பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நடப்பாண்டு 2019-20 ராபி பட்டத்துக்கு காப்பீடு செய்யுமாறு சீர்காழியில் வாழை விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அணுகி விவரங்களை பெறலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் தற்போது சீர்காழி சரகத்தில் 4 கிராமங்கள், திருவெண்காடு சரகத்தில் 6 கிராமங்கள், வைத்தீஸ்வரன் கோயில் சரகத்தில் 5 கிராமங்கள் வாழை காப்பீட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியை சார்ந்த வாழை சாகுபடி விவசாயிகள் இயற்கை சீற்றங்கள் மற்றும் நோய், பூச்சிகள் தாக்குதலால் ஏற்படும் இழப்பிடுனை ஈடுசெய்ய பயிர் காப்பீடு செய்யலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. வாழைக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.3,065 பிரீமியம் செலுத்த வேண்டும்.
பயிர் காப்பீடு செய்து கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலோ அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலோ அல்லது பொது சேவை மையத்திலோ காப்பீடு செய்து கொள்ளலாம். பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் பிப்ரவரி 28ம் தேதி ஆகும். எனவே வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Share your comments