கடலூர் மாவட்டத்தில் வரும் 28ம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரை கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. முதலாவது சுற்றில் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளது. மாவட்டத்தை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறும். இதில் 3 லட்சத்திற்கும் அதிகமான பசுக்கள், எருமையினங்கள் ஆகியவற்றிற்கு தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ள பட உள்ளது. இம்முகாமிற்காக 90 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
பொதுவாக கால்நடைகளை தாக்கும் தொற்று நோய்களில் மிக முக்கியமானது கோமாரி நோயாகும். வைரஸ் கிருமிகளால் உண்டாகும் இந்நோயானது கால் மற்றும் வாய் காணை போன்றவற்றை தாக்கும். இதனால் வாயிலும், நாக்கிலும் கொப்புளங்கள் ஏற்படுவதுடன், எச்சிலானது கம்பி போன்று வழிந்து கொண்டே இருக்கும். காலின் குளம்புப் பகுதியில் புண்கள் தோன்றி கால் முழுவதும் வீக்கம் காணப்படும். இதனால் பால் குறைதல், சினை பிடிப்பதில் சிரமம், கருச்சிதைவு போன்றவை ஏற்படும். அரசால் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளில் கோமாரி ஒன்றாகும். அட்டவணையின் படி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இத்தடுப்பூசி மேற்கொள்ளப் படும். ஆண்டுக்கு இருமுறை தடுப்பூசி போடுவது அவசியம்.
கோமாரி நோய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கால்நடை மருத்துவர்கள் தேவையான தகவல்களை தருவார். மேலும் விவசாயிகள் தங்களது கால்நடைகளை மருத்துவர்கள் குறிப்பிடும் தேதியில், குறிப்பிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி போட வேண்டும் என தெரிவித்தார்.
Share your comments