வரும் ஜனவரி 3ம் தேதி முதல் ஒழுங்குமுறை விற்பனைக் கூட மையத்தில் பருத்தி ஏலம் நடைபெறும் என, மதுரை மாவட்ட வேளாண் விற்பனைக் குழு செயலாளர் தெரிவித்துள்ளார். மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் இவற்றில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
தற்போது மதுரையை சுற்றியுள்ள கள்ளிக்குடி, தே.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, சேடபட்டி ஆகிய பகுதிகளில் பருத்தி அறுவடை நடைபெற்று வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக நல்ல விலை கிடைக்கவில்லை என்று கூறப் படுகிறது. எனவே, இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் மறைமுக ஏல முறையில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மதுரை மாவட்டம், தேனி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டங்களின் வியாபாரிகள் இவற்றில் கலந்து கொள்வதால் நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
விவசாயிகள் நலனுக்காக ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பருத்தியை எவ்விதக் கட்டணமுமின்றி எடை போட்டு கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் குடியாத்தம் பகுதியில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில், காட்பாடி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பருத்தி ஏல விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share your comments