்.
இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் பணம் கேட்டு மிரட்டத் தொடங்கினர்.
இதனால், வீட்டைவிட்டு வெளியே வரவே பயந்த அனுப், தனது வீட்டை பூட்டிவிட்டு சகோதரியின் வீட்டில் மறைந்து வாழ்கிறார்.
வீடியோவில் குமுறல்
தலைமறைவு வாழ்க்கை குறித்து அவர், ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ரூ.25 கோடி பரிசு விழுந்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்போது அதை எண்ணி மிகவும் மனம் வருந்துகிறேன். பரிசு பணம் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை. அதற்குள் ஒவ்வொருவரும் என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். வெளியே சென்றால் என்னை அடையாளம் கண்டு கொண்டு ஒவ்வொருவரும் பணம் கேட்கிறார்கள். இதற்கு அந்த பரிசு விழாமலேயே இருந்திருக்கலாம்.
நிம்மதியே போச்சு
லாட்டரியில் 3-வது அல்லது 4-வது பரிசு விழுந்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். இப்போது என் நிம்மதியே போச்சு. இவ்வளவு பெரிய தொகைக்கு வரி செலுத்துவது எப்படி? அதனை எவ்வாறு நிர்வகிப்பது? என்பது கூட எனக்கு தெரியாது. இதற்காக தொழில் வல்லுனர்களின் ஆலோசனையை கேட்டுள்ளேன். இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார். இதற்கிடையே கேரள அரசு முதல் பரிசு பெற்ற அனுப்புக்கு பரிசு பணத்தை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்த பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க...
அதிவேகமாக பரவும் ஃபுளூ வைரஸ் - தற்காத்து கொள்வது எப்படி?
ஓய்வூதிதாரர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு- 10 நாட்கள் மட்டுமே அவகாசம்!!
Share your comments