![Beautiful Paddy](https://kjtamil.b-cdn.net/media/5229/paddy-field.jpg?format=webp)
தமிழகத்தில் நெல் சாகுபடி டெல்டா மாவட்டம் மட்டுமல்லாது, மற்ற மாவட்டங்களிலும் பரவலாக நடை பெற்று வருகிறது. தற்போது திருவள்ளூர் பகுதியில், நவரை, சொர்ணவாரி மற்றும் சம்பா ஆகிய 3 பருவங்களில் விவசாயிகள் நெல் பயிரிட்டு வருகின்றனர். நெல் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் விதைப்பண்ணை விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நெல் விதைகள் வழங்குவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
விதைப்பண்ணைகள் பொதுவாக கருவிதைகள் மற்றும் ஆதார விதைகளைக் கொண்டு விதைப்பெருக்கம் செய்து, வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்து வருகிறது. விதைப்பண்ணை விவசாயிகள், நிலங்களில் விதைப்பண்ணை அமைத்து சான்று விதைகளை பெருக்கம் செய்து மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தரமான சான்றுபெற்ற விதைகளை விநியோகம் செய்வதே முக்கிய பணியாகும். அந்த வகையில் தற்போது, திருவள்ளூரை அடுத்த கொழுந்தளூர் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் விதைப்பண்ணையானது 5,320 கிலோ நெல் விதையினை ஒவ்வொரு வட்டார வேளாண்மை வளர்ச்சி அலுவலகத்துக்கும் அனுப்பி வருகிறது.
![Traditional Paddy strorage](https://kjtamil.b-cdn.net/media/5232/paddy-storage.jpg?format=webp)
விதைப் பண்ணை மையங்கள் மூலம் பருவத்துக்கு ஏற்ற நெல் விதைகள் பயிரிட்டு, அறுவடை செய்து, அவற்றை சுத்திகரித்து 100 சதவீதம் முளைப்புத்திறன் கொண்ட திறன் மிகுந்த, களவான் இல்லாத தரமான நெல் விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
விதை நோ்த்தி செய்யப்பட்டு நெல் விதைகள் கடம்பத்தூர் வட்டார வேளாண்மை வளர்ச்சி அலுவலக கிடங்கிற்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விதைகள் விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயிகள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட விதை கிராம விவசாயிகளுக்கு தேசிய ஊரக வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மூலம் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளது. மற்ற வேளாண்மை வளர்ச்சி அலுவலகத்துக்கும் விதைகளை அனுப்பி வைக்கும் பணி நடை பெற்று வருகிறது என விதைப்பண்ணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share your comments